Tuesday, July 11, 2017

நேதாஜியின் போர் அறிவிப்புஅப்போது இந்திய நாட்டை வெள்ளைக்காரர்கள் ஆண்டுகொண்டிருந்த காலம். பல முக்கியத் தலைவர்கள் மகாத்மா காந்தியடிகளின் தலைமையில், காங்கிரஸ் பேரியக்கத்தில் ஒருசேர நின்று, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, வெங்கொடுமைச் சிறைக் கோட்டங்களையும், வேறு பல இன்னல்களையும் அனுபவித்து வந்த சமயம். சுதந்திரப் போருக்கு நாட்டு மக்களைத் தட்டி எழுப்பித் தயாராக்கியதில் இந்திய நாட்டின் வடபுலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கும், தென்புலத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கும் பெரும்பங்கு உண்டு என்பதை இந்திய சுதந்திர வரலாற்றைப் புரிந்தோர் எவரும் மறந்திடவோ, மறைத்திடவோ இயலாது.

அத்தகைய வங்கம் தந்த சிங்கம் நேதாஜி அவர்கள், மதுரையம்பதிக்கு ஒரு பொதுக் கூட்டத்தில் பேச வருகிறார். அந்தக் கூட்டத்தில் தமிழகம் தந்த தங்கம் பசும்பொன் தேவர் அவர்களும் கலந்துகொள்கிறார்கள் என பலத்த விரம்பரங்கள் செய்யப்ப்ட்டிருந்தன. ஆக மதுரைப் பகுதியே, இது ஒரு சித்திரைத் திருவிழாவோ? என வியக்கும் அளவுக்கு விழாக்கோலம் பூண்டிருந்த்தது.

எங்கள் நாடகக் குழுவில் அன்று நாடகம் இல்லை. விடுமுறை நாள். மதுரையில் அரசாங்க வேலை பார்த்துக்கொண்டிருந்த எனது ஒன்றுவிட்ட மாமனார் சந்தனக் காளைத் தேவர் என்பவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். “இன்றுதான் நாடகம் இல்லையே? எனது வீட்டுக்கு வந்துவிட்டு நாளைக்குத் திரும்பி வந்துவிடலாமேஎன்றார். அதனால் நாடக்க் குழு அதிபர் டி.கே.எஸ். அவர்களிடம் எடுத்துக் கூறி விடுமுறை பெற்று வெளியே வந்தோம்.

உண்மையில், என்னைச் சந்திக்க வந்த என் மாமாவைப் பயன்பயடுத்தி, அன்றைய தினம் நடக்க இருக்கும் பொதுக் கூட்டத்திற்குப் போய் எப்படியாவது நேதாஜி அவர்களையும், பசும்பொன் தேவர் அவர்களையும் நேரில் பார்த்து அவர்களின் மேடைப் பேச்சைக் கேட்டிட வேண்டும் என்ற அளவு கடந்த ஆசைதான் - இந்தத் திட்டம். எனது திட்டம் நிறைவேறியது. அவ்வளவு பெரிய கூட்டத்தில் நானும் மாமா துணையோடு மேடைக்கு மிக அருகில் இடம் பிடித்து அமர்ந்திருந்தேன்.

மக்களின் கரவொலியும் வாழ்த்தொலியும் சேர்த்து முழக்கமிட்ட. பசும்பொன் தேவர் அவர்கள், சிங்கம் போல மேடை ஏறி, நேதாஜி அவர்களை வரவேற்றார். நேதாஜி அமைதியாக மக்களுக்கு வணக்கம் செய்து அமர்கிறார்.

பசும்பொன் தேவர் கம்பீரக் குரலில் பேசத் துவங்கினார். “நமது தாய்த்திரு நாடாம், இந்தப் பாரதப் பூமியை அடிமைப்படுத்தியுள்ள வெள்ளைக்கார ஆதிகத்தை எதிர்த்து வீர சுதந்திரப் போராட்டம் நடந்து வருகிறது. இதை மட்டும் நினைவில் நிறுத்தி, உங்களது ஒவ்வொரு செயலும் அமைந்திட வேண்டும். இவ்வளவுதான் நான் இப்போது சொல்ல முடியும். இதற்கு மேல் நான் பேசக் கூடாது என எனது தலைவரின் விருப்பத்தை மதித்து, அடுத்து நமது தலைவர் நேதாஜி பேசுவார்எனச் சொல்லி அமர்ந்தார்.

பலத்த கரகோஷ முழக்கங்களுக்கு இடையே நேதாஜி அவர்கள் கம்பீரமாக எழுந்து நின்று பேசத் துவங்கினார்.
எனக்கு வாய்ப்பூட்டுச் சட்டம் இந்த வெள்ளைக்கார அரசாங்கம் போடவில்லை. ஆனால், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அந்தச் சட்டத்தைப் போட்டிருக்கிறார்கள். தேவர் வாய் திறந்து பேசினால், அவரது சண்டமாருதக் குரல் ஒலித்தால் இந்த நாட்டு மக்கள் வெகுண்டெழுந்து சுதந்திரப் போரில் தீவிரமாக ஈடுபட்டு விடுவார்கள் என அஞ்சியே இந்தச் சட்டத்தைப் போட்டிருக்கிறார்கள். ஆக, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் மேடைப் பேச்சுக்கே, பரங்கி வெள்ளையர் கூட்டம் எவ்வளவு பயந்து நடுங்குகிறது பார்த்தீர்களா?

சுதந்திரப் போராட்டம் வேகப்படுத்தப்பட இருக்கிறது. விடுதலைப் பெறப் போகிறது இந்தியா. அந்த வீர சுதந்திரத்திற்குக் காரணமாக இருந்தவர்களில் தியாக சீலர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தன்னலமற்ற தியாகச் செயல்கள், இந்திய சுதந்திர வரலர்ற்றில் இடம்பெற்றே தீரும், அத்தகைய சிறப்பு மிக்க பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என் பக்கத்தில் இருக்கிறார்எனத் துவங்கி சுதந்திரப் போர் அறிவிப்புச் செய்தார் நேதாஜி. அந்தச் சிறு வயதில் என் நெஞ்சத்தில் பசுமையாக பதிந்து விட்ட நினைவுகள் இவை.

- நான் வந்த பாதை நூலில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.
No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...