Thursday, October 8, 2015

காமராஜரின் வரலாற்றுத் தவறுகளை நியாயப்படுத்தலாமா?தமிழகத்தில் ஒரு தலைவரின் அபிமானிகளாக இருப்பவர்கள் அவருக்கு நேரெதிரான தலைவரைப் பற்றி குறை சொல்வது பழக்கமாகவே ஆகிவிட்டது.

இதனால் தமிழரின் தலைவர்களாக சொல்லிக் கொண்டவர்களுக்காக தமிழர்கள் பிரிந்து நின்று  சண்டை போட்டு வந்தனர். அவர்கள் செய்த அரசியல்களுக்கு ஆளாகியும் தமிழர்கள் பல இழப்புகளைச் சந்தித்து வந்தனர்.

ஆனால் இப்போது நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. தமிழர்கள் ஆரிய, திராவிட, தலித்திய  மாயையிலிருந்து விடுபடத் தொடங்கியுள்ளனர். அந்நியர்கள் செய்து வரும் ஆதிக்கத்தையும் அவர்கள் தமிழர்களை பிரித்து வைக்க என்னவெல்லாம் சதித் திட்டம் செய்து வருகின்றனர் என்பதையும் புரிந்து வருகிறார்கள். எனவே எதிரிகளாக கருதப்பட்ட சமுதாய மக்களிடையே தமிழர் நலம் என்ற கருத்தொற்றுமை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழர்கள் வரலாற்றை சீர்தூக்கிப் பார்த்து அதில் எது நல்லது, எது கெட்டது என்று பிரித்துணர்ந்து வருகின்றனர். இதில் எதிரெதிர் அணியிலிருந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.

இருந்தாலும் மாற்றுத் தலைவரை தூற்றும் பழக்க தோஷத்தில் இருந்து கொண்டு சிலர் தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் பெருந்தலைவர் என்று அழைக்கப்பட்டு வந்த காமராஜரும் இன்று தமிழர் நலனில் அக்கறை கொண்ட அனைவராலும் விமர்சிக்கப்படுகிறார்.

காமராஜர், பள்ளிகளைத் திறந்தார், பள்ளிகளில் மதிய உணவு வழங்கினார், தொழிற்சாலைகளைத் திறந்தார், அணைகளை கட்டினார் என்பதில் சிறிதும் மாற்றுக் கருத்தில்லை. அவையெல்லாம் பாராட்டத் தக்க செயல்களே.  அதேவேளையில் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்த அவர் தொலை நோக்குப் பார்வையுடன் தமிழக எல்லைகளை மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் சூறையாடியதை கண்டு கொள்ளவில்லை. இதனால் இன்று தமிழர்கள் எல்லையை இழந்தது மட்டுமல்லாமல் தங்கள் நீர் ஆதாரங்களையும் இழந்து தொடர்ச்சியான இழப்புகளை சந்தித்து வருகிறார்கள்.

அனைத்து சமுதாயங்களுக்கும் விகிதாச்சார முறையில் அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும் என்று பேசி வரும் என்போன்றவர்கள் இந்த விமர்சனத்தை காமராஜர் மீது வைக்கும்போது பெரும்பாலான நாடார் சமுதாயத்தவர்கள், நான் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதால் இதைச் செய்வதாக கருதுகிறார்கள். அவர்களின் கருத்துக்களிலிருந்து இது தெரிய வருகிறது.

அவர்கள் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் குற்றச் சாட்டை ஒட்டு மொத்த நாடார்கள் மீது வைக்கப்படும் குற்றச் சாட்டாக புரிந்துகொள்ளக் கூடாது. காமராஜர் நாடார்களின் பிரதிநிதியாகவும் இருக்கவில்லை. ஆனால் பெரும்பாலானோர் அவ்வாறு கருதுவதால்தான் அவர்களால் இந்த விமர்சனத்தை ஏற்க முடியவில்லை என்று நினைக்கிறேன்.

காமராஜருக்கும் - தேவருக்கும் ஏற்பட்ட அரசியல் கருத்து வேறுபாடு காங்கிரஸ்-பார்வேர்டு பிளாக் கட்சிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடு ஆகும். ஆனால் அப்போதும் காமராஜர் தலைமையில் பல தேவர்களும், தேவரின் தலைமையில் பல நாடார்களும் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என்பதே உண்மையாக உள்ளது. ஆக அது ஒரு அரசியல் கருத்து வேறுபாடு ஆகும். அது இன்றும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது.

ஆனால் அதை விட்டு விட்டு இதை சாதிக் கண்ணோட்டத்தில் பார்த்து காமராஜர் நாடார் சங்கத் தலைவராக இருந்தது போல கருதிக் கொண்டு, அவரது வரலாற்று தவறுகளை நியாயப்படுத்த நினைப்பது முறையாகாது. இன்று நாடார்கள் தமிழகத்தில் பெரும் பொருளாதார சக்தியாக இருக்கும் நிலையில், தமிழருக்கான அரசியலில் சரியான நிலைப்பாட்டை எடுத்து வரலாற்றை நடுநிலையுடன் அணுகவேண்டும். அதுவே ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்திற்கும் நன்மை பயப்பதாக அமையும்.

காமராஜருடன் ஒப்பிடுகையில் சி.பா. ஆதித்தனாரின் தமிழுணர்வு போற்றுதலுக்குரியதாக உள்ளது. எனவே எதை கையிலெடுப்பது, எதைக் கைவிடுவது என்று முடிவு செய்வது உங்களிடமே உள்ளது. இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கான அரசியல் உரிமைப் பிரச்சனை. வரலாற்றுத் தவறுகளை மாற்றுவதற்கு முதலில் அவற்றை புரிந்துகொள்ள வேண்டும். நாடார் பெருமக்கள் பொறுப்புடன் சிந்தித்து தமிழர் அரசு அமைய ஒத்துழைக்க வேண்டும்.

-------------------------------------------------

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...