Monday, July 10, 2017

மறு கன்னத்திலும் அடித்தால்....?அப்போது மதுரை மாவட்டம் பெரியகுளத்தில் தங்கி, அந்தப் பகுதியில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி வந்தார் எனது தந்தையார். எங்கள் குடும்பமே அங்கேதான் இருந்தது. ஆக அதே ஊரிலேயே எனது படிப்பைத் தொடர்ந்திருக்க முடியும். நான் சரியாக கவனம் செலுத்தி, நன்கு படிக்க வேண்டும் என்பதற்காக, என் தந்தையார் பெரியகுளத்திலிருந்து பதினாறாவது மைலில் இருக்கிறவத்தலக்குண்டுஎன்ற ஊரில் .எம்.சி.சி. என்ற உயர்நிலைப் பள்ளியில், என்னை ஆறாவது வகுப்பில் சேர்த்துப் படிக்க வைத்தார்.

அது அமெரிக்க உதவியுடன், நடத்தப்படும் ஒரு கிறிஸ்தவப் பள்ளியாகும். அங்கேயே சாப்பாடு, தங்குவதற்கு வசதி எல்லாம் உண்டு. வாரம் ஒருமுறை, நடுப்பகல் உணவுக்குப் பிறகு என் தந்தையார் வந்து, என்னைப் பெரியகுளம் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். பிறகு திங்கட்கிழமை காலையில் பஸ் ஏற்றி வத்தலக்குண்டு பள்ளிக்கு அனுப்பி வைப்பார். அப்போதே, படிப்பதை அப்படியே மனப்பாடம் செய்து, ஒப்புவித்து விடுவேன். படிப்பில் கெட்டிக்காரன் எனப்பெயர் பெற்றேன்.


ஒருசமயம் எங்கள் வகுப்பு வாத்தியாரம்மா பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, ஏசுநாதர், “ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தைக் காட்டுஎனச் சொல்லி இருக்கிறார் என்றார். உடனே நான் எழுந்து, “அந்தக் கன்னத்திலும் அடித்து விட்டால் என்ன செய்வது?” எனக் கேட்டு விட்டேன். உடனே அந்தம்ம்மாவுக்குக் கடுமையான கோபம் வந்து, “டேய், பெஞ்சு மேலே ஏறி நில்லுஎன்றார். ஆங்கிலத்தில் முழுமையாகத் திட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு எனது மாணவ நண்பர்கள் என்னை கண்டித்தார்கள். என்ன ஆகப் போகிறதோ எனப் பயந்தனர். நானுந்தான்.

அந்தப் பள்ளி நிர்வாகியின் பெயர்மார்டின் துரை’. அவர் ஒரு வெள்ளைக்காரர். யாராவது மாணவர்கள் பெரிய தவறு செய்து விட்டால் ரிப்போர்ட் அவருக்குப் போய்விடும். சனிக்கிழமைதோறும் மதியம் ஒரு மணியளவில், அந்த மாணவனை அழைத்து விசாரித்து, தகுந்த தண்டனை வழங்குவார். அந்தச் சனிக்கிழமை, என் தந்தையார் வந்து, விஷயத்தைக் கேள்விப்பட்டு என்னைக் கண்டபடி திட்டினார். “நீ செய்த இந்தப் பெரிய குற்றத்துக்குப் பள்ளியிலிருந்து அறவே நீக்கப்படப் போகிறாய். பிறகு கிராமத்துக்குப் போய் நமது மாடுகளைத்தான் நீ மேய்க்கப் போகிறார்என்று திட்டினார்.

பள்ளி நிர்வாகியின் விசாரணைக்காகக் காத்திருந்தோம். மார்ட்டின் துரை தன் ஆசனத்தில் வந்து அமர்ந்தவுடன் நான்தான் முதலில் விசாரணைக்கு அழைக்கப்பட்டேன். ‘ரொம்ப கோபமாய் இருப்பார் போலத் தெரிகிறது. வாடாஎன்று அழைத்துக் கொண்டு என் தந்தையும் கூடவே வந்தார். ஒரு நீதிபதியின் முன் கடுமையான குற்றத்தைச் செய்தவன் போல, தீர்ப்பை எதிர்நோக்கி கை கட்டி காத்திருந்தேன். என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த வாத்தியாரம்மாவும் அங்கே இருந்தார்.

துரை அவர்கள் என்னை உற்று நோக்கி யோசித்த பிறகு என் அப்பாவை நோக்கிசார், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று ஏசு சொன்னார். ஆனால், அந்தக் கன்னத்திலும் அடித்து விட்டால் என்ன செய்வது என்று உங்கள் பையன் கேட்டிருக்கிறான். நான் அறிந்த வரை யாரும் கேட்டறியாத கேள்வி இது. ராஜேந்திரன் புத்திசாலி. அவனது கேள்விக்கு டீச்சர் பதில் சொல்லியிருக்க வேண்டும். அப்படி மறு கன்னத்தைக் காட்டினால், அடித்தவன் மறுபடியும் அடிக்க மாட்டான். அடிபட்டவனிடம் இரக்கம் காட்டுவான். ஏற்கனவே அடித்ததற்காக வருந்தித் திருந்துவான் என எண்ணியே அவ்விதம் சொன்னார் ஏசு பெருமான். அவர் மற்றவர்களை நம்பினார். ஆனால் அவரே ஏமாற்றப்பட்டார். வெறிகொண்ட கூட்டத்தினர் அந்தப் புனிதரையே, கட்டி இழுத்துக் கொண்டு போய்ச் சித்ரவதை செய்து சிலுவையில் அடித்தனர். அந்தப் பாவிகளையும் திருத்த வேண்டும். மனித இனம் நல்வழியில் ஈடுபட வேண்டும் என எண்ணினார் ஏசு என்று டீச்சர் விளக்கம் தந்திருக்க வேண்டும். அவ்வாறு சொல்லியிருந்தால் இளம் மாணவர்கள் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அதனால் அறிந்துகொள்ளத் துடிக்கிற ஆர்வமுள்ள உங்கள் மகன் ராஜேந்திரன் எதிர்காலத்தில் மற்றவர்களால் பாராட்டப்படக் கூடிய அளவுக்கு வநர்ந்து நல்ல புகழ் பெறுவான்என நேர்மறையாக என்னை வாழ்த்தி அனுப்பினார். எனது படிப்புத் தொடர்ந்தது.


- நான் வந்த பாதை நூலில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்

No comments: