Monday, February 13, 2017

தமிழ்த் தேசிய அரசியலின் முதல் சதவீதம்
பலரும் தமிழ்த் தேசிய அரசியலையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் ஒன்றாக நினைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள். ஈழத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியப் போர் வேறு. தமிழகத்தில் பேசப்படும் தமிழ்த் தேசிய அரசியல் வேறு.

ஈழத்தில் தமிழர்கள் ஒற்றை பெரிய இனமான சிங்களவர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும்  என்ற நிலை இருந்தது. அங்கு அவர்களுக்கு தனி அரசு இல்லை. உரிமைகள் பறிக்கப்பட்டனஅதற்காக அவர்கள் ஆயுதப் போராட்டத்தை துவக்கி வெற்றிகரமாக ஒரு அரசை நடத்தி இறுதியில் தங்கள் கொள்கைக்காக தங்கள் இன்னுயிரை ஈந்து ஈகியர் ஆகினர்.

ஆனால் தமிழகத்தில் பேசப்படும் தமிழ்த் தேசிய அரசியல் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதுஇந்தியாவில் உள்ள பல தேசிய இனங்களில் தமிழர்களும் ஒரு இனமாக உள்ளனர். இங்கு தமிழர்களுக்கு என ஒரு அரசாங்கம் உள்ளது. இங்கு தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தாலும் பல முக்கிய உரிமைகள் மறைமுகமாக அல்லது நேரடியாக பறிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு உரிமைகள் பறிபோகக் காரணம் இந்தியா விடுதலை பெற்றபோது மாநில உரிமைகளை பாதுகாக்க போதுமான அரசியலமைப்பு கட்டமைப்புகளை உருவாக்காமல் விட்டு விட்டதே. காஷ்மீரைப் போல எல்லா மாநிலங்களும் ஒப்பந்தம் செய்து கொண்டு இந்தியாவில் இணைந்திருந்தால் இவ்வாறு உரிமைகளை இழந்திருக்க முடியாது. மேலும் இந்தியாவே நமது நாடு என்று கருதிய காரணத்தால்தான். இதற்கு காரணம் மற்ற தேசிய இனங்கள் அல்ல. குறுக்கு புத்திகொண்ட மத்திய அரசியல்வாதிகளும், தமிழகத்தில் தமிழராக நடித்து அரசியல் செய்து வந்த அந்நியருமே ஆவர்.

எனவே இவர்களை எதிர்த்துப் போராட இங்கே ஆயுதப் போராட்டம் தேவையில்லை. மேலும் தற்போதுள்ள இந்திய அரசியலமைப்பின் கீழாகவே தங்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வாய்ப்புள்ளது. தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தை கைகொண்டால் அவர்களை முற்றிலுமாக அழித்தொழிக்க மற்ற இனங்களும் வடஇந்திய சக்திகளும் காத்திருக்கின்றன. எனவே தமிழர்கள் மிகவும் எச்சரிக்கையான தமிழ்த் தேசியக் கருத்தியலை, அரசியலை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

அதேவேளையில், இந்தியாவிலிருந்து முற்றிலுமாக சுதந்திரம் தேவை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டாலும் கூட தமிழ்நாடு தனது பன்னாட்டு அரசியல் பாதுகாப்பு, முன்னேற்றம் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்திய ஒன்றியத்துடன் இணைந்து செயல்படுவதே நல்லது. இன விடுதலை என்பது இப்படி இருக்க, இங்குள்ள அரசியல் நிலை எவ்வாறு தமிழ்த் தேசியத்திற்கு சாதகமாக உள்ளது என்பதையும் ஆராய வேண்டியுள்ளது.

இங்கு ஏழை ஒருவரால், கொள்கைப்பற்று, இனப்பற்றுக் கொண்ட ஒருவரால் அரசியல் கட்சியைத் துவக்கி அதிகாரத்தை வென்றெடுக்க முடியாது. மக்களை எந்த அளவிற்கு மோசமான பழக்கங்களுக்கு ஆளாக்கி வைத்திருக்கிறார்களோ அதுபோல அரசியலை சீரழித்து வைத்திருக்கிறார்கள். அதாவது தற்போதைய அரசியல் கட்டமைப்பில் நல்லவர்கள், கொள்கை பிடிப்புள்ளவர்கள், இன நலனை முன்னிறுத்துபவர்களால் அரசியல் செய்யவே முடியாத ஒரு சூழலை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

இப்படியான சூழலில் தமிழ்த் தேசிய சிந்தனை தேவை, அதன் அவசியம், முக்கியத்துவத்தை கருத்தியல் ரீதியாக விதைப்பதே பெருங்கடினமாக உள்ளது. ஆனால் அது தமிழ்த் தேசிய கருத்தியல் என்பதை உணராமலேயே மக்களிடையே ஒரு தமிழர் நல ஆர்வம் தோன்றியுள்ளதை காண முடிகிறது. அதுதான் மாணவர்களின் மூலமாக ஜல்லிக்கட்டு எழுச்சியாக வெளிப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அதிமுகவில் எதிரெதிர் நிலையில் உள்ள சசிகலாவையும் பன்னீர் செல்வத்தையும் தமிழ்த் தேசியத் தலைவர்களாக பார்க்க முடியாது. இவர்கள் திராவிட அரசியலில ஊறிப்போனவர்கள். ஆனால் அடிப்படையில் இவர்கள் இருவரும் தமிழர்களாக இருப்பதால், நீண்ட காலத்திற்குப் பின்னர் அதிகாரம் தமிழர்களின் கைக்குத் திரும்புகிறது. அதற்கு இவர்கள் ஒரு துருப்பாக உள்ளனர்.

இது தமிழ்த் தேசியக் கருத்தியலின் முதல் சதவீதம் என்றே எடுத்துக் கொள்ள முடியும். மீதியுள்ள 99 சதவீதத்தை யார் சாதிப்பது? இவர்களே சாதிப்பார்களா? என்று கேட்டால் அதற்கு எந்தவித உத்தரவாதமும் கொடுக்க முடியாது. ஆனால் தற்போது இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக இவர்களைப் போன்ற ஆட்சியாளர்கள் தமிழ்த் தேசியப் பாதையில் பயணிக்கத் தொடங்கலாம். அப்போதும் இவர்கள் வேறு வழியில்லாமல்தான் செய்வார்களே ஒழிய உளமாறச் செய்ய மாட்டார்கள்.

ஆனால் அவர்களைத் தொடர்ந்து வரக் கூடிய அரசியல்வாதிகளில் முழு தமிழ்த் தேசியச் சிந்தனை படைத்த தலைவர்கள் வர வாய்ப்புள்ளது. எனவே, பன்னீர் செல்வம் எத்தனை கோடிகளுக்குச் சொத்துச் சேர்த்துள்ளார்? சசிகலாவின் எப்படியெல்லாம் பதவியை, பணத்தை தவறாக பயன்படுத்தினார்கள் என்பதெல்லாம் தேவையில்லாத விஷயங்கள். ஏனெனில் இவர்கள் தமிழ்த் தேசிய அரசியலின் முதல் சதவீதமே.

----------


1 comment:

Mathi Vanan said...

தமிழ்நாடு விடுதலை பெறுவதே இறுதி இலக்கு எனும் கொள்கை முக்கியப்படுத்தப்படவில்லை. மற்றபடி அனைத்தும் மிகச்சரி