Thursday, December 31, 2015

மும்பை சயான் மருத்துவமனையில் சுகாதார பணி

நான் மும்பையில் வசித்தபோது 2004-ம் ஆண்டு இறுதியிலிருந்து தாராவி பகுதியில் இயங்கி வரும் ஜேபிஆர் கேபிள் டிவியின் செய்திப் பிரிவில் ஓராண்டு காலம் பணி புரிந்தேன். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சமூக சேவகரான எஸ்.ஏ.சுந்தர் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

அவர், தான் செய்து வரும் சமூக பணிகள் குறித்து ஒரு வீடியோ எடுத்து கேபிள் டிவியில் ஒளிபரப்ப வேண்டும் என்னிடம் கேட்டுக் கொண்டார். பின்னர் அது குறித்து நான் அந்த கேபிள் டிவியின் உரிமையாளருடன் பேசி அனுமதி பெற்று எஸ்.ஏ.சுந்தர் பற்றி ஒரு காணொளியை தயாரித்து ஒரு நாளைக்கு 3 முறை ஒளிபரப்பினோம். அது அவரது எதிர்ப்பாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அவர்கள் கேபிள் டிவி உரிமையாளருக்கு நெருக்கடி கொடுக்கவும் அது ஒருமாத கால முடியும் முன்னரே நிறுத்தப்பட்டது.இப்படித்தான் எனக்கு எஸ்.ஏ. சுந்தர் அவர்களுடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர் பாஜக கட்சியின் ஒரு பொறுப்பில் இருந்தார். சிட்டிஸன் ஃபோரம் மஹாராஷ்டிரா என்ற பொதுநல அமைப்பை நடத்தி வந்தார். 2007-ம் ஆண்டு வாக்கில் ஒருநாள் அவர் என்னை அழைத்து நலம் விசாரித்தார். நேரம் கிடைக்கும்போது தனது அமைப்பின் நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது நான் தன்னிச்சையான மொழி பெயர்ப்பாளர் பணியை செய்து வந்ததால் அவரது அமைப்பின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடிந்தது.

அவர் எனது ஈடுபாட்டைக் கண்டு அந்த அமைப்பின் சயான் கோலிவாடா பகுதி தலைவராக நியமித்தார். அதன் பின்னர் நான் அப்பகுதியில், சிட்டிஸன் ஃபோரம் மஹாராஷ்டிரா அமைப்பின் மூலமாக ரத்ததான முகாம், பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முகாம் போன்ற முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்தேன்.

மும்பையில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் ஒன்று சயான் லோக்மான்ய திலக் மருத்துவமனை. 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் எஸ்.ஏ. சுந்தர் அவர்கள் சயான் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பழங்கள், பிஸ்கட்கள், போர்வை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அப்போது ஈழப்போர் நடந்துகொண்டிருந்தது. ஈழத்தில் இன அழிப்பு நடந்துகொண்டிருந்தது. எனவே அதனை குறிக்கும் வகையில் இந்த அமைப்பைச் சேர்ந்த அனைத்து தொண்டர்களும் கறுப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டோம். ஏறக்குறைய அதில் 50 தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இதைக் கண்டதும் மருத்துவமனையில் உள்ள சமூக சேவைப் பிரிவு நிர்வாகிகள் மற்றும் இதர மருத்துவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் மும்பையில் பல்வேறு சிறிய பெரிய அறக்கட்டளைகள் உள்ளன. அந்த அறக்கட்டளைகள் மருத்துவமனைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. ஆனால் அந்த அமைப்புகளிலிருந்து ஒருவர் அல்லது இருவர் வந்து அந்த வேலைகளை செய்துவிட்டுப் போவார்கள். ஆனால் எங்கள் அமைப்பிலிருந்து இவ்வளவு தொண்டர்கள் வந்திருப்பது அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

எனவே மருத்துவமனையின் சமூக சேவை பிரிவைச் சேர்ந்த மருத்துவர் தாரா வர்மா, எஸ்.ஏ. சுந்தர் அவர்களிடம் ஒரு உதவி கோரினார். அதாவது, மருத்துவமனை வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தார். எழுத்துப் பூர்வமாக கடிதமாக கொடுத்தால தாங்கள் அந்த பணியை செய்யத் தயார் என்று எஸ்.ஏ. சுந்தர் கூறினார்.

அந்த பணிக்கு மருத்துவமனையின் டீன் அனுமதி கொடுத்ததும் மருத்துவமனையில் சுகாதார பணியை துவக்கினோம். மும்பையில் பெரும்பாலானோர் பான் பராக் மற்றும் புகையிலையின் பல்வேறு வடிவ தயாரிப்புகளை மெல்லுவார்கள். இவர்கள் மருத்துவமனையின் படிகள், வராண்டாவில் எச்சில் துப்பி வைப்பார்கள். அது ஒரு வகை நாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

எனவே புகையிலைப் பொருட்களை மருத்துவமனை உள்ளே கொண்டு செல்வதை தடுத்தால் எச்சில் துப்புவது நின்றுவிடும், அதைத் தொடர்ந்து நாற்றமும் நின்றுவிடும் என்பதால் முதலில் அதனைச் செய்ய முடிவு செய்தோம். மருத்துவமனை முழுவதுமாக சிட்டிஸன் ஃபோரம் மஹாராஷ்டிரா அமைப்பு சுகாதார பணியில் ஈடுபடுவதும் பொதுமக்கள் புகையிலைப் பொருட்களை உள்ளே கொண்டு வருவதை தவிர்க்கவும் கோரி பேனர்கள் வைக்கப்பட்டன.மருத்துவமனையின் 7 நுழைவாயில்களில் 3 நுழைவாயில்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே அந்த 3 நுழைவாயில்களிலும் மருத்துவமனையின் உள்ளே இரண்டு 2 நுழைவாயில்களிலும் என இரண்டு இரண்டு தொண்டர்கள் சீருடையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்களின் வேலை மருத்துவமனையின் உள்ளே வருபவர்களிடம் உள்ள பீடி, சிகரெட் மற்றும்  புகையிலை பொருட்களை பெற்றுக் கொண்டு அவர்களை உள்ளே அனுமதிப்பதாகும். இந்த பணியில் ஈடுபடும் குழுவினரின் அணித் தலைவராக நான் நியமிக்கப்பட்டேன்.

பொதுவாக இந்த மருத்துவமனையில் தொடர்ச்சியாக நடைபெறும் சமூக சேவைகள் ஒரு வாரத்திற்கு மேலாக நீடிப்பதில்லை. அதற்கு காரணம் அங்குள்ள வார்டுபாய் சங்கம், நர்ஸ்கள் சங்கம் போன்ற சங்கங்களுக்கும் சமூக சேவையில் ஈடுபடும் அமைப்புகளுக்கு கருத்துவேறுபாடு, மோதல் ஏற்படுவதே ஆகும். ஆனால் எங்கள் அமைப்பு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஒரு மாத காலம் நீடித்தது.

பொதுமக்கள் எச்சில் துப்புவது நின்றதும் நாற்றமடிப்பது நின்றது. அதன் பின் மருத்துவமனையில் உள்ள துப்புரவு பணியாளர்கள் மருத்துவமனை வராண்டாக்களை துடைத்து சுத்தம் செய்தார்கள். மருத்துவமனை மிகவும் சுத்தமாக மாறிவிட்டது. மருத்துவமனையைச் சேர்ந்த நர்ஸ்கள், மருத்துவர்கள், நோயாளிகள், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்தச் செய்தி மும்பை நகரில் வெளிவரும் பல பத்திரிகைகளில் வந்தது.

சுகாதாரப் பணி 3 மாதங்கள் தொடர்ந்தது. பொதுமக்களிடமிருந்து கைப்பற்றும் புகையிலைப் பொருட்கள் ஒரு அறையில் சேமித்து வைக்கப்பட்டன. அவை அளவில் சுமார் 600 கிலோவை எட்டுவதாக இருந்தன. இந்தச் செய்தி ஜீ இந்தி செய்தி தொலைக் காட்சியில் தொடர்ச்சியாக ஒரு நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது.

இதற்கிடையில் இந்தப் பணியை வைத்து எஸ்.ஏ. சுந்தரின் பெயரும் சிட்டிஸன் ஃபோரம் அமைப்பின் பெயரும் மும்பை நகரில் பேசப்படும் பெயராக அமைந்தன. உள்ளூர் அரசியல் பிரமுகருக்கு அச்சம் ஏற்பட்டது. எஸ்.ஏ. சுந்தர் சட்ட மன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட தயாராகிறாரோ என்று அஞ்சிய அவர் மருத்துவமனை டீன் மூலமாக இந்தப் பணியை நிறுத்த நெருக்கடி கொடுத்தார். 4 மாத காலத்திற்கு பிறகு பலரும் விரும்பாமலேயே இந்த பணி நிறுத்தப்பட்டது. 

No comments: