Saturday, June 3, 2017

பார்வர்டு பிளாக் துவக்கம்ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு சுபாஷ் சந்திர போஸ் திரிபுரா காங்கிரஸ் தலைவர் ஆனார். அவரை தலைவர் பீடத்தில் இயங்க விடாமல் இன்னல் விளைவித்து ராஜினாமா செய்யும்படியான நிலையை காந்தியவாதிகள் உண்டாக்கினர்.

பின்னர் வங்க மாநில காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தப் பதவியிலும் இருக்க விடாமல் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து காங்கிரஸை விட்டு வெளியேற்றயதாக அறிவித்தனர் அகிம்சாமூர்த்தியின் அவதார புருஷர்கள்.

அதன் பின்னர் வங்க மாநிலத்தில் ஒரு பொம்மை காங்கிரஸ் கமிட்டியை நியமித்து இயக்கிப் பார்த்தனர். சுபாஷ் பாபுவின் தலைமையில் உள்ள காங்கிரஸ் கமிட்டிதான் மக்கள் ஆதரவு பெற்ற கமிட்டியாக இயங்கியது. பொம்மை கமிட்டி பிசுபிசுத்தது.

1939-ம் ஆண்டு மே முதல் தேதி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததும், ஜூலை 6-ம் தேதிஅகில இந்திய பார்வர்டு பிளாக்என்ற அமைப்பை காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே துவக்கினார். என்.ஜி.ரங்கா, கவிஷர், நரிமன், சேனாபதி பாபட், சரத் சந்திர போஸ், தேவர் ஆகியோர் அடங்கிய மத்திய கமிட்டி அமைக்கப்பட்டது.

சுபாஷ் சந்திர போஸ், காங்கிரஸ் கட்சியிலிருந்த சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்ட்கள் மற்றும் தீவிர இளைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்தோரை ஒரே அணியில் திரட்டி, காங்கிரஸில் தலைதூக்கியுள்ள வலதுசாரி சக்திகளை முறியடிப்பதற்காகவே, அகில இந்திய பார்வர்டு பிளாக் என்ற அமைப்பைத் துவக்கினார்.

காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களாக உள்ளவர்களை மட்டுமே பார்வர்டு பிளாக் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளும், இடதுசாரி ஜனநாயக சக்திகளை ஓரணியில் திரட்டி, ‘லெஃப்டிஸ்ட் கன்சாலிடேஷன் கமிட்டிஎன்ற அமைப்பை பலப்படுத்தவும், காங்கிரஸ் கட்சிக்குள் உண்மையான ஒற்றுமை ஏற்பட பாடுபடவும், பரிபூரண சுதந்திரப் போராட்டத்தை உடனடியாக துவக்க முயல்வதும், சுதந்திரம் பெற்ற பின்னர் சோஷலிச அரசை நிறுவுவதும்தான்  தனது குறிக்கோள்என பார்வர்டு பிளாக் கொள்கை விளக்கத்தைபார்வர்டுபத்திரிகை தலையலங்கத்தில் சுபாஷ் பாபு குறிப்பிட்டிருந்தார்.

இந்த லட்சியங்களோடு துவங்கப்பட்ட பார்வர்டு பிளாக்காங்கிரஸ்-க்கு எதிரான ஒரு அமைப்பேஎன்று காங்கிரஸ் வலதுசாரி தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

தான் காங்கிரஸை விட்டு விலகப் போவதில்லை என்றும், காங்கிரஸ் கட்சியை இடதுசாரிகள் கைப்பற்ற உதவுவதற்காகவே பார்வர்டு பிளாக் துவங்கப் பட்டிருப்பதாகவும் சுபாஷ் பாபு கூறி வந்தார். 1939-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காங்கிரஸ் செயற்குழு சுபாஷ் பாபுவை மூன்று ஆண்டுகளுக்கு விலக்கி வைப்பதாக முடிவு செய்தது.  

ஆனால் சுபாஷ் பாபு, ஆகஸ்டு 5-ம் தேதியன்றேபார்வர்டு பிளாக்வாரப் பத்திரிகையில் ஒரு தலையங்கம் எழுதினார்.

ஆகஸ்டு 12-ம் தேதி அதே பத்திரிகை பார்வர்டு பிளாக்கில்பணியும் பங்கும்என்ற தலைப்பில், மற்றுமொரு தலையங்கத்தை எழுதி, பார்வர்டு பிளாக் தோன்றுவதற்கு நேர்ந்த சரித்திர கட்டாயத்தை கோடிட்டுக் காட்டினார் கொள்கை கோமான் சுபாஷ் பாபு. அதன் சாராம்சம் வருமாறு:

இந்திய மக்களின் நம்பிக்கையையும், ஆசைகளையும், கொள்கைகளையும், லட்சியத்தையும் தன்னுள் கொண்ட அரசியல் ஸ்தாபனம் காங்கிரஸ்.

இந்த தேசத்தின் சக்தியும், முன்னேற்றமும் எவ்வளவோ அவை அனைத்தும் அந்த ஸ்தாபனத்திற்கு உண்டு.

இந்திய மக்களின் உள்ளுணர்வை பிரதிபலிப்பதுதான் இந்திய தேசிய காங்கிரஸ். அதே உள்ளுணர்வுதான் பார்வர்டு பிளாக்கின் பிறப்புக்கும் காரணமாக அமைந்துள்ளது.

பார்வர்டு பிளாக்கின் தோற்றத்திற்கு திடீரென்று ஏற்பட்ட விபத்து சூழ்நிலைகளோ, தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளோ காரணமல்ல.

காங்கிரஸ் கட்சியை புரட்சிகரமான பாதையில் உந்தித் தள்ளுவதற்காக, அதற்குள்ளேயே தோன்றிய ஓர் உந்து சக்திதான் பார்வர்டு பிளாக்.

இன்று காங்கிரஸ் கட்சிக்குள் ஒற்றுமை பற்றி பரவலாக பேசப்படுகிறது. எது உண்மையான ஒற்றுமை? எது போலி? என்பதை நாம் இனம் பிரித்துப் பார்க்க வேண்டும்.

செயல் விளக்கத்திற்கும், செயலற்ற தன்மைக்கும் ஒற்றுமை சாத்தியமா? முன்னேறத் துடிக்கும் சக்திகளுக்கும், தேக்க நிலை சக்திகளுக்கும் இடையே ஒற்றுமை அவசியமா?
எல்லாச் சூழல்களிலும் என்ன விலை கொடுத்தேனும் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்று பேசுகிறவர்கள் கடந்த காலத்தில் செய்தது என்ன?

இடதுசாரிகளை என்ன விலைகொடுத்தேனும் கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று துடித்தவர்கள்தானே, இன்று வானளாவ ஒற்றுமை குறித்துப் பேசுகிறார்கள்?

எல்லாக் கட்சிகளிலும், இயக்கங்களிலும் இடதுசாரிகளும், வலதுசாரிகளும் இருக்கவே செய்வர். இடதுசாரி சக்திகளின் துடிப்புமிக்க செயல்திறன் பல சந்தர்ப்பங்களில் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும உதவிகரமாக இருக்கும்.

சில குறிப்பிட்ட சூழ்நிலையில் இடதுசாரி சக்தி எப்படி வளர முடியும் என்பதற்கு அரசியல் மற்றும் தத்துவ ரீதியான பார்வை அவசியமாகும்.

வலதுசாரி சக்திகளோடு சமரசம் செய்துகொண்டு ஒத்துழைத்தும் தன்னுடைய பலத்தையும் செல்வாக்கையும் இடதுசாரி சக்தி பெருக்கிக் கொள்வது நடக்கவே செய்யும்.

ஆனால் எல்லாச் சூழ்நிலைகளிலும் அது சாத்தியமாகாது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளிலிருந்து இடதுசாரி சக்திகள், தன்னை வலதுசாரி சக்திகளிலிருந்து வேறுபட்டு காட்டி தன் பலத்தையும் செல்வாக்கையும் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அப்படிப்பட்ட நேரங்களில் கடுமையான மோதலும், உட்கட்சிப் போராட்டங்களும் ஏற்படக் கூடும். அது தவிர்க்க முடியாதது ஆகும்.

அப்பொழுது இடதுசாரி சக்திகளுக்கு ஸ்தாபன அமைப்பும் தோற்றமும் வளர்ச்சியும் அத்தியாவசியமாகும்.

வலதுசாரி சக்திகளோடு ஒத்துழைத்தோ அல்லது போராடியோ இடதுசாரிகள் தொடர்ந்து தங்களை வளர்த்துக் கொண்டு கட்சியைக் கைப்பற்றியோ அல்லது வலதுசாரிகளை தங்கள் பக்கம் இழுத்து வெற்றி பெறவோ முயல வேண்டும்.

அந்தக் காரியம் முற்றுப் பெற்றதும் சில ஆண்டுகளில் இடதுசாரிகளே அலுத்துப்போய், வலதுசாரிகளின் குணத்தையும், செயல்பாட்டையும் அடையும்போது சரித்திரம் மீண்டும் திரும்ப வேண்டும்.

ஒரு புதிய இடதுசாரி குழுவினர் தோன்றி வலதுசாரிகளாக மாறிய பழைய இடதுசாரிகளை கடசியின் உயர் மட்டத்திலிருந்து அகற்ற வேண்டும்.

1920-ம் ஆண்டில் காங்கிரஸில் நுழைந்த காந்தியவாதிகள் அன்றைய இடதுசாரிகளாக இருந்தனர். ஆனால் இன்று அவர்களே முதல் தரமான வலதுசாரிகளாக மாறிவிட்டனர். நேற்றைய இடதுசாரிகள், எப்போதும் இல்லாவிட்டாலும் அடிக்கடியேனும் நாளைய வலதுசாரிகளாக மாறுவது கண்கூடு.

ஆகவே இன்றைய தினம் காங்கிரஸ் கட்சிக்குள் இருப்பவர்களை அதன் மேலிடத் தலைவர்களைப் பொறுத்தவரை, இடதுசாரி, வலதுசாரி என்று பிரித்துப் பேசுவது வடிகட்டிய முட்டாள்தனமாகும்.  

1936, 1938 ஆண்டுகளுக்கிடையே காங்கிரஸ் இடதுசாரிகள் வலதுசாரிகளின் கண்களை உறுத்தினர். அதனால் இடதுசாரி சக்திகளோடு ஒட்டோ உறவோ வைத்துக் கொள்ளக் கூடாது என்று தீர்மானித்த வலதுசாரிகள், 1938 செப்டம்பரில் பகிரங்கமாக குரல் கொடுத்தனர்.

அந்தப் போர்க்குரல் 1939-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் செயல்திட்டமாக வடிவம் பெற்றது. இப்பொழுது இடதுசாரிகளோடு எந்த வகையிலும் ஒத்துழைக்க முடியாது என்ற கூக்குரல் பலமாக எழுந்துள்ளது.

மூன்றாண்டுகளாக இடதுசாரிகளோடு கூடிக்குலாவி ஒத்துழைத்த வலதுசாரிகள், இப்போது மட்டும் அது முடியாது என்று கூக்குரல் எழுப்புவது ஏன்?

காங்கிரஸ் கட்சிக்குள் நாளும் வளர்ந்து வரும் இடதுசாரிகளின் பலமும் செல்வாக்கும் எங்கே தங்களை மிஞ்சிவிடுமோ என்று வலதுசாரிகள் அஞ்சத் துவங்கியுள்ளனர். அதுதான் காரணம்.

ஏப்ரல் 29-ம் தேதி கல்கத்தாவில் காங்கிரஸ் செயற்குழு கூடியபோது, இடதுசாரிகள் அமைக்கும் செயற்குழுவில் வலதுசாரிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரினர்.

ஆனால் வலதுசாரிகள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் என்ன? அவர்கள் இடதுசாரிகளோடு ஒத்துழைத்து அவர்களைப் பலப்படுத்தி வாழ விரும்பவில்லை.

அதற்கு மாறாக இடதுசாரிகள் தங்களிடம் முழுமையாக சரணடைந்து விடவேண்டும் என்று வலதுசாரிகள் எதிர்பார்க்கிறார்கள். ஒற்றுமையின் பேரால் வலதுசாரிகள் கேட்டது இதுதான்.

ஆனால் இடதுசாரிகளாகிய நம்மோடு ஒத்துழைக்க மறுத்துவிட்டு நம்மையும் சரணடையச் சொல்கிறார்கள் என்றால் அதற்கு என்ன பொருள்? காங்கிரஸ் வலதுசாரிகளிடம் இடதுசாரிகளாகிய நாம் சரணடைய முடியுமா? ஒருக்காலும் முடியாது. அப்படிச் செய்யவும் கூடாது.

ஆகவே இடதுசாரிகள் வலதுசாரிகளிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டி தங்கள் பலத்தைப் பெருக்கிக்கொண்டு முன்னேற வேண்டிய நேரம் இது. அப்படிச் செய்யும்போது காங்கிரஸ் கட்சிக்குள் இடதுசாரிகளான நம்மிடம் பெரும்பான்மை பலம் வந்துசேரும்.

அப்போது நம்முடைய தேசியப் போராட்டத்தை இந்திய தேசிய காங்கிரஸ் நடத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படும். இடதுசாரிகளின் முன்னால் இன்றுள்ள கடமை இதுதான். அதை பூர்த்தி செய்வதற்காகவே பார்வர்டு பிளாக் பிறந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் இடதுசாரி சக்திகள் அனைத்தும் இடதுசாரி ஒருங்கிணைப்பை ஒப்புக்கொள்வதுதான் நல்லது. ஆனால் அப்படி நடைபெறவில்லை.

கடந்த ஆண்டு ஓர் இடதுசாரி அமைப்பை உருவாக்குவதில இடதுசாரி காங்கிரஸ்கார்ர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டபோது, காங்கிரஸில் உள்ள இடதுசாரி கட்சிகள் அனைத்தும் அதனை ஏற்றுக் கொண்டன.

ஆனால் என்ன காரணத்தினாலோ பார்வர்டுபிளாக் துவக்கப்பட்டபோது காங்கிரஸ் சோசலிஸ்டுகளும், கம்யூனிஸ்ட்டுகளும் பின்வாங்கிவிட்டனர். ஆகவே பார்வர்டு பிளாக் புதிய இடதுசாரி சக்திகளைக் கொண்டு துவக்க நேரிட்டது.

காங்கிரஸ் கட்சிக்குள் பூத்தெழுந்த இடதுசாரி உணர்வின் வெளிப்பாடு மட்டுமல்ல பார்வர்ட் பிளாக், அது சரித்திர கட்டாயத்தை பூர்த்தி செய்ய வந்த ஒரு புதிய சக்தியும் ஆகும். இன்றைய சூழ்நிலையில் அப்படி ஒரு புதிய அமைப்பு அத்தியாவசியமாகிறது. இந்தச் சூழ்நிலையில் பிறந்துள்ள பார்வர்டு பிளாக் அழியவே முடியாது.

நம்முடைய அரசியல் பரிணாம வளர்ச்சியில் இது ஒரு தவிர்க்க முடியாத அற்புதமாகும். நாட்கள் உருண்டு செல்லச் செல்ல பார்வர்டு பிளாக் நிலைத்து நின்று பலம் பெறவே செய்யும்.

இன்று நான் சொல்வதை சந்தேகிப்பவர்கள் காங்கிரஸ் மற்றும் பார்வர்டு பிளாக்கின் எதிர்கால வரலாற்றைப் பொறுத்திருந்து கவனிக்கட்டும்என்று குறிப்பிட்டிருந்தார் சுபாஷ் சந்திர போஸ்.

1939-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ம் தேதி பார்வர்டு பிளாக் பத்திரிகையில் சுபாஷ் எழுதிய கட்டுரை வருமாறு:-

எத்தனையோ போராட்டங்களுக்குப் பின்னர் 1920-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் தலைமையில் செயல்பட்ட காங்கிரஸ் இடதுசாரிகள் காங்கிரஸை கைப்பற்றினர்.

அக்காலத்தில் வலதுசாரித் தலைவர்களாக விளங்கிய அல்லது மாறியிருந்த முகமது அலி ஜின்னா, பிபின் சந்திரபால், வி. சக்கரவர்த்தி ஆகியோர் காங்கிரஸை விட்டு விலகிச் சென்றனர்.

இடதுசாரி சக்திகள் காங்கிரஸில் பெரும்பான்மையோராகி சிலகாலம் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். 1920-ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது.

காங்கிரஸ் போராட்டத்தைச் சட்டமன்ற அரங்கத்திற்கு எடுத்துச் செல்வது தொடர்பாக சுயராஜ்ய கட்சியினருக்கும், மாறுதல் வேண்டாதாருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முற்றிப் பிளவு அதிகரித்தது

சில மாதங்களில் சுயராஜ்ய கட்சித் திட்டத்தையே காங்கிரஸின் திட்டம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டதாலேயே அந்தப் பிளவு சரி செய்யப்பட்டது.

1928-ம் ஆண்டு டொமினியன் அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டதை அடுத்து, “சுதந்திர லீக் என்ற இடதுசாரி அமைப்பு உருவானது.

நானும் ஜவஹர்லால் நேருவும் அந்த இடதுசாரிகளுக்குத் தலைமை தாங்கினோம். மகாத்மா காந்தி அப்போது எங்களை எதிர்த்தார்.

ஓராண்டு கழித்து 1929-ம் ஆண்டு லாகூர் காங்கிரஸில் காந்தியடிகளும், காங்கிரஸும் நாங்கள் வற்புறுத்திய பூரண சுயராஜ்ய கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர்.

அந்த சமரசம் 1930-ம் ஆண்டில் துவக்கப்பட்ட சட்டமறுப்பு போராட்டத்தில் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் தோளோடு தோள் இணைந்து கலந்துகொள்ள வாய்ப்பளித்தது.

1933-ம் ஆண்டில் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்தி விட்டு, சட்டசபை நுழைவை ஆதரித்து காங்கிரஸ் தீர்மானம் நிறைவேறியது. அதனை எதிர்த்து காங்கிரஸ் இடதுசாரிகள், ‘‘காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியைத் துவக்கி, சட்டப்பூர்வ எதிர்ப்பு என்ற காங்கிரஸ் கொள்கை மாற்றத்தை பெருமளவுக்கு கட்டுப்படுத்தினர். அதிலிருந்து காங்கிரஸில் உள்ள இடதுசாரிகளுக்கு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி போர்வையாக மாறியது.

அதேவேளையில் வலதுசாரிகள்காந்தி சேவா சங்கம் என்ற வலதுசாரிகளின் அமைப்பைப் பலப்படுத்தி, தொழிற்சங்கத் துறையிலும் அதைப் புகுத்தி, இடதுசாரி சக்திகளை எதிர்க்கும் அரசியல் அரங்கமாக மாற்றுவதென்று 1938 மார்ச்சில் ஒரிசாவுக்கு அருகேயுள்ள டெலான் என்ற இடத்தில் முடிவு செய்தனர்.

1937-ம் ஆண்டில் காந்தியவாதிகள் இந்தியாவின் ஏழு மாநிலங்களில் மந்திரி சபை அமைத்ததன் மூலம் கிடைத்த அதிகாரமும், இதர வசதிகளும் இடதுசாரிகளைத் தாக்கி பலவீனப்படுத்த அவர்களுக்கு பெரிதும் உதவியது.

(தமிழ்நாட்டில் ராஜாஜி தலைமையில் அமைந்த அரசாங்கம் தேவரை கைது செய்து சிறையில் அடைத்ததையும், 110 செக்ஷன்படி ஜாமீன் வழக்குப் போட்டு தண்டித்ததையும் இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்ளவும்)

அதை எதிர்த்து அனைத்து இடதுசாரி சக்திகளும் ஓரணியில் திரண்டிருந்தால் காந்தியவாதிகளின் தாக்குதலை எளிதாக முறியடித்திருக்க முடியும். ஆனால் அப்படி நடக்கவில்லை.

சோசலிஸ்ட் கட்சியின் தலைவர்களும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும் காங்கிரஸ் வலதுசாரித் தலைவர்களோடு, குறிப்பாக வலதுசாரித் தலைவர்களின் துணைவரான ஜவஹர்லால் நேருவோடு இருந்த தொடர்பினால் இடதுசாரி ஒற்றுமையில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை.

ஆனால் அவர்களின் தோழர்களோ தங்கள் தலைமையின் மீது மிகவும் அதிருப்தியடைந்து, வேறொரு இடதுசாரி சக்தியை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

ஆகவே அந்த இடைவெளியைப் பூர்த்தி செய்ய நான் நான் பார்வர்டு பிளாக்கை துவக்க வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டது.

தனிப்பட்ட இடதுசாரித் தலைவர்கள் இடதுசாரி ஒற்றுமையைக் காட்டிக்காக்கத் தவறினாலும் அந்த லட்சியம் பின் தங்கி விடக் கூடாது என்பதற்காகவே தோன்றியதுதான் பார்வர்டு பிளாக்.

வெறும் முழக்கங்களை முழங்குவதும், கவர்ச்சிகரமாக பேசுவதும் மக்களை திருப்திப்படுத்தாது. காங்கிரஸ் கட்சியில் உள்ள முற்போக்குவாதிகளையும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களையும் பார்வர்டு பிளாக் ஓரணியில் திரட்டும்.

இந்த ஒற்றுமையின் மூலமாக இந்திய மக்கள் தங்கள் பிறப்புரிமையான இந்திய விடுதலையைப் பெறுவதற்கான தேசியப் போராட்டத்தில் குதிக்க தங்களை தயார்படுத்திக் கொள்வார்கள்.

ஆனால் அரசியல் சுதந்திரம் வந்ததும் பார்வர்டு பிளாக் கலைக்கப்பட்டுவிடும் என்று யாரும் கருதத் தேவையில்லை. அதன் நடவடிக்கையில் ஒரு புதிய வேகமும், லட்சியங்களில் ஒரு புதிய மாற்றமும்தான் ஏற்படும். அந்த மாற்றம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் சோசலிஷ பாதியில் செல்லுவதாகவே இருக்கும். ”

1939-ம் ஆண்டு ஜூலை 22, 23 தேதிகளில் மும்பையில் உள்ள கவாஸ்ஜி ஜஹாங்கீர் அரங்கில் பார்வர்டு பிளாக் கட்சியின் மாநாடு நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி, “அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லைஎன்று அறிவித்தது. இருந்தாலும் காங்கிரஸ்காரர்கள் ஏராளமான அளவில் வந்து அந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். அதேபோல இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த பலரும் பலந்து கொண்டனர்.

பார்வர்டு பிளாக் கட்சியின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், செயல் திட்டங்களையும் அந்த மாநாட்டில் வகுத்து உலகறிய பிரகடனப்படுத்தினார் சுபாஷ் சந்திர போஸ்.

- .ஆர். பெருமாள், முடிசூடா மன்னன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பக்கம் 97- 105


---------------------------

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...