Monday, October 5, 2015

கள்ளர், மறவர், அகமுடையார் சட்ட அணி


சொந்தங்களே, தமிழகத்தின் வரலாற்றில் நீங்கா இடம்பெற்றுள்ள சமுதாயம் முக்குலத்தோர் என்றழைக்கப்படும் கள்ளர், மறவர், அகமுடையார் ஆவர். போர்க்குடிகளாய், ஆட்சியாளர்களாய், தமிழையும், தமிழ் மண்ணையும் பாதுகாத்து, தமிழ் மக்களை அரவணைத்துச் சென்ற சமுதாயம் இந்த முக்குலம். இப்படி தமிழகத்தின் ஆணிவேராக உள்ள இந்தச் சமுதாயம் இன்று எடுப்பார் கைப்பிள்ளையாக, ஏனென்று  கேட்பாரற்ற, அதிகாரமற்ற சமுதாயமாக இருக்கிறது.

சுதந்திர இந்தியாவில் முக்குலத்தோர் பல்வேறு அமைப்பு ரீதியான, சமூக ரீதியான, சட்ட ரீதியான ஒதுக்குதல், புறக்கணிப்பு, தாக்குதல், ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இதுபோன்ற புறக்கணிப்பு, தாக்குதல், ஒடுக்குமுறைகளை சமாளிக்க ஜனநாயக ரீதியிலான அரசியலமைப்பின் கீழாக, ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு வலுவான சட்ட அமைப்பு தேவைப்படுகிறது.

சட்ட அமைப்பு ஏன்?

நமது சமுதாயத்திற்காக பல்வேறு அறக்கட்டளைகள், சங்கங்கள், அரசியல் கட்சிகள் உள்ளன. இருந்தாலும் பல நேரங்களில் நாம் நமது உரிமைகளை பாதுகாக்க நம்மிடம் போதுமான பலம் வாய்ந்த அமைப்பு இல்லை என்ற மனநிலையே ஏற்படுகிறது. பல நேரங்களில் சட்ட விஷயங்களில் கவனம் செலுத்த போதுமான அமைப்புகள் இல்லாத நிலையே உள்ளது. அவ்வாறான அமைப்பு இல்லாதபோது நாம் நமது பிரச்சனைகளை அரசாங்கத்திடம், அரசியல் கட்சிகளிடம் முறையாக முறையிட முடியாதவர்களாக இருக்கிறோம்.

அது மட்டுமல்லாமல் நமது சமுதாயம் எங்கெல்லாம் சட்ட ரீதியான பின்னடைவைச் சந்திக்கிறது, அதை எப்படியெல்லாம் சரி செய்ய வேண்டும் என்பனவற்றை பரிசீலனை செய்து அவற்றை சீர் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. பல நேரங்களில் நமது மக்களுக்கு சரியான சட்ட வழிகாட்டுதல் இல்லாமலிருக்கிறது. எனவே இதுபோன்ற பணிகளை செவ்வனே செய்ய ஒரு சட்ட அமைப்பு அவசியமாகிறது.

அரசாங்க ஒடுக்குமுறை - துப்பாக்கிச் சூடு

ஆங்கிலேய அரசாங்கம் தொடங்கிய நம்மீதான ஒடுக்குமுறை இன்னமும் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து வருகிறது. இன்றைய அரசாங்கங்களும் நம்மை ஏதாவது ஒரு வழியில் ஒடுக்கி வருகின்றன. அந்த அரசாங்க ஒடுக்குதலை சமாளிக்க நமக்கு வலிமையான சட்ட அமைப்பு தேவை.

ஆங்கிலேயர் நம்மை ஒடுக்க நம்மீது நடத்திய அரச பயங்கரவாதத்தை வரலாறு விவரிக்கிறது. அவர்களை தொடர்ந்து அமைந்த அரசுகளும் வித விதமான ஒடுக்குமுறைகளை நம்மீது கட்டவிழ்த்து விட்டு வருகின்றன. குறிப்பாக இந்த அரசுகள்  கேட்பாரற்ற, விசாரணையற்ற, நீதித்துறைக்கு அப்பாற்பட்ட துப்பாக்கிச் சூடுகளை அரங்கேற்றி வருகின்றன.

உண்மையில் சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாத வன்முறையாளர்கள், ரவுடிகள், கொலையாளிகள், சமூக விரோத, தீய சக்திகளை இறுதி நடவடிக்கையாக துப்பாக்கிச் சூட்டை நடத்தி ஒழித்துக் கட்டுவதை நாம் வரவேற்கிறோம். ஆனால் அது அரசாங்க நடவடிக்கையின் உச்சகட்ட நிகழ்வாகவே இருக்க வேண்டுமே ஒழிய, வேண்டாத நபர்களை, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களை, தான் விரும்பும் ஒருசாரரை திருப்திப்படுத்த, அல்லது அரசியல் காரணங்களுக்காக போலியான மோதல்களை (என்கவுன்ட்டர்) நடத்துவதை நாம் முற்றிலுமாக கண்டிக்கிறோம். இது நாகரீக சமுதாயத்தை தவறாக வழிநடத்தும், தமிழர்களின் ஜனநாயக அரசியலை குழிதோண்டி புதைப்பதாக அமையும்.

எனவே இதுபோன்ற துப்பாக்கிச் சூடுகளை நாம் வன்மையாக தடுக்க வேண்டியுள்ளது. அதற்கு நமக்கு ஒரு வலிமையான சமுதாய சட்ட அமைப்பு தேவைப்படுகிறது. எனவே நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள நமக்கான சட்ட அமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது.

வன்கொடுமைச் சட்டத்தை தவறாக பயன்படுத்துதல்

பல நூற்றாண்டுகளாக இந்தியா முழுவதும் தலித் என்று அழைக்கப்படும் அட்டவணை  சாதியினர் பல்வேறு ஒடுக்குமுறை, இன்னல்களுக்கு ஆளானதை கருத்தில் கொண்டு சுதந்திர இந்தியாவில் அந்த சாதியினருக்கு பாதுகாப்புத் தரும் வகையில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவர்கள் வாழ்வில் மற்ற பொது மக்களுக்கு இணையான முன்னேற்றத்தைப் பெற இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதை அனைத்து சமுதாயத்தினரும் வரவேற்கின்றனர். அவர்களின் பிரதிநிதிகள் தொடர்ந்து அதுபோன்ற சட்டங்களுக்கு தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், அந்த மக்கள் மீது இழைக்கப்படும் சமூக கொடுமைகளை தடுக்கும் பொருட்டு “வன்கொடுமைச் சட்டம்” இயற்றப்பட்டு நாடுமுழுவதும் அமலில் உள்ளது. இவ்வாறான சட்டங்கள் நடப்பில் இருந்தாலும் கூட அவர்கள் மீதான வன்முறைகள் குறைவதாகத் தெரியவில்லை.

குறிப்பாக வட இந்தியாவில் இன்னமும் அட்டவணை சாதியினருக்கு ஏராளமான இன்னல்கள் விளைவிக்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து மத்திய அரசாங்கம் அந்தச் சட்டத்தை மேலும் கடுமைப் படுத்தியுள்ளது. ஆனால் ஒப்பீட்டளவில் வட இந்தியாவை விட தென்னிந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அந்த அளவு வன்கொடுமைகள் நடப்பதில்லை என்பதே உண்மை. இயற்கையிலேயே தமிழர்களிடம் காணப்படும் பல்லுயிர்நேய, மனிதநேய உணர்வு அதுபோன்ற கொடுமைகளுக்கு இடம் கொடுப்பதில்லை.

இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தீண்டாமை கொடுமைகள் நடக்கவே செய்கின்றன. அதுபோன்ற கொடுமைகளை தடுக்க அரசாங்கமும், அதிகாரிகளும் தக்க முறையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேவேளையில் தமிழகத்தில் மற்றொரு போக்கு உருவாகியுள்ளதைக் காண்கின்றோம். அட்டவணை சாதியினருக்கு உதவுகிறேன் என்ற பெயரில் கிளம்பிய அமைப்புகள் இந்தச் சட்டத்தை எவ்வாறு தவறாக பயன்படுத்துவது என்று அப்பாவி மக்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளன. இது அவர்களை தங்களுடன் கொடுக்கல்-வாங்கல் வைத்துள்ள, நிலப் பிரச்சனைகள், அரசியல் - சமூக பிரச்சனைகள் போன்ற அனைத்துக்கும் மாற்று சமுதாயத்தினரை பழிவாங்க பயன்படுத்தப்படும் கூர் ஈட்டியாக பயன்படுத்தச் செய்துள்ளது.

குறிப்பாக இந்தச் சட்டம் நமது சமுதாயத்தினருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. அரசியல் சட்டத்தில் நமக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில், அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாத நிலையில் இந்தச் சட்டம் நம்மை ஜனநாயக ரீதியில், சட்ட ரீதியில் வீழ்த்துவதாக உள்ளது. இதனை நம்மை பழிவாங்கும் மற்றொரு “குற்றப்பரம்பரைச் சட்டம்” என்று சொன்னாலும் மிகையாகாது. எனவே இந்தச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவோரிடமிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள நமக்கு ஒரு வலிமையான சட்ட அமைப்புத் தேவைப்படுகிறது. மற்ற வகையில் வன்கொடுமைகளை தடுக்க அரசாங்கம் எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் நாம் உறுதுணையாக இருப்போம். அட்டவணை சாதி சகோதரர்களை பாதுகாப்பதில் நமக்கு முக்கிய பங்குள்ளது.

சட்ட உரிமைகளை பாதுகாத்தல்

ஜனநாயக அரசியலமைப்பில் ஒவ்வொரு சமூகமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானது. அவர்களின் வாழ்வாதாரம், பழக்க வழக்கம், கலாச்சாரம், சமய நம்பிக்கைகள், அரசியல் உரிமைகள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டும். அதேவேளையில் ஜனநாயக கட்டமைப்புகளைப் பயன்படுத்தி திட்டமிட்ட உரிமை பறிப்புகளைச் செய்யக் கூடாது. நிலத்தின் மீது ஒரு குறிப்பிட்ட சாரருக்கு உள்ள உரிமையைப் பறிக்கக் கூடாது.
ஆனால் சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் அமையும் அரசாங்கங்கள் முக்குலத்தோரின் வாழ்வாதார, அரசியல் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன. அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நீர்வள ஆதாரங்கள் மறுக்கப்பட்டு வருகின்றன. திட்டங்கள் என்ற பெயரில் அவர்களிடம் உள்ள நிலத்தை கையகப்படுத்தி வருகின்றன. இது முக்குலத்தோருக்கு மண்ணின் மீதுள்ள உரிமையை பறித்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் செயலாகும். தெரிந்தோ தெரியாமலே மத்திய அரசுக்கும் இதில் முக்கிய பங்கு உள்ளது.
எனவே நமது உரிமைகளை பறிக்கக் கூடிய, நமக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்படும்பொழுது அவற்றை தடுக்க அல்லது அவற்றில் தக்க மாற்றங்கள் செய்ய ஒரு வலுவான சட்ட அமைப்புத் தேவைப்படுகிறது.

மூன்று அணி

கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூன்று சமுதாயங்களுக்கான அமைப்பாக இருந்தாலும் இது தனித்தனியான ஜனநாயக கட்டமைப்பு கொண்ட அமைப்புகளாக இருக்கும். மூன்று அணிகளும் தனித் தனி அமைப்புகளாக கட்டமைக்கப்பட்டு பின்னர் ரு கூட்டு சட்ட அணியாக இணைந்து செயல்படக் கூடியதாக இருக்கும். ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டிய தேவை இல்லாதபோது தனித்தனியாகவும் செயல்படலாம். இது ஏன் என்றால், ஒவ்வொரு அணியின் தனித்தன்மை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆகும்.

ஒரு பகுதியில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அதிகமாக இருக்கிறார்கள் என்றால் குறைவாக உள்ள பிரிவைச் சேர்ந்தவர்கள் மாவட்ட அளவிலான அணியை உருவாக்கி செயல்படலாம். அல்லது அப்பகுதியில் உள்ள மற்ற சமுதாய அணியில் இணைந்து செயல்படலாம்.

யாரெல்லாம் சேரலாம்?

இந்த சட்ட அணியில் 18 வயது பூர்த்தியான, அடிப்படையில் சமுதாய ஆர்வம் கொண்டவர்கள், சமுதாயத்திற்காக நேரம் ஒதுக்கிச் செயல்படக் கூடியவர்கள், படித்தவர்கள், வழக்கறிஞர்கள் இணைந்து செயல்படலாம். ஆண்-பெண் இருபாலரும் இணைந்து பணியாற்றலாம்.

அமைப்பு எந்த தன்மை கொண்டது

இந்த சட்ட அணி கிராமம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, ஒன்றியம், வட்ட அணிகள் அமைக்கப்பட்டு அவை இணைந்து மாவட்ட அணியாகவும். மாவட்ட அணிகள் ஒன்றிணைந்து மாநில அணியாகவும் செயல்படும்.

மாற்று சமுதாய சட்ட அணிகள்

தமிழகத்தில் வன்னியர், கவுண்டர், கோனார், பிள்ளைமார், உடையார் போன்ற மற்ற சமுதாயங்களும் மேற்படி இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. அதுபோன்ற சமுதாயங்களும் சட்ட அணிகளை அமைத்திருந்தால், அல்லது உருவாக்கினால் அவர்களோடும் இணைந்து பணியாற்றி தமிழச் சமூகங்களின் உரிமைகளை பாதுகாப்போம். தமிழரின் மேன்மையை உலகிற்கு பறைசாற்றுவோம்.


-----------------------------------------

No comments: