Thursday, October 20, 2016

பாகவதருக்காக மனம் மாறிய தேவர்

1957-ம் ஆண்டு கேரளாவின் நொச்சியூரில் சுவாமி சித்தானந்தர் ஆசிரமத்தில் ஒரு ஆன்மீக விழா நடந்தது. அங்கே விநாயகர் மற்றும் தெய்வங்களுக்குக் கோவில் இருந்தது. பித்துக்குளி முருகதாஸ், பாபநாசம் சிவன், எம்.கே. தியாகராஜ பாகவதர் போன்றோர் கலந்துகொண்டனர். விழா மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. ஆன்மீகச் சொற்பொழிவாற்ற தேவரும் அழைக்கப்பட்டார்.

முதல்நாள் தேவர் காரில் திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய ஊர்களுக்கு பயணம் சென்றார். மறுநாள் இரவு ஒன்பது மணிக்கு அவர் 'பராசக்தி' பற்றி மூன்று மணிநேரம் சொற்பொழிவாற்றினார். பெண்கள் ஏராளமாக கலந்து கொண்டு அவரது பேச்சைக் கேட்டனர். அப்போது நாத்திக வாதங்களை சுக்குநூறாக உடைத்தார். அன்று இரவு அங்கே தங்கிவிட்டு மறுநாள் மதுரைக்குப் புறப்படத் திட்டமிட்டிருந்தார்.

மறுநாள் தேவர் புறப்பட்டுக் கொண்டிருந்த சூழலில் அவரைச் சந்திப்பதற்காக பாகவதர் அங்கே வந்தார். பாகவதருக்கு அப்போது கண் பார்வை இல்லை. அவர் தேவரை பார்க்க விரும்பினார். தேவரிடம் வந்து அவரை தொட்டுப் பார்த்தார்.

''தேவரய்யா தங்களை காணவேண்டும் என்று நான் பலமுறை எண்ணியதுண்டு. ஆனால் அது முடியவில்லை. எனக்குப் பார்வை இல்லாவிட்டாலும் தங்கைளைத் தொட்டுப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததே என் பாக்கியம்தான். ஐயா, நான் முருகன் மீது ஒரு பாட்டுப் பாடுகிறேன். தாங்கள் அவசியம் எனது பாட்டைக் கேட்க வேண்டும்'' என்றார்.

''தேவரோ, நான் ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். பயண அவசரத்தில் தங்களது பாட்டை கேட்க முடியாத நிலையில் இருக்கிறேன். வருத்தப்பட வேண்டாம். இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்தால் பார்த்துக் கொள்வோம்'' என்றார்.

பாகவதர் மிகவும் வருத்தப்பட்டார். ''பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் என்னைப் பாடச் சொல்லிக் கேட்டு, நான் மறுத்த காலம் உண்டு. இப்போது நானே தங்களிடம் பாடுகிறேன் என்று வலியக் கேட்டுத் தாங்கள் மறுக்கிறீர்கள். இதுவும் என் காலக் கிரகம்தான்'' என்றார்.

தேவரின் மனம் மாறியது. ''ஊருக்குத் தாமதமாகப் போனாலும் பரவாயில்லை. நீங்கள் பாடுங்கள்'' என்றார்.

உடனே முருகா என பாடத் தொடங்கினார். தேவரும் பாகவதரின் பாட்டைக் கேட்டு ரசித்தார். பாகவதரும் பத்துப் பாடல்களைப் பாடினார். ரயில் நேரம் எல்லாம் தவறிவிட்டது. தேவரும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

பாகவதரோ ''முருகன் மீது பாடினேன். அதுவும் நடமாடும் முருகன் முன்னாலேயே பாடினேன். என் ஜென்மம் சாபல்யம் அடைந்தது'' என்றார்.
-"பசும்பொன் சரித்திரம்" நூலிலிருந்து...

(எம்.கே. தியாகராஜ பாகவதர் பற்றி தெரியாத இளைஞர்களுக்கு, அவர் எம்ஜிஆர், சிவாஜி காலத்திற்கு முந்தைய காலத்தில் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர். அந்தக் காலத்தில் பாடத் தெரிந்தால்தான் கதாநாயகனாக நடிக்க முடியும். சிறந்த பாடகராக இருந்த பாகவதர் அக்கால சூப்பர் ஸ்டாராக இருந்தார். ஒரு கொலை வழக்கில் சேர்க்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டதால் நடிப்பு ஆசையை இழந்து இறுதிக் காலங்களில் நோய் வாய்ப்பட்டவராக இறந்தார். கீழேயுள்ள இணைப்பில் பாகவதர் பற்றி அதிக தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.)

Friday, October 14, 2016

பாஜகவும் இந்து அமைப்புகளும் தேவரை தலைவராக ஏற்கத் தயாரா?


பாஜகவும் இந்து அமைப்புகளும் தேவரின் கொள்கைகளை பின்பற்றத் தயாரா?
பெரியார் சிலைகளை நீக்கிவிட்டு அங்கு பசும்பொன் தேவர் சிலைகளை வைக்கவேண்டும் என்று அர்ஜூன் சம்பத் பேசியதாகவும், அதுபற்றி எனது கருத்தை தெரிவிக்குமாறு ஒரு நண்பர் எழுதியிருந்தார். அவருக்கான பதிலே இந்த மடல்...

எதை தின்றால் பித்தம் குறையும் என்று அலைகிறார்கள் பாஜகவினரும் இந்து அமைப்புகளும். அதில் அர்ஜூன் சம்பத்தும் ஒரு ஆளாக இருப்பதில் வியப்பில்லை.
                                                                                       
இவரது பேச்சு, இன்றையத் தமிழ்ச் சமுதாயத்திற்கு தேவருக்கான தேவை அதிகரித்து வருவதையும், பெரியார் என்ற ராமசாமி நாயக்கர் தேவையற்ற நிலையை அடைந்து விட்டதையுமே காட்டுகிறது. ராமசாமி நாயக்கர் உயிர் வாழ்ந்த காலங்களிலேயே அவரது நாத்திக பிரச்சாரங்களை தவிடுபொடியாக்கியவர் தேவர். இந்த நாத்திகப் பிரச்சாரம் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாது என்பதை வலியுறுத்தியவர் தேவர். அது தமிழருக்கு அழிவாக முடிந்ததே கண்கூடு. "ரோஜா மலர் எப்படி இருக்கும் என்பது தெரியும். ஆனால் அதன் மணம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா? அது போன்றவரே கடவுள்" என்று கூறி நாயக்கரை திணறடித்தவர் தேவர். நாயக்காரால் தன் வாழ் நாள் முழுவதும் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.

வேதங்களிலும், புராணங்களிலும் சொல்லப்பட்டுள்ள மறைபொருட்களை தேடிக் காண்பதே அறிவு. அவ்வாறு செய்யாமல் அவையெல்லாம் மூடத்தனம் என்று ஒதுக்கித் தள்ளுவது பகுத்தறிவு ஆகாது என்று கண்டித்தவர் தேவர். இன்று பெரியார் முன்னெடுத்த அத்தனை கருத்துக்களுமே தமிழருக்கு விரோதமானவை என்பதை எல்லாரும் உணர்ந்து வருகிறார்கள். தமிழ் அறிஞர்கள் வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன.

தேவர் இந்து மதப் பற்றாளராக இருந்தாரே ஒழிய ஒரு காலத்திலும் இந்து வெறியர்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை. அதற்கு காரணம் அவர் ஒரு தமிழர் என்பதே. தமிழர்கள் எந்தக் காலத்திலும் மதச் சார்புள்ளவர்களாக இருந்ததில்லை. மதங்களுக்கு எதிரானவர்களாகவும் இருந்ததில்லை. அவர்கள் அறநெறியாளர்கள். அவர்களுக்கு நீதிதான் முக்கியம். மதம் முக்கியமல்ல. அறமா? மதமா? என்ற கேள்வி எழும்போது தமிழர்கள் மதத்தை தூக்கி எறிவார்கள். மதப் பாகுபாடு காட்டமாட்டார்கள். அதில் முக்குலத்தோர் முதலிடத்தில் இருப்பார்கள்.

அர்ஜூன் சம்பத் போன்றோருக்கு (பாஜக) ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூல ஆதாரம் எதுவென்பது தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதன் மூலாதாரம் தமிழருக்கு விரோதமானது என்பது என் போன்ற, தேவரின் வார்த்தைகளை, கருத்துக்களை உள்வாங்கியவர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் தமிழர் விரோதி என்ற பெயரைச் சம்பாதிக்க காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளை எடுத்துக் கொண்டபோது பாஜக வெறும் 3 ஆண்டுகளில் அந்தப் பெயரை சம்பாதித்தது.

ஆனால் பாஜக தமிழகத்தின் அரசியல் மூலாதாரம் முக்குலத்தோர்தான் என்பதை மிகவும் தாமதமாக கண்டுபிடித்துள்ளது. அதனால்தான் தேவர் ஒரு இந்து மதவாவதி என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளனது. ஆனால் தேவர், சனாதனிகளுக்கு எதிரானவர் என்பதை வரலாறு சொல்கிறது.

இந்து அமைப்புகளில் பிராமணர் மட்டுமே கோலோச்ச முடியும், மற்றவர்கள் அவர்களுக்கு அடிமைகளாகவே இருக்க வேண்டும். (இங்கு பிராமணர் என்பது அந்த ஆதிக்க மனோநிலையில் உள்ள பிராமணரை மட்டுமே குறிக்கப்படுகிறது.) ஆனால் முக்குலத்தோர் எந்த காலத்திலும் யாருக்கும் அடிமையாக இருந்து பழக்கப்படாதவர்கள். அவர்கள் அன்புக்குக் கட்டுப்படுவார்கள். ஆனால் எதிரிகளையும் துரோகிகளையும் அரக்க குணத்தோடு எதிர்ப்பார்கள். தற்போது அவர்களிடையே, தங்களை "இந்துவாக அடையாளப்படுத்திக் கொள்வதா அல்லது தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொள்வதா" என்ற ஒரு மயக்க நிலை உள்ளது. அது மாறும் நிலை ஏற்பட்டு விட்டது. தமிழர்களின் எதிர்கால அரசியல் முக்குலத்தோரின் கையில் உள்ளது.

முக்குலத்தோர் இந்து என்ற அடையாளத்தில் இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் மத விவகாரங்களில்  கண்மூடித்தனமாக செயல்பட மாட்டார்கள். அவர்கள், முன்னோர் வழிபாட்டை பின்பற்றக் கூடியவர்கள். குலங்களுக்கு, குல தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இனத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.

தேவரைப் பற்றி பேசுவதற்கு முன் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவரது கொள்கை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். தேவர் "அர்ச்சகர்" யார்? "அந்தனர்" யார் என்று பிரித்துக் காட்டியவர்? வயிறு வளர்க்க அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் எல்லாரும் அந்தனர் ஆகிவிட முடியாது என்று சொன்னவர். சுப்பிரமணிய சாமி உட்பட இந்து அமைப்புகளின் உச்சத்தில் அமர்ந்து கோலோச்ச விரும்பும் பிராமண ஆசாமிகள் அனைவரும், குறைந்தபட்சம் இந்து மத விவகாரங்களில் தேவரின் கொள்கைகளை ஏற்று அவரை தலைவராக ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பார்களா? ஒரு தேவரை தங்கள் அமைப்புகளுக்கு தலைவராக்கி அவரின் கீழே செயல்படத் தயாராக இருப்பார்களா?

தேவர், இந்து மதத்தின் பெயரில் வயிறு வளர்க்கும் போலிச் சாமியார்கள், மடாலயங்களை கடுமையாகச் சாடியவர். அதையெல்லாம் இந்த இந்து மத ஆசாமிகள் ஏற்பார்களா? தேவர், வெள்ளையருக்கு எதிராக "தீவிரவாதத்தை" கொள்கையாகக் கொண்டாலும் உண்மையில் வள்ளலாரின் ஜீவகாருண்யத்தை பின்பற்றுபவராக வாழ்ந்தவர்.

* பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர். தீவிரவாதத்தில் நம்பிக்கை கொண்டவர். நீங்கள் தீவிரவாதத்தில் நம்பிக்கை கொண்டவரா? காஷ்மீர் தீவிரவாதிகள், வடகிழக்கு மாநில தீவிரவாதிகள், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஏற்கத் தயாரா? அவர்களை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

* நேதாஜி மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். குறிப்பாக தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். உங்களால் தமிழை ஆட்சி மொழியாக்க முடியுமா?

* தேவர், தீவிரவாதத்தில் நம்பிக்கை கொண்டிருந்தாலும் ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டவர். உங்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளதா? ஒருபோதும் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று உத்தரவாதம் தர முடியுமா? ஒவ்வொரு முக்கிய பிரச்சனைக்கும் பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா?

* நேதாஜி உருவாக்கிய "பார்வர்டு பிளாக்" ஒரு இடதுசாரிக் கட்சி. அது ஏழைகளுக்கான, உழைப்பாளர்களுக்கான, சமுதாயத்தில் அடித்தட்டில் உள்ள மக்களுக்கான கட்சி. கார்பரேட்களுக்காக வேலை செய்யும் உங்கள் கட்சி (பிரதமர்)  எங்கே? தேவர் எங்கே?

* தேவர், நேதாஜியை தேசப் பிதாவாக ஏற்றவர். நீங்களும் அப்படி ஏற்கத் தயாரா?

* தேவர், மதங்களை சமமாகப் பார்த்தவர். நீங்கள் அப்படிப் பார்க்கத் தயாரா?

* தேவர், தன் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில், விசாரணை முடியும் வரை ஜாமீனில் வெளியே வராதவர். தான் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்ட பின்னரே சிறையிலிருந்து வெளி வருவதை வழக்கமாக கொண்டவர். உங்களால் அப்படி இருக்க முடியுமா?

* தேவர், தன் சொத்துக்களை மற்றவர்களுக்குத் தானமாக கொடுத்தவர். உங்களால் அப்படிச் செய்ய முடியுமா?

* தேவர், அரசியலில் ஈடுபட்டாலும் முழுச் சன்யாசியாக தவ வாழ்க்கை வாழ்ந்தவர். உங்களால் அப்படி வாழ முடியுமா?

* தேவர், தனக்கு அமைச்சர் பதவி கிடைத்தபோதும் அதை ஏற்க மறுத்தவர்.  உங்களால் அப்படிச் செய்ய முடியுமா?

* தேவர், சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டபோது "பெற்ற தாய்க்கு உழைத்ததற்கு கூலி வாங்குவீர்களா" என்று சொல்லி தன் தொண்டர்களை கண்டித்தவர்.  உங்களால் அப்படிச் செய்ய முடியுமா?

* தேவர், இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற கீழை நாடுகளுடன் நட்புறவு கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுவே ஆசிய -ஆப்பிரிக்க நாடுகளுக்கு, இனங்களுக்கு நல்லது என்றார். அவர் எங்கே? ஆங்கில, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு வால்பிடிக்கும் நீங்கள் எங்கே?

* ஒரு அரசு அந்நிய நாட்டிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள ராணுவத்தையும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையையும் பயன்படுத்த வேண்டும், சொந்த மக்களை ஒடுக்க இவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறினார். அதை நீங்கள் ஏற்பீர்களா?

* தேவர், இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று சொல்லப்படுவதையே ஏற்றுக் கொள்ளவில்லை. பார்வர்டு பிளாக் கட்சி இன்னமும் இந்திய சுதந்திரத்தை கொண்டாடுவதில்லை. இதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்களா? இரண்டாவது சுதந்திரத்தை அடைய, அளிக்க நீங்கள் தயாரா?

* உண்மையிலேயே உங்களுக்கு தேவர் மீது பற்று இருந்தால் வேறு எதையும் செய்ய வேண்டாம், தேவர் குருபூஜைக்கு விதிக்கப்படும் தடைகளை அகற்றிக்காட்ட முடியுமா, சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்வீர்களா? (இந்த மடலை உங்களுக்காக எழுதவில்லை. உங்களையும் சுப்பிரமணிய சாமியையும் தலைவர்கள் என்று நம்பிக் கொண்டு திரியும் சில தேவர்மார்களுக்காக எழுதுகிறேன்)

இஸ்லாம் என்ற பெயரில் மூளைச் சலவைக்கு ஆளாகி ஒரு குற்றம் செய்யும் ஒருவரும், இந்து என்ற மூளைச் சலவைக்கு ஆளாகி வார்த்தைகளில் குற்றம் செய்து வரும் உங்களைப் போன்றவர்களும் ஒன்றே. காந்தியை ஒரு இஸ்லாமியர் கொன்று விட்டார் என்ற வதந்தியால் அப்பாவி முஸ்லீம்கள் தாக்கப்பட்டு விடக் கூடாது என்று பிரச்சாரம் செய்த அதே தேவர், இந்துப் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக முஸ்லீம் இளைஞர்களை தண்டிக்கத் துணிந்தவர். எங்களுக்கு எல்லா மதங்களும் சமமே. மதம் என்பது அடையாளமே. இனம் என்பதே தலை. இந்துக்களாக இருப்போம். இந்துக்களுக்கு மரியாதை தருவோம். இஸ்லாமியராக இருப்பவரையும் அரவணைப்போம். அவர்களுக்கு மரியாதை தருவோம். உங்கள் மூளைச் சலவைகள் எங்களிடம் எடுபடாது.

தேவர் அப்பழுக்கற்ற ஆன்மீகவாதி, சித்தர், மகான். அவரது பெயரை (நான் உட்பட) எந்தவொரு தனிநபரோ, அமைப்போ, அரசியல் கட்சியோ தன் சுய லாபங்களுக்காக பயன்படுத்தினால், அந்த நபர், அந்த அமைப்பு அழிந்து போய்விடும் என்பது கண்கூடு. அர்ஜூன் சம்பத் எந்த மூலைக்கோ?
-----------------------------
இணைப்பில்...
ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும், பாஜகவையும் தேவர் ஆதரித்தாரா?


http://perumalthevan.blogspot.in/2016/10/blog-post_5.html

Wednesday, October 12, 2016

வடலூரில் நடந்த அதிசயம்ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று வடலூரில் சமரச சுத்த சன்மார்க்கம் பற்றி தேவர் பேசுவார். அவரது பேச்சை கேட்பதற்காகவே ஆயிரக்கணக்கான வள்ளலாரின் பக்தர்கள் வடலூர் வருவர்.

வழக்கம்போல வடலூரில் தேவர் பேசத் தொடங்கும் முன்பாக, முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தேவரிடம் ஒரு செய்தியைச் சொன்னார்.

"வடலூர் ராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவருடைய வீட்டில் ராமலிங்க அடிகளால் பாடிய, இதுவரை அச்சுக்கு வராத ஒன்பது பாடல்கள் அடங்கிய ஏட்டுச் சுவடி இருக்கிறது. அதனை மடத்துக்கு தந்தால், அச்சில் ஏற்றி, நூல் வடிவாக எல்லாரும் படிக்கும் வண்ணம் செய்யலாம்" என்றும்,  "அடிகளாரின் உறவினரிடம் பலதடவை கேட்டும் அவர் தர மறுக்கிறார். தாங்கள்தான் இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்" என்றும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தேவரிடம் கூறினார்.

"அந்தச் சுவடியை வரவழைக்க வேண்டிய விதத்தில் வரவழைப்போம், நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று ஓபிஆரிடம் சொல்லிவிட்டு தேவர் பேசத் தொடங்கினார்.

ராமலிங்க அடிகளாரின் அருட்பா பற்றி ஒரு மணிநேரம் பேசி விட்டு, ராமலிங்க அடிகளாரின் உறவினர் பற்றி பேசினார். "ராமலிங்க அடிகளாரால் பாடப்பட்டு, இதுவரை அச்சுக்கு வராமல் உள்ள ஏட்டுச் சுவடியில் ஒன்பது பாடல்கள் இருப்பதாகவும், அந்தச் சுவடியை ராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவர் வைத்துக் கொண்டு மடத்துக்கு தர மறுப்பதாகவும் ஓபிஆர் அவர்கள் என்னிடத்தில் சொன்னார்.

அடிகளாரின் உறவினருக்கு இந்தக் கூட்டத்தின் வாயிலாகச் சொல்கிறேன். அந்தச் சுவடியை மடத்துக்குத் தந்து மக்களுக்குப் பயன்படும்படி செய்யுங்கள். அல்லது தாங்களே அந்தச் சுவடியை நூலாக வெளியிடுங்கள். இரண்டையும் செய்யாமல் தாங்கள் பிடிவாதமாக இருப்பதால், அடிகளாரின் அந்த ஒன்பது பாடல்களும் உலகத்துக்குத் தெரியாமலேயே போய்விடும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.

இதுவரை உலகத்திற்கு தெரியாமல் நீங்கள் ஒளித்து வைத்துள்ள அந்த ஒன்பது பாடல்களையும் அடியேன் பாடுகிறேன் கேளுங்கள்" என்று மடமடவென அந்த ஒன்பது பாடல்களையும் தன் வெங்கல நாதத்தில் பாடி முடித்தார். அவர் பாடி முடித்த சற்று நேரத்தில் ராமலிங்க அடிகளாரின் உறவினர் அந்த ஏட்டுச் சுவடியோடு வந்து தேவரின் பாதத்தில் விழுந்து வணங்கி, "ஐயாதாங்கள் தேவரல்ல. தாங்கள்தான் ராமலிங்க சுவாமிகள், என்னை மன்னித்து விடுங்கள்" என்று கூறி "தாங்கள் பாடிய ஒன்பது பாடல்கள்தான் இந்த ஏட்டுச் சுவடியில் இருக்கின்றன. இதனை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று சுவடியைத் தேவரிடம் தந்தார்.

தேவர் அந்தச் சுவடியைப் பெற்றுக் கொண்டு, "எல்லாம் ஈசன் செயல்" என்று சொல்லி முடிப்பதற்குள், ஓபி ராமசாமி ரெட்டியார் எழுந்து வந்து தேவரை கட்டிப்பிடித்தபடி, அவரது கைகளை எடுத்து தனது கண்களில் ஒற்றிக் கொண்டு "ராமலிங்க சுவாமிகளே தாங்கள்தான்" என்று உரக்க சத்தமிட்டு கூறினார். கூடியிருந்த கூட்டம் கரவொலி எழுப்பி பெருத்த ஆரவாரம் செய்தது.


- முடிசூடா மன்னன் முத்துராமலிங்கத் தேவர் நூலிலிருந்து...

ஈழம்ராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஒன்று ஈழமும் ஒன்று என்பதை இம்மன்னனது 'திருமகள் போல' என்று தொடங்கும் கி.பி. 993-ம் ஆண்டு மெய்க்கீர்த்தியால் அறியலாம். கொடுமை மிக்க சிங்களர் வசமிருந்த ஈழ மண்டலத்தை இம்மன்னன் கைப்பற்றியதன் மூலம், இவனது புகழ் எண் திசைகளிலும் பரவியது.

தஞ்சையில் இவன் எடுப்பித்த சிறந்த கோயிலுக்கு ஈழத்தின் பல கிராமங்களை இவனுடைய 29-ம் ஆண்டில் (கி.பி. 1014) தானமாக அளித்தான். ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக் குறிப்பிடுன்றன.

"குரங்குகளின் துணையுடன் ராமபிரான் ஒரு கடற்பாலத்தைக் கட்டி, பிறகு, கூர்மையான அம்புகளால் மிகவும் சிரமப்பட்டு இலங்கை மன்னனை வதைத்தான்." ஆனால் இந்தச் சோழ மன்னன் ராமனினும் மேம்பட்டவன். இவனுடைய வலிமைமிக்க படை, கப்பல்கள் மூலம் கடலைக் கடந்து இலங்கை மன்னனை அழித்தன என்று கூறுகிறது.

இப்படையெடுப்பின்போது ஈழ மண்டலத்தில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தவன், கி.பி. 981-ம் ஆண்டில் பட்டம் பெற்ற ஐந்தாம் மகிந்தன் என்பவனே, முதலாம் ராஜேந்திரனின் தலைமையில் சோழப்படை சென்றபோது இம்மன்னனே ஆட்சியில் இருந்தான். ஆனால் ராஜராஜனின் படையெடுப்பு பற்றி மகாவமிசம் குறிப்பிடவில்லை.

மகிந்தன் ஆட்சியில் பத்தாம் ஆண்டிற்கு (கி.பி. 991) பிறகு ஓர் ராணுவ புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பெரும் குழப்பம் விளைந்தது. கேரள கன்னட வீரர்களின் செல்வாக்கு இவன் நாடு முழுவதும் பரவியதே இந்த குறைபாட்டுக்குக் காரணமாகலாம். ராணுவ புரட்சியின் விளைவாக மகிந்தன் ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்குத் தப்பி ஓடிவிட்டான்.
இதனால் ஈழமண்டலத்தின் வடபகுதியை ராஜராஜன் எளிதில் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டான்.

-கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய "சோழர்கள்" நூலிலிருந்து


சாதி ஒழிப்பின் முன்னோடி ராஜேந்திர சோழன்

ராஜேந்திரன் தலைமை

தார்வார் மாவட்டம் ஹொட்டூரில் கி.பி. 1007-ம் ஆண்டைச் சேர்ந்த (929) (சாளுக்கிய மன்னன்) சத்தியாசிரயனின் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. சோழ குலத்திற்கு அணியாக விளங்கியவனும் ராஜராஜ நித்தியா விநோதனின் மகனுமாகிய நூர்மடிச் சோழ ராஜேந்திர வித்தியாதரன் என்பவன், ஒன்பது லட்சம் வீரர்கள் அடங்கிய பெரும்படையுடன் பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள தோனூர் வரையில் வந்து பெரும்போர் புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும், நகரங்களை கொளுத்தியும், ளங்குழவிகள், அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும், கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கியும், அந்தச் சாதியைச் அழித்தும் அளவற்ற பொருட்களை கவர்ந்துகொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்றான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது.

இதன் பிறகு தமிழரைக் கொன்ற (திருள-மாரி) சத்தியாசிரயன் சோழரை விரட்டியடித்து, அவரிடமிருந்து தன் வஸ்து-வாகனத்தை மீட்டு தென் பகுதியையும் கைப்பற்றினான் என்று இதே கல்வெட்டு மேலும் கூறுகிறது. பகைவனின் கல்வெட்டில் காணப்படும் பெரும் நாச வேலைகளையும் கற்பழிப்புகளையும் சோழ இளவரசன் செய்திருக்கக் கூடுமா என்ற வினா எழுந்தாலும் ராஜேந்திரன் மேலைச் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று இரட்டபாடியை வென்றான் என்ற செய்தி உறுதிப்படுத்தப்படுகிறது.

ஆனால் விரைவிலேயே சத்தியாசிரயன் கடும்போரின் விளைவாகச் சோழப் படையெடுப்பைத் தடுத்தது நிறுத்தினான். நுளம்பாடியிலும், காணப்படுவதைப் போன்று, இரட்டபாடியைச் சோழர் கைப்பற்றினர் என்பதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை.

சோழர்கள் நூலிலிருந்து...
இப்போது புரிகிறதா திராவிடர்களும், முற்போக்கு முகமூடிகளும் சாதியை ஒழிக்க வேண்டும் ஏன் துடிக்கிறார்கள் என்று.

Tuesday, October 11, 2016

தேர்தலைத் தள்ளி வைப்பதற்கான காரணம் என்ன?


ஜனநாயகம் என்பது பூர்ணமாக எந்த நாட்டிலும் நடைெபறுவதில்லை. அதுவும் விசேஷமாக நம் நாட்டில் நடைபெறவில்லை என்றாலும் கூட, ஜனநாயகம் இந்த நாடடில் உயிரோடு இருக்க வேண்டுமென்றால், ஜனநாயகம் இந்த நாட்டில் தழைத்து, வளர்ந்து மற்ற நாட்டிற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமென்றால், மக்களின் அபிப்ராயம் எப்பொழுதும் பிரதிபலிக்கும்படியாகச் செய்ய வேண்டும். தங்கள் பிரதிநதிகளை தேர்ந்தெடுத்து, சட்டசபைக்கு அனுப்பும் மக்கள், அவர்களுடைய பிரதிநிதி கொடுத்த வாக்குறுதிப் பிரகாரம் நடக்கத் தவறினால், அவனை அதிகாரத்திலிருந்து நீக்குவதற்கான அதிகாரம் இல்லை.

ஆகவேதான் தேர்தலில் நிற்கும்பொழுது மக்களுக்குச் சாதகமாகப் பேசி ஓட்டு வாங்கிக் கொண்டு வருபவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டு  பதவிக்கு வந்தவுடன் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்து விடுகிறார்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதே கிடையாது. அத்தோடு எந்தப் பிற்பட்ட ஜனநாயக சக்திக்கு விரோதமாகப் போராடி, மக்களின் அபிமானத்தைப் பெற்று ஓட்டு வாங்கி வந்தார்களோ, அப்படிப்பட்ட பிற்பட்ட ஜனநாயக சக்தியோடு சேர்ந்து வேலை செய்யவும் துணிந்து விடுகிறார்கள். அதனாலேயே ஜனநாயகம் பேச்சில் ஒன்றாகவும், நடைமுறையில் வேறு விதமாகவும் இன்றைய தினம் இந்த நாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.

எந்தெந்தக் காரியங்களை எல்லாம் மக்களுக்குச் செய்வதாகச் சொல்லி, வாக்குறுதி அளித்து ஓட்டு வாங்கிக் கொண்டு அதிகாரத்திற்கு வந்தார்களோ, அந்தக் காரியங்களைச் செய்வது கிடையாது. அந்தக் காரியங்களை செய்யவில்லை என்று சொல்பவர்களிடம் ஆத்திரத்தைக் கக்குவது, கோபத்தைக் காட்டுவது, வீண் புரளி பண்ணுவதாக அபாண்டத்தைச் சுமத்தி ஜனநாயகத்தை அடியோடு கொலை செய்ய முயற்சிப்பது ஆக இவைகளையெல்லாம் அவர்கள் கையாளுவதன் நோக்கம், பதவியை நீடித்ததுப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற பேராசையில்தான், பதவி ஆசை பிடிக்கும் பொழுதுதான் அவர்கள் ஜனநாயகத்திற்கு எதிரான காரியங்களைச் செய்யத் தலைப்படுகிறார்கள். மக்கள் தங்கள் தவறை உணர்ந்து சரியான பிரதிநிதியை மறுபடியும் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், அவர்கள் மறுபடியும் எப்பொழுது தேர்தல் வருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

ஆகவே மறுபடியும் தேர்தல் வந்தால் தாங்கள் நிச்சயமாகத் தேர்ந்தெடுக்கப்பட மாட்டோம் என்ற எண்ணம் தலையெடுத்தவுடன்தான், தேர்தலையே ஒத்திபோட்டு விடலாம் என்ற, ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமான எண்ணத்தை, அதிகாரத்தில் இருப்பவர்கள் எண்ணும்படியாக நேரிடுகிறது. இதனால் அவர்கள் செய்யப்போகும் தவறு என்ன என்பதைக் கூட அவர்கள் சிந்திக்க மறுத்து விடுகிறார்கள். ஆனால் தாங்கள் திரும்பவும் பதவிக்கு வர முடியாது, அதனால்தான் தேர்தலை ஒத்திபோடுகிறோம் என்று சொல்லாது, ஆந்திர மாகாணப் பிரிவினை (போன்ற) காரணமாகத் தேர்தலை நடத்த முடியாததால் ஒத்தி போட்டுவிடலாம் என்று மறைமுகமாக, மக்களை ஏமாற்றும் வகையில் காரணங்களை உண்டுபண்ணிக் கொண்டு, முன்னணி, பின்னணி அலங்காரத்தோடு சபைக்கு வருகிறார்கள்.


-  1953 மார்ச் 30-ம் தேதி சட்டசபையில் ஜில்லா போர்டு தேர்தலைத் தள்ளி வைப்பதற்கான தீர்மானத்தின் மீதாக தேவர் பேசியது

சட்டப் பேரவையில் பசும்பொன் தேவர் நூலிலிருந்து

Wednesday, October 5, 2016

ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும், பாஜகவையும் தேவர் ஆதரித்தாரா?


தேவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும், பாஜகவையும் தேவர் ஆதரித்தார் என்று ஒரு தம்பி சொல்கிறார்.


இதுபோன்ற மூளைச் சலவையில் இருப்பவர்களுக்காக இந்த கடிதம். தேவர் இந்து மத பற்றாளராக இருந்தாரே ஒழிய இந்து தீவிரவாத அமைப்புகளில் இருக்க வில்லை.


1935-ம் ஆண்டு வீர் சாவர்க்கர் திருநெல்வேலியில் பேசினார். அவரது தீவிரமான பேச்சால் மதுரை கூட்டத்திற்கு தலைமை வகிக்க ஒப்புக் கொண்டவர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். பின்னர் அந்த கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் பொறுப்பு தேவருக்கு கொடுக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய தேவர் சாவர்க்கரின் தீவிரவாத கொள்கையை ஏற்கிறேன். அதன் பலனாக என்ன கிடைத்தாலும் பரவாயில்லை என்று பேசினார்.


பின்னர் பேசிய சாவர்க்கர், தேவரை "தென்னாட்டுத் திலகர்" என்று போற்றினார். மேலும் தேவர் போன்ற தீவிரவாதிகள் நாடுமுழுவதும் தோன்ற வேண்டும் என்று பேசினார். வீர் சாவர்க்கர் ஒரு இந்து என்பதால் தேவர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர் ஒரு தீவிர சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால் அதில் கலந்துகொண்டார். வெள்ளை அரசு சுதந்திரப் போராட்ட வீரர்களை மதவாதிகளாக காட்ட முயன்றது என்பது வேறு விஷயம். தேவர் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு தீவிரவாதி. ஆனால் மத விஷயத்தில் அப்படி இல்லை.


1938-ம் ஆண்டு ராஜாஜி தலைமையிலான மத்திய அரசு அரிஜன ஆலய நுழைவு உரிமையை சட்டமாக்கியது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆலய நுழைவை நடத்தும் பொறுப்பு காந்தியின் தீவிர பக்தரான வைத்தியநாத ஐயரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ஆலய நுழைவு நடத்தினால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரத்த ஆறு ஓடும் என்று சனாதனிகள் எச்சரித்தனர். சனாதனிகள் என்பது ஆர்எஸ்எஸ்-காரர்களே. சனாதன மதம் என்பதுதான் இந்து மதத்தின் பழைய பெயர்.


அப்போது வைத்தியநாத ஐயர் மதுரை சிறையிலிருந்த தேவரின் உதவியை நாடினார். தேவர் சனாதனி ரவுடிகளை எச்சரித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் ஆலய நுழையவில் நானும் கலந்துகொள்வேன். ரவுடிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தார். அதன் பின்னரே ஆலய நுழைவு அமைதியாக நடைபெற்றது.
1948-ம் ஆண்டு நாதுராம் கோட்ஸே காந்தியை கொலை செய்ததும் மதுரையில் யாரோ முஸ்லீம் ஒருவர்தான் காந்தியை கொன்று விட்டதாக வதந்தி பரப்பப்பட்டது. அந்த வதந்தி முஸ்லீம்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டது.


அப்போது தேவர் காந்தியை கொன்றது ஒரு முஸ்லீம் அல்ல, ஒரு இந்துதான் என்று மதுரை மக்களிடையே பிரச்சாரம் செய்து அமைதியை நிலைநாட்டினார். இவ்வாறு தேவர் ஒரு இந்துவாக இருந்தாரே தவிர இந்து தீவிரவாதிகளுக்கு அவர் ஒருபோதும் ஆதரவாக இருந்ததில்லை.


தேவர் தலைவராக இருந்த ஒரே இந்து அமைப்பு பசும்பொன் அருகேயுள்ள அபிராம் கிராமத்தில் உருவாக்கப்பட்ட இந்து மகா சபைதான். அதுவும் ஏன் உருவாக்கப்பட்டது என்றால் அந்த கிராமத்தில் ஏற்பட்ட இந்து - முஸ்லீம் பிரச்சனைக்கு தீர்வு காணவே.


அந்தக் கிராமத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று பொருளீட்டிய முஸ்லிம் செல்வந்தர்கள் பலர் இருந்தனர். பொது சந்தை முஸ்லீம்களின் பகுதியில் இருந்தது. சந்தையில் வியாபாரம் செய்யும் இந்துப் பெண்களிடம் முஸ்லீம் இளைஞர்கள் முறை தவறி நடந்துகொண்டார்கள். இந்தப் பிரச்சனை தேவரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவர் முஸ்லீம் பெரியவர்களுக்கு தகவல் சொல்லி அனுப்பினார். ஆனால் முஸ்லீம் பெரியவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை.


முஸ்லீம் இளைஞர்களின் அட்டூழியங்கள் தொடர்ந்தன. தேவர் வெளியூர்க்காரர் இந்தப் பிரச்சனையில் தலையிடக் கூடாது என்று முஸ்லீம்கள் தரப்பில் சொல்லப்பட்டது.


இதைத் தொடர்ந்து அந்த கிராம மக்கள் தேவரின் பெயரில் அந்த கிராமத்தில் ஒரு வீடு வாங்கியதோடு அவரை இந்து மகாசபை என்ற அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகவும் தேர்வு செய்தனர்.


அதன் பின் தேவர் அந்த கிராமத்தில் முஸ்லீம் கடைகளில் பொருட்களை வாங்கக் கூடாது என்ற ஒத்துழையாமை போராட்டத்தை துவக்கினார். இதனால் முஸ்லீம்களின் வியாபாரம் படுத்தது. அவர்கள் தேவர் முஸ்லீம்களுக்கு எதிராக நடக்கிறார் என்று சொல்லி அருகேயுள்ள ஊர்களான முதுகுளத்தூர், கமுதி, பெருநாழி போன்ற ஊர் முஸ்லீம்களிடம் உதவி கோரினர்.


ஆனால், நீங்கள் தொடக்கத்திலேயே நமது இளைஞர்களை கண்டித்திருந்தால் விவகாரம் இந்த அளவுக்கு முற்றி இருக்காது, இதற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என்று கூறி ஒத்துழைக்க மறுத்து விட்டனர். இது தொடர்பாக தேவர் மீது கலவர வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு பிறகு இதுபோன்ற ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்துவதில் தவறில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.


அதேபோல தேவர் ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த கோல்வால்கரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதாக ஒரு புகைப்படத்துடன் ஒரு பொய் பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் அறிவாளிகள் செய்து வருகின்றனர். அந்த புகைப்படத்தில் இருப்பவர் தேவரும் அல்ல. அந்த தகவலும் பொய்யானது.


1980-ம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட அரசியல் கட்சியான பாரதிய ஜனசங்கம் 1951-ம் ஆண்டில் துவக்கப்பட்டது. அப்போது தேவர், தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.


தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் தமிழர் விரோத கட்சியான பாஜக எத்தனையோ மூளைச்சலவையைச் செய்யலாம் உஷாராக இருந்துகொள்ளுங்கள்.


https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
https://en.wikipedia.org/wiki/All_India_Forward_Bloc
https://en.wikipedia.org/wiki/Rashtriya_Swayamsevak_Sangh

https://en.wikipedia.org/wiki/Bharatiya_Janata_Party

Tuesday, October 4, 2016

வேட்பு மனு தாக்கல்

முதல் முறையாக எங்கள் ஊரில் (தேவதானப்பட்டி, தேனி மாவட்டம் ) 5, 6-வது வார்டுகளில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் சிங்க சின்னத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோம்.
6 வது வார்டில் நான்
 மனுத் தாக்கல் செய்தபோது எடுத்த படம். இது ஒரு அடையாள நிமித்தமான போட்டிதான். அடுத்தடுத்த தேர்தல்களில் முழுப் போட்டி அமையும்.
பிகு - அதிமுக துண்டு போட்டவர் அதிமுக வேட்பாளர். அவர் மனுத் தாக்கல் செய்த பின்னர்தான் நாங்கள் மனுத் தாக்கல் செய்தோம். படத்தில் அவரும் இடம்பெற்று விட்டார்.

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...