Sunday, May 28, 2017

பகதூர் வெள்ளையத் தேவன்


வீரபாண்டிய கட்டபொம்மனைத் திருநெல்வேலி கலெக்டர் ஜாக்சன் ராமநாதபுரத்தில் சந்தித்துப் பேசுகிறபோது திடீரென ஜாக்சன் கட்டபொம்மனைச் சுடுவதற்கு ஏற்பாடு செய்யவும், கட்டபொம்மன், ஊமத்துரை வெள்யைத்தேவன் மூவரும்  ஓடி குதிரையில் ஏறித் தப்பினர். அந்தச் சமயம் தானாவதிப் பிள்ளை அகப்பட்டுக் கொள்கிறார்.

அவரை ஜாக்சன் சிறைப்படுத்தி பல அடக்குமுறைகள் செய்து சென்னையில் கவர்னர் முன்னால், முழங்கால் அளவு ஒரு சிறு துண்டை கட்டச் செய்து உடல் எல்லாம் காயங்களுடன் கொண்டுபோய் தானாவதிப் பிள்ளையை விசாரணைக்கு நிறுத்தினார்.

அப்போது கவர்னர் தானாவதிப் பிள்ளையை விசாரிக்கத் தொடங்கினார். தானாவதிப் பிள்ளை கவர்னரிடம், “கவர்னர் அவர்களே, என்னைப் பாருங்கள். என் உடலில் உள்ள காயங்களைப் பாருங்கள். ஒரு சிறு துணியைக் கட்டி பிச்சைக்காரனைப் போல ஜாக்சன் என்னைக் கொண்டு வந்து உங்கள் முன்னால் நிறுத்தி இருக்கிறார். நான் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தில் திவான். அதாவது மந்திரி. நான் ஒரு அரசியல் கைதி. நான் என்ன தவறு வேண்டுமானாலும் செய்ததாக ஜாக்சன் சொல்லட்டும். அதற்கு நான் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அமைச்சர் அந்தஸ்தில் உள்ள என்னிடம் இவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து, ஓர் அரசியல் கைதிக்குரிய மரியாதையைக் கூட கொடுக்காத ஜாக்சன் எவ்வளவு கொடுமையாக நடந்திருப்பார் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்என்று சொன்னார்.
உடனே கவர்னர் தானாவதிப் பிள்ளையை விடுவிக்கச் செய்து காயங்களுக்கு மருந்து போட்டு கவர்னர் மாளிகையில் விருந்தினராகத் தங்க ஏற்படு செய்கிறார். ஒரு வாரம் கழித்து கவர்னர் தானாவதிப் பிள்ளையை அழைத்து, “கட்டபொம்மனை பெரிய வீரன், தீரன், சூரன் என்றெல்லாம் சொல்கிறார்களே, நீங்கள் கட்டபொம்மனை அழைத்து வர முடியுமா?” என்று கேட்கிறார்.

தானாவதிப் பிள்ளை, “அழைத்து வருகிறேன்என்று  கவர்னரிடம் கூறிவிட்டு பாஞ்சாலங்குறிச்சி வந்து கட்டபொம்மன், ஊமத்துரை, வெள்ளையத் தேவன் ஆகிய மூவரையும் அழைத்துக் கொண்டு கவர்னரிடம் போகிறார்.

கவர்னர் அவர்கள் நால்வருக்கும் விருந்தளித்து கட்டபொம்மனிடம், “கம்பெனி அரசாங்கம் என்ன சொல்ல விரும்புகிறது என்றால் கப்பம் என்று பெயரளவுக்கு ஏதேனும் ஒரு தொகையைத் தாங்கள் செலுத்தினால் போதும்என்கிறார். அதற்குக் கட்டபொம்மனும் சம்மதிக்க உடன்பாடு ஏற்படுகிறது.

அதன் பின் கவர்னர் கட்டபொம்மன், ஊமத்துரை, வெள்ளையத் தேவன், தானவதிப் பிள்ளை ஆகிய நால்வரையும் அழைத்துக் கொண்டு ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு அழைத்து வருகிறார். அங்கே மிக உயரமான பஞ்சாப் குதிரைகள் ஐந்து நிற்கின்றன. குதிரைகள் ஐந்துக்கும் சேணம் மாட்டவில்லை. கடிவாளம் மாட்டவில்லை.

அப்போது கவர்னர் கட்டபொம்மனைப் பார்த்து, “கட்டபொம்மன் அவர்களே உங்களை பெரிய வீரர் என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன். சேணம் மாட்டாத, கடிவாளம் இல்லாத இந்தக் குதிரை மீதேறி நீங்கள் சவாரி செய்ய வேண்டும்என்று கூறுகிறார்.

கட்டபொம்மன் மிகவும் அலட்சியமாக, “இந்தச் சிறு வேலையை நான் செய்ய வேண்டியதில்லை. என்னுடைய தளபதி வெள்ளையத் தேவன் செய்வார். அவரால் முடியாவிட்டால் அப்புறம் நான் செய்கிறேன்என்றார்.

ஐரோப்பாவில் தளபதி வீரத்தைக் காட்டிலும் ராஜா பத்து மடங்கு வீரராக இருப்பது வழக்கம். கவர்னர் ஒரு குதிரையை அவிழ்த்து விட்டு வெள்ளையத் தேவனை சவாரி செய்யச் சொல்கிறார்.

முன்னங்கால் இரண்டையும் உயரத் தூக்கி வெள்ளையத் தேவனை தாக்க வரும் குதிரையின் நீளமான பிடரி மயிரைப் பிடித்து, தாவி ஏறி உட்கார்ந்து சிறிது தூரம் சென்றதும், தனது காலால் வர்ம அடி அடிக்கவும் குதிரை சடாரென கீழே விழுந்து புஸ் என நுரை தள்ளித் துடிக்கிறது. அதுபோல நான்கு குதிரைகளையும் வெள்ளையத் தேவன் வர்ம அடியால் வீழ்த்தி நுரை தள்ளித் துடிக்க வைக்கிறார்.

தளபதியே இவ்வளவு வீரனாக இருந்தால் ராஜா இதைவிடப் பத்து மடங்கு வீரனாகத்தான் இருப்பார் என்று கவர்னர் கருதி, ஐந்தாவது குதிரையை வெள்ளையத் தேவனுக்குப் பரிசாகக் கொடுத்துபகதூர்என்ற பட்டத்தையும் தருகிறார் (பகதூர் என்றால் இந்தியில்வீரன்”, ‘‘துணிச்சலானவன்என்று பொருள்). அது முதல் வெள்ளையத் தேவன் பகதூர் வெள்ளையத் தேவன் என்று மாறினார் (இதனை ஃபாதர் வெள்ளையத் தேவன் என்றும் சொல்வார்கள்). இந்த வரலாற்றை யாரும் இதுவரை சொல்லவில்லை. காரணம் கட்டபொம்மனை விட வெள்ளையத் தேவனை வீரனாகக் காட்ட மனம் இல்லாமைதான் என்று கருதுகிறேன். இந்த வரலாறு தேவர் வாய்மொழியாகச் சொன்ன வரலாறாகும்.

இந்த வீர வரலாற்றை நான் சொல்ல வந்த காரணம் முத்துராமலிங்கத் தேவர் மனிதனுக்கும் மிருகத்திற்கும் வர்ம அடி அடிக்கக் கற்றிருந்தார் என்றும் அதுபோலவே பகதூர் வெள்ளையத் தேவனும் மனிதனுக்கும் மிருகத்திற்கும் வர்ம அடி அடிக்கக் கற்றிருந்தார் என்று எடுத்துக் காட்டுவதற்காகத்தான்.


- .ஆர். பெருமாள், முடிசூடா மன்னன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பக்கம் 37, 38, 39 

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...