Saturday, February 18, 2017

தமிழ்த் தேசியமும் அதிமுக ஆதரவும் (?)அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டது முதல் அவர் இறந்தது வரையான கடந்த சில மாதங்களாக (நவம்பர்-2016 முதல் பிப்ரவரி-2017 வரை) தமிழக அரசியலில் பெரும்புயல் வீசி ஓய்ந்துள்ளது. அது இன்னும் தொடரும் என்று சிலர் சொல்கிறார்கள். சிலர் அவ்வாறு தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இந்தச் சூழலில் கடந்த 6 ஆண்டுகளாக தமிழ்த் தேசிய அரசியல் குறித்தும், தமிழ்ச் சமூக அரசியல் குறித்தும் பேசிவரும் நான் இந்த அரசியல் சிக்கல்களில், அதிமுகவில் பெரும்பான்மை கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தேன். இந்த போட்டியில் சசிகலா-பன்னீர் செல்வம் ஆகிய இருவரில் யார் வெற்றி பெற்றாலும் நான் அவர்களை ஆதரிப்பேன் என்று பலமுறை தெளிவுபடுத்தினேன்.

அதற்கு காரணம் என்னவென்றால் ஏறக்குறைய 45 ஆண்டுகாலத்திற்கு பின்னால் அதிமுகவின் தலைமை பீடம் தமிழ்ச் சாதியினருக்கு கிடைத்துள்ளது என்பதால்தான். இன்னும் குறிப்பாக, இதே இடத்தில் மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் கிருஷ்ணசாமி, திருமாவளவன், ஜி.கே.வாசன் போன்றோர் இருந்தாலும் அவர்களுக்கும் நமது ஆதரவு உண்டு என்பதை தெளிவுபடுத்தினேன்.

இருந்தாலும் மிகவும் நன்றாக அறிந்த சிலர் கூட எனது நிலைப்பாடு பற்றி கேள்வி எழுப்பிய காரணத்தால் இந்த மடலை எழுத வேண்டியதாயிற்று. இளங்கலை அரசியல் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வாழ்க்கைச் சக்கரத்தில் உழன்று கொண்டிருந்த என்னை ஈழப்போர், தமிழின அழிப்புதான் அரசியல் பற்றிச் சிந்திக்கச் செய்தது.

அவ்வாறு அரசியல் குறித்து சிந்திக்கத் தொடங்கியபோது தமிழகத்தில் உள்ள அரசியல் சிக்கல்கள், சமூக சிக்கல்கள் போன்றவற்றையெல்லாம் அலசி ஆராய நேரிட்டது. அப்போது தமிழ்த் தேசியம் என்ற கருத்தியலை நம் முன்னோர்கள் பேசிச் சென்றதையும், வெள்ளையரிடம் அடிமைப்பட்டிருந்த தமிழினம் தற்போதும் தங்கள் இறையாண்மையை இழந்து அடிமைப்பட்டிருப்பதையும் உணர முடிந்தது. அப்போது இந்தியா என்ற குறைமாதக் குழந்தையும் அதனால் நமக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களையும் உணர முடிந்தது.

அதன் பின்னர்தான் தமிழ்த் தேசியத்தின் அவசியத்தை உணர்ந்து அது குறித்துப் பேசத் தொடங்கினேன். நான் தமிழ்த் தேசியத்தின் ஏகபோக குத்தகைக் காரன் கிடையாது. எனது சிந்தனைக்கு, அறிவுக்குப் புலப்பட்டவற்றை நான் பேசி வருகிறேன். என்னை விட சிறந்த தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள், தலைவர்கள் தற்போதும் இருக்கிறார்கள், இனிமேலும் தோன்றலாம்.

வானத்திலிருந்து கோட்டையைக் கட்ட முடியாது, சிறு மண் சுவர் ஆனாலும் அதனை நிலத்திலிருந்துதான்  கட்டியமைக்க முடியும் என்ற கருத்தின் அடிப்படையில் நான் அரசியல் பேசி வருகிறேன். எனவே எனது அரசியல் கருத்துக்கள் அனைத்தும் உண்மை நிலை, களநிலையை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும். உணர்ச்சியை, கற்பனையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்காது.

அவ்வாறு இருக்கும்போது தற்போதுள்ள தமிழக அரசியல் சூழலை வைத்துத்தான் தமிழ்த் தேசியம் குறித்துப் பேச முடியும். அந்த வகையில் நான் தற்போதைய தமிழ்த் தேசிய அரசியல் குறித்தும் திராவிட அரசியல் குறித்தும் பேசி வருகிறேன். ஜெயலலிதா இறந்தவுடன் அதிமுகவின் அதிகாரம் தமிழர்களின் கைக்கு வந்துவிடும் என்பதை என் போன்றவர்கள் பலமுறை பேசியுள்ளோம்.

எதிர்பாராத நிலையில் ஜெயலலிதா விரைவிலேயே இறந்து விடவே அவரது அதிகாரம் தமிழர்களின் கைகளுக்கு வந்துவிட்டது. இந்தக் கோணத்தில்தான் நான் இந்த அதிகார மாற்றத்தைப் பார்க்கிறேன். சசிகலா நல்லவரா? கெட்டவரா? அவரது கைக்கு அதிகாரம் போவது சரியா? தவறா என்று நான் பார்க்கவில்லை.

ஜெயலலிதா என்ற திராவிடத் தலைமை இறந்த உடனேயே தமிழர்களுக்கு ஒரு நன்மை நடந்தது. அது மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டத்தால் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்ததாகும். ஏற்கனவே திராவிடர்கள் தமிழர்களாக நடித்து தமிழர்களுக்கு நன்மை செய்வதாக நடித்து அரசியல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திராவிடக் கருத்தியலில் இருந்தாலும் கூட, சசிகலா தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார். எனவேதான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது. இதுபோல தமிழர் நலன் குறித்த அக்கறை கொண்டவர்களாக நடிக்க, அல்லது காட்டிக் கொள்ள இவர்கள் தமிழர் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பார் அல்லது எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவார் என்பதுதான் எனது நம்பிக்கை. மற்றபடி நாளையே இவர்கள் தமிழ்த் தேசத்தை மலரச் செய்வார்கள் என்பது என் நம்பிக்கையல்ல.

அடுத்தாக சசிகலாவுக்கு ஏன் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அவர் சாதியில் கள்ளராக இருக்கிறார். அதேவேளையில் பன்னீர் செல்வம் முக்குலத்தோரில் மற்றொரு பிரிவான மறவர் சாதியைச் சேர்ந்தவராக இருக்கிறார். இவர்கள் இருவரும் எனக்கு ஒன்றே. ஆனால் அதிமுக என்ற அந்தக் கட்சிக்குள்ளே யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்று பார்த்தோமானால் அது சசிகலா குடும்பத்தினருக்கு என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக உள்ளது.

பன்னீர் செல்வம் எனது மாவட்டத்தை, எனது பக்கத்து ஊரைச் சேர்ந்தவர் என்பதால் அவரை நான் நன்கு அறிவேன். கட்சிக்குள் தனக்கு செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்வது அவரது நோக்கமாக இருக்கவில்லை. ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்று இரண்டு முறை குற்றம் சொல்ல முடியாத அல்லது சர்ச்சையில் சிக்காத முதலமைச்சராக இருந்தார் என்பதைத் தவிர அவருக்கு அதிமுக கட்சியைக் கட்டிக் காப்பாற்ற, வழிநடத்த வேண்டிய தகுதி இல்லை. அதை கடந்த பத்து நாட்களாக நடந்தேறிய அரசியல் காட்சிகளும் உண்மையென நிரூபிக்கின்றன.

கடந்த இரண்டு முறையும் முதலமைச்சராக இருந்த பன்னீர் செல்வம் ஒரு மனித இயந்திரம் போல செயல்பட்டார். அவர் எப்படி திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு கதாநாயகன் ஆனார்? அவரது இந்த தலைநிமிர்வுக்கு காரணமாக இருந்தது மோதி என்ற உத்தமர் ஆவார். அவர் எப்படியாவது அதிமுக கட்சியை உடைத்து விடலாம் என்று கணக்குப் போட்டார். அதற்காக நடத்தப்பட்ட நாடகம்தான் ஆளுநரின் இழுத்தடிப்புகள். இருந்தாலும் ஒரு சிலரைத் தவிர அதிமுகவின் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் அவர் பக்கம் செல்லவில்லை.

இது பன்னீர் செல்வத்தின் பலவீனத்தையே உணர்த்துகிறது. ஒருவேளை 20-30 எம்எல்ஏக்கள் அவர் பக்கம் சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்? அதிமுக தொடர்ந்து ஆட்சி அமைக்க முடியாமல் போயிருக்கும். தனக்குள்ள சொற்ப எம்எல்ஏக்களுடன் திமுகவின் ஆதரவு பெற்று அவர் ஆட்சி அமைத்தால் அது நீடிக்கவும் செய்யாது. அதிமுகவின் எதிரியான திமுகவின் ஆதரவைப் பெற்றதால் நிரந்தர துரோகி என்ற பட்டமும் அவருக்கு கிடைத்திருக்கும்.

சேகர் ரெட்டியுடன் கொண்ட தொடர்பை வைத்துதான் மோடி அந்த வழக்கில் பன்னீர் செல்வம் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டி அடிபணிய வைத்தார். அப்படி அவர் சிறிது காலம் முதல்வராக தொடர்ந்திருந்தாலும் அது மோடியின் மறைமுக ஆட்சியாகவே இருந்திருக்கும். அது தமிழர்களுக்கும், அதிமுக கட்சிக்கும் எதிரான ஒன்றாகவே இருந்திருக்கும். பன்னீர் செல்வத்தின் பின்னால் இருப்பது யார் என்று அறிந்ததால்தான் நான் அவரை கடுமையாக எதிர்த்தேன்.

ஓபிஎஸ் போகிற போக்கில் மீத்தேனுக்கு இயற்கை எரிவாயு என்ற பெயரிலும் மேகதாது அணையைக் கட்டவும் அனுமதி கொடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. இது உண்மையா என்பது தெரிய வர நீண்ட காலம் ஆகாது. இவர் 4 ஆண்டு காலமும் மோதியின் அடிமையாய் இருந்து ஆட்சி செய்தால் என்ன ஆகும் என்பதுதான் நமது கேள்வி.

மற்றபடி எனது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது. இதை ஏற்பது, புறந்தள்ளுவது, விமர்சிப்பது, மறுப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

-------------------------------------------------------------------------


No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...