Saturday, October 10, 2015

“இந்தியா” என்ற வல்லாதிக்க, குறைமாத அரசியல் குழந்தைஇந்தியா ஆங்கிலேயர் வரும் வரை ஒரே தேசமாக, ஒரே இறையாண்மையின் கீழ் ஆளப்படவில்லை. முகலாயரின் ஆட்சியிலும் கூட பல பகுதிகள் அடங்கவில்லை. வெள்ளையர்கள் அனைத்துப் பகுதிகளையும் ஒன்றிணைத்து ஒரே அரசாங்கத்தை உருவாக்கினார்கள். பர்மாவும் இந்தியாவின் பகுதியாகவே இருந்தது. பின்னர் அது தனி நாடாக பிரிக்கப்பட்டது.


இப்படி ஒரே அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலப்பரப்பில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடினார்கள். அது இந்திய தேசியம் என்ற உணர்வை வளர்த்தது. இதில் சுதந்திரம் பெறும் முறையில் காந்திக்கும் சுபாஷ் சந்திர போஸ்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.


காந்தி வெள்ளையர்களிடமிருந்து அகிம்சை முறையில் சுதந்திரம் வாங்க விரும்பினார். சுபாஷ் சந்திர போஸ் வெள்ளையர்கள் மீது போர் தொடுத்து சுதந்திரம் வாங்க வேண்டும் என்று சொன்னதோடு நிற்காமல் ஒரு தற்காலிக நாடுகடந்த இந்திய அரசாங்கத்தை நிறுவி அதற்கு தேவையான அத்தனை துறைகளையும் அமைத்து நிதியை திரட்டி, படையை திரட்டி போர் தொடுத்தார். ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற முன் திட்டமிடல் அவரிடம் இருந்தது.


ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத காந்தி கும்பல் ஆங்கிலேயரிடம் இணக்கமாக செயல்பட்டு வந்தது. அவர்களிடம் ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற திட்டமிடல் இல்லை. அதனால்தான் பாகிஸ்தான் என்று ஒன்று பிரிந்தால் அது என் பிணத்தின் மீதுதான் நடக்கும் என்று சொன்ன காந்திக்கு தெரியாமலேயே அவரது சிஷ்ய கோடிகள் அந்த பிரிவினைக்கு ஒப்புக் கொண்டனர்.


சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய ஃபார்வேர்டு பிளாக் கட்சி அந்த பிரிவினையை ஏற்கவில்லை. நாட்டின் நிலப்பகுதியை இழப்பதை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. ஆனால் அகிம்சை என்ற பெயரில் குறுக்கு வழியில் சுதந்திரம் பெற விரும்பிய காந்தி கும்பலுக்கு நாட்டின் நிலப்பகுதி பற்றி கவலையில்லை. அதனால்தான் காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தைப் பற்றி காந்தி கும்பல் கவலைப்படவில்லை. மக்களின் பாதுகாப்பு பற்றியும் கவலையில்லை.


அவசர கோலத்தில் வெள்ளையன் உருவாக்கிய பிரிவினையில் பல எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இவ்வளவு பெரிய எல்லையைக் கொண்ட நாட்டில் உள்ள மக்கள் எவ்வாறு குறுகிய காலத்திற்குள் இடம் பெயர முடியும் என்பற்றி வெள்ளையர்களும் கவலைப்படவில்லை. காந்தி கும்பலும் சிந்திக்கவில்லை. விளைவு ஒரே ரத்தகளரி. இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பிரிவினையின்போது கொல்லப்பட்ட மக்கள் தொகையின் எண்ணிக்கை 20 லட்சம்.


காந்தி கும்பலின் ‘முஸ்லீம்களை மகிழ்விக்கும் கொள்கை’ காரணமாக இந்துக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. தனது சிஷ்ய கும்பல் மீதான கட்டுப்பாட்டை இழந்த காந்தியால் உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு இந்திய வந்து சேர்ந்த இந்துக்களைப் பார்த்து, ‘நீங்கள் ஏன் முஸ்லீம்களாக மாறி அங்கேயே இருந்திருக்கக் கூடாது’ என்று கடிந்துகொள்ள மட்டுமே முடிந்தது. மேலும் பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை உடனே கொடுக்க வேண்டும் என்று கூறி உண்ணாவிரதமும் இருக்கத் துவங்கினார். இந்த ‘முஸ்லீம்களை மகிழ்விக்கும் கொள்கை’ காந்தி கொலைக்கு காரணமாக அமைந்தது.


ஆனால் சுபாஷ் சந்திர போஸ், அனைவரையும் சமமாக மதித்தார். அவரை முஸ்லீம்கள் நம்பினார்கள். ‘நீங்கள் காங்கிரஸ்க்கு தலைமை ஏற்பதாக இருந்தால் நான் பிரிவினை கோரிக்கையை கைவிடுகிறேன்’ என்று ஜின்னா சொன்னார். ஆனால் அதே ஜின்னா முஸ்லீம்களை மகிழ்விக்கும் கொள்கையை கொண்ட காந்தியையும் காந்தி கோஷ்டியையும் நம்பத் தயாராக இல்லை. அதேவேளையில் காந்தி ஜனநாயக முறைப்படி காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நேதாஜியை அந்த பதவியை வகிக்க இயலாத வகையில் இடையூறு கொடுத்து அவரை அங்கிருந்து வெளியேற்றினார். இருந்தாலும் வங்கத்து மக்கள் அவரை மீண்டும் தங்கள் மாநில காங்கிரஸ் தலைவராக்கி மகிழ்ந்தார்கள். அவர் இறுதி வரை மக்கள் தலைவராகவே இருந்தார். பட்டாபி தோல்வி என் தோல்வி என்று சொன்ன காந்தி மக்களின் தீர்ப்பை குப்பைத் தொட்டியில் போட்டார்.


விடுதலை வரை அகிம்சை பற்றி பேசிக் கொண்டிருந்த காந்தி கும்பல் விடுதலைக்குப் பின்னர் தன் விருப்பப்படி துப்பாக்கிச் சூடு நடத்தி மகிழ்ந்தது. காஷ்மீர் மீது பாகிஸ்தான் போர் தொடுத்த நிலையில், ஆபத்தில் இருந்த அவர்களுக்கு உதவாமல் இந்திய யூனியனில் சேர்ந்தால்தான் உதவுவோம் என்று காந்தி கும்பல் கட்டாயப்படுத்தியது. அவ்வாறு சேர்ந்த காஷ்மீரையும் தக்க வைத்தார்களா? இல்லை. ஆங்கில-அமெரிக்க கைப்பாவையான ஐநா மூலம் தீர்த்துக் கொள்வதாக சொல்லி பாதி காஷ்மீரை இழந்தார்கள். அவர்களால் இன்னமும் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்கவே முடியவில்லை.

இன்று காஷ்மீர் மக்கள் தனிநாடாக போவதாக சொல்லி வருகிறார்கள். அதில் உண்மையை அறிய ஒரு ‘பொதுத் தேர்தலை’ நடத்தும் துணிச்சல் இல்லாதவர்களாகவே இந்திய ஆட்சித் தலைவர்கள் இருந்து வருகிறார்கள். அதேபோல ஹைதராபாத் மீதும், கோவா மீதும் போர் தொடுத்துதான் அப்பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தார்கள். ஏன், அவர்களது அகிம்சை கொள்கை என்ன ஆனது? பேச்சு வார்த்தை நடத்திய இந்தியாவுடன் சேர்ந்தால் கிடைக்கும் நன்மைகளை எடுத்துச் சொல்லி அவர்களை இந்தியாவுடன் சேர்த்திருக்கலாமே? நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், கம்யூனிஸ்ட்கள் மீது துப்பாக்கிச் சூடுகள் நடத்தி மகிழ்ந்தார்கள். இது  அவர்களின் போலித்தனத்தை காட்டுகிறது. ஆக இவர்களின் நோக்கமெல்லாம் நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் நம்பிக்கையோ அல்லது மக்களின் ஜனநாயக தீர்ப்புகளை ஏற்றுக் கொள்ளும் தன்மையோ இல்லை என்பதையே காட்டுகிறது.


இப்படிப்பட்ட வல்லாதிக்க மனநிலையில் உள்ளவர்களால் எவ்வாறு பல்வேறு மொழி, உடை, உணவு பழக்கமுள்ள பல இனமக்களைக் கொண்ட நாட்டை திறம்பட வழிநடத்த இயலும். இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பலவேறு பிரச்சனைகள். மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு இந்தப் பிரச்சனைகளை புரிந்துகொள்ளும் திறனோ, அவற்றை போக்கும் திறனோ கிடையாது. எனவே இந்தப் பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.


இந்திய சுதந்திரம் என்பது வெள்ளையன் தன்னிடமிருந்து வல்லாதிக்கத்தை கைமாற்றி இந்தியர்களிடம் ஒப்படைத்ததே. இதனை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் நன்கு புரிந்து வைத்திருந்தார்கள். எனவேதான் அவர் இந்திய சுதந்திரத்தை கொண்டாடவில்லை. இன்றும் ஃபார்வேர்டு பிளாக் கட்சி இந்திய சுதந்திரத்தைக் கொண்டாடுவதில்லை. தெற்காசியப் பகுதியை தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே இந்தியாவை வெள்ளையர்கள் தங்கள் விருப்பப்படி பிரித்தார்கள் என்பதை தேவர் அன்றே தெளிவுபடுத்தினார். அதுதானே இன்று வரை நடந்துகொண்டிருக்கிறது?

வெள்ளையர் விட்டுச் சென்ற எல்லை பிரச்சனையில் பெருபாரி பகுதியை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். ஆனால் பதவி ஆசை கொண்ட நேரு 1961-ம் ஆண்டு சீனாவிடம் பல ஆயிரம் கி.மீ. தொலைவு நிலப் பரப்பை இழந்ததோடு, தன் இயலாமையை ஒப்புக்கொள்ளாமல் அந்த மண் புல் பூண்டு கூட முளைக்காத நிலம் என்று தாய் மண்ணை இகழ்ந்தார். அதே நேரு அரசாங்கம், மொழிவாரி மாகாணமாக ஆந்திர பிரதேசத்தை மட்டுமே பிரித்தது. மற்ற மாநிலங்களை பற்றி கவலைப்படவில்லை. இந்த பிரிவினையில் நேருவின் தலைமையிலான மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராகவே செயல்பட்டது, நேருவின் சிஷ்யகோடியான காமராஜரும் அதைக் கண்டுகொள்ளவில்லை.


நேருவுக்குப் பின்னர் வந்த லால் பகதூர் சாஸ்திரி, 1964-ம் ஆண்டு இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா உடன் ஒரு ஒப்பந்தம் போட்டார்.  அந்த ஒப்பந்தம் வெள்ளையர்கள் காலத்தில் இலங்கையில் குடியேறிய மலையகத் தமிழர்களை திருப்பி பெறும் ஒப்பந்தம் ஆகும். இதேபோல வெள்ளையர் காலத்தில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களை (இந்தியர்கள்) திருப்பி அழைக்குமாறு அந்தந்த நாடுகள் சொன்னால் என்ன ஆகும் என்று சாஸ்திரியால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அதோடு அவ்வாறு திருப்பி பெறப்பட்ட தமிழர்களை முறையாக இந்தியாவில் குடியேற்றும் வேலையையும் செய்து முடிக்க முடியவில்லை.


அவருக்குப் பின்னர் வந்த இந்திரா காந்தி 1974-ம் ஆண்டு தன் விருப்பப்படி கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார். தேவர் தந்த தேவரான மூக்கையாத் தேவர்தான் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அதனை இந்திரா காந்தி கண்டுகொள்ளவில்லை. இப்படி இந்தியா என்ற இந்த அதிகாரக் குவிப்பின் தலைவர்களாக ஆகுபவர்களுக்கு ஏன் நிலப்பரப்பின் அருமை தெரிவதில்லை? அவர்களுக்கு வெள்ளையன் அந்த உரிமையையும் கொடுத்து விட்டுச் சென்றானா அல்லது சுலப தவணையில் சுதந்திரம்  கிடைத்ததால் அது தெரியவில்லையா?


சுதந்திரம் பெற்றதும் பெயரளவுக்கான ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்களோ ஒழிய, இந்தியத் துணைக் கண்டத்தைப் போன்ற ஒரு பன்முகத் தன்மை கொண்ட இந்த நிலப்பகுதிக்கான ஒரு கூட்டாட்சி முறையை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் காந்தி கும்பலுக்கு ஏற்படவேயில்லை. இதுவரையும் எந்த வட இந்திய அரசியல் தலைவருக்கும் அது ஏற்படவில்லை. மாறாக மாநில அரசாங்கங்களிடமிருக்கும் அதிகாரங்களை பறிக்க அத்தனை வேலைகளையும் செய்து வருகிறார்கள்.


எடுத்துக் காட்டாக அமெரிக்கா போன்ற ஒரு கூட்டாட்சியை உருவாக்கி மாநிலங்களுக்கு அதிக சுதந்திரத்தை கொடுத்தால் அது இந்த துணைக் கண்டத்திற்கு ஏற்ற ஒன்றாக இருக்கும். அதை விடுத்து ஏகாதிபத்திய முறையில் நாட்டை ஒருமைப் படுத்துகிறேன் என்ற போர்வையில் அதிகாரத்தை குறைத்து வந்தால் எந்தக் காலத்திலும் இந்தியா அரசியல் முன்னேற்றம் அடையாது.


இன்னும் சொல்லப்போனால் இந்திய துணைக் கண்டத்தை ஈயூ போன்ற ஒரு அரசியல் கூட்டமைப்பாக மாற்ற முன் வரவேண்டும். ஆனால் அதைப் பேசக் கூடிய எந்த ஒரு அரசியல்வாதியையும், அரசியல் கட்சியையும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காண இயலவில்லை. வெறும் கிரிக்கெட் மூலமாகவும், இந்தித் திணிப்பு மூலமாகவும் இந்தியாவை ஒட்ட வைத்துவிடலாம் என்பது பகல் கனவு. அது இந்திய அரசியல்வாதிகளின் முட்டாள்தனத்தை காட்டுமேயொழிய அரசியல் தெளிவைக் காட்டாது. இதற்கிடையே “இந்தியா வல்லரசு” கூச்சல் வேறு. இந்த நிலை தொடரும்பட்சத்தில் இதனை ஒரு அரசியல் குறைமாதக் குழந்தை என்றே சொல்லலாம். குறைமாதக் குழந்தை முன்னதாக பிறப்பது. இந்தக் குழந்தை பின்னதாக பிறந்து வளராமல் அப்படியே நின்று விட்டது.இந்த நிலப்பரப்பிற்கு ஒரு மாற்றம் வரும், சுபிட்சம் வரும் என்று கூறிச் சென்ற ஞானிகளின் வாக்கு பொய்யாகவே போய்விடுமா?

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...