ஆன்மீகம்

          ஜென் பிரிவை தோற்றுவித்த மஹாகஷ்யபா

            போதிதர்மர் புத்த மதத்தின் ஜென் பிரிவை தோற்றுவிக்கவில்லை. உண்மையில் ஜென் பிரிவை தோற்றுவித்தவர் மஹாகஷ்யபா ஆவார். ஆனால் அவர் ஒருபோதும் பேசாத காரணத்தால் மக்கள் அவரை மறந்து விட்டார்கள். அவர் கால வெள்ளத்திற்குள் மறைந்து விட்டார்.

            உண்மையில் அவர் ஒரு அற்புதமான மனிதர். அளவுகடந்த கருணை உள்ளம் கொண்டவர். அவர் எவ்வாறு ஜென் மதத்தை தோற்றுவித்தார் என்பது நினைவில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

            ஒருநாள் வைஷாலியைச் சேர்ந்த ஒரு செருப்புத் தைக்கும் ஏழைத் தொழிலாளியான சுதாஸ் தனது தோட்டத்தில் ஒரு தாமரைப் பூ மலர்ந்திருப்பதைக் கண்டார். அது தாமரைப் பூ பூப்பதற்கான பருவகாலம் கிடையாது. அதைக் கண்டதும் அவர் மிகவும் சந்தோஷமடைந்தார். அது பருவம் இல்லாத காரணத்தால் அந்த அழகிய தாமரைப் பூவை அவரால் நல்ல விலைக்கு விற்க முடியும் என்று நினைத்தார்.

            அவர் அந்த பூவைப் பறித்து எடுத்துக் கொண்டு அரண்மனையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த நகரின் பெரும்செல்வந்தர் தன் தங்கத் தேரில் அவ்வழியே வந்து கொண்டிருந்தார்.

            அந்த அழகிய தாமரைப் பூவைப் பார்த்ததும் அந்த செல்வந்தர் தேரை நிறுத்தினார். பருவம் தவறிய காலத்தில் பூத்த அந்த தாமரைப் பூவை விற்க சுதாஸ்க்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார்.

            ஏழையான சுதாஸ்க்கு அந்தப் பூவுக்கு எவ்வளவு பணம் கேட்க வேண்டும் என்று தெரியவில்லை. நீங்கள் என்ன விலை கொடுத்தாலும் எனக்குப் போதும் என்று சொன்னார். நானே ஒரு ஏழை என்றார்.

            ஆனால் அந்த செல்வந்தர், ஒருவேளை உனக்குத் தெரியாமல் இருக்கலாம், நான் நகரின் வெளியே மாந்தோப்பில் தங்கியுள்ள கௌதம புத்தரை சந்திக்கப் போகிறேன், இந்த பருவம் தவறிய தாமரைப் பூவை நான் அவரது பாதகமலங்களில் சமர்ப்பிக்கப் போகிறேன், இது போன்ற பரிசைக் கண்டு அவரும் ஆச்சரியப்படுவார், நான் உனக்கு 500 தங்க காசுகள் தருகிறேன் என்று சொன்னார்.  

            சுதாஸால் அதை நம்ப முடியவில்லை. தனக்கு 500 தங்க காசுகள் கிடைக்கும் என்று அவர்  கனவு கூட கண்டதில்லை. ஆனால் அதற்குள் மன்னரின் தேர் அங்கு வந்து நின்றது. அந்தச் செல்வந்தர் என்ன தருகிறாரோ அதைவிட 4 மடங்கு அதிகமாக தருகிறேன், விற்றுவிடாதே நில் என்று சுதாஸிடம் மன்னர் கூறினார்.

            என்ன நடக்கிறது என்பதை சுதாஸால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு பூவிற்கு 500 தங்க காசுகளின் 4 மடங்கு, அதாவது 2000 தங்க காசுகள் கிடைக்கிறதா? நீங்கள், ஏன் இதில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை என்று அவர் மன்னனிடம் கேட்டார்.

            ஆனால் அந்த செல்வந்தரை அவ்வளவு எளிதில் தோற்கடித்து விட முடியாது. அவர் மன்னரைவிட பெரும் பணக்காரர். உண்மையில் மன்னன் அந்த செல்வந்தரிடம் ஏராளமான பணம் கடன் வாங்கியிருக்கிறார். நீங்கள் சொல்வது சரியல்ல, நீங்கள் மன்னர் என்றாலும் கூட, இப்போது நாம் இருவரும் போட்டியாளர்கள், மன்னர் என்ன தருகிறாரோ அதை விட 4 மடங்கு அதிகமாக தருகிறேன் என்று அவர் சொன்னார்.

            இவ்வாறு, அவர்கள் இருவரும் மாறி மாறி 4 மடங்கு அதிகமாக தருவதாக சொன்னார்கள். எவ்வளவு பணம் கிடைக்கும் என்று சுதாஸால் கணக்குப் பார்க்க முடியவில்லை. அந்த ஏழைக்கு கணக்கும் அதிகமாக தெரியாது. விலை அவரால் எண்ண முடியாத அளவுக்கு ஏறிவிட்டது. ஆனால் திடீரென அவர் ஒன்றைப் புரிந்துகொண்டார். இரண்டுபேரும் நிறுத்துங்கள், நான் பூவை விற்கப் போவதில்லை என்று சொன்னார்.

            இருவரும் அதிர்ச்சியடைந்தனர். என்ன ஆச்சு என்று அவர்கள் கேட்டார்கள். உனக்கு அதிக பணம் வேண்டுமா என்று கேட்டனர்.

            நீங்கள் எவ்வளவு பணம் கொடுப்பதாகச் சொன்னீர்கள் என்பதே எனக்குத் தெரியாது என்று சுதாஸ் சொன்னார். மேலும், எனக்கு அதிக பணம் தேவையில்லை, நான் ஒரு எளிய காரணத்திற்காக பூவை விற்க விரும்பவில்லை என்று சொன்னார். நீங்கள் இருவருமே இதை கௌதம புத்தருக்குத்தான் கொடுக்கப் போகிறீர்கள். எனக்கு அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர் பெயரை மட்டும்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் இவ்வளவு பணமும் தர போட்டியிடுகிறீர்கள் என்றால் அவர் எப்படிப்பட்டவரைக இருப்பார் என்பதை நான் புரிந்துகொண்டேன். அப்படியானால் நான் இந்த வாய்ப்பை நழுவ விடமாட்டேன். நானே இந்த தாமரைப் பூவை அவருக்கு பரிசளிப்பேன் என்று சொன்னார்.

            புத்தர் இருமடங்கு ஆச்சரியப்படட்டும். ஒரு ஏழை கணக்கு வழக்கு இல்லாத அளவு பணம் கொடுக்க தயாராக இருந்தும் அதை ஏற்க மறுத்து விட்டு தானே அந்தப் பூவை பரிசளித்ததாக இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு சுதாஸ் புத்தரை நோக்கி புறப்பட்டார்.

            மன்னரும், அந்த செல்வந்தரும் சுதாஸ்க்கு முன்பாகவே தங்கள் தேரில் புத்தரை சென்றடைந்தனர். நடந்த கதையை அவரிடம் சொன்னார்கள். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி தங்களை அதிர்ச்சியடைய வைத்துவிட்டதாகச் சொன்னார்கள். நாங்கள் தோற்றுவிட்டோம். என்ன விலை கொடுத்தாலும் பூவை விற்க மறுத்துவிட்டார். நான் எனது கருவூலம் முழுவதையும் கொடுக்கத் தயாராக இருந்தேன் என்று செல்வந்தர் சொன்னார்.

            அப்போது சுதாஸ் நடந்தே அங்கு வந்து சேர்ந்தார். அவர் கௌதம புத்தரின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். அந்த தாமரைப் பூவை அவரது காலடியில் வைத்தார்.

            சுதாஸ், நீ அவர்கள் கொடுத்த பணத்தை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று புத்தர் சொன்னார், அவர்கள் ஏராளமான பணம் தந்திருப்பார்கள், என்னால் உனக்கு எதுவும் கொடுக்க முடியாது என்று சொன்னார்.

            அப்போது, சுதாஸ் கண்களில் கண்ணீர் மல்க நின்றிருந்தார். நீங்கள் இந்த தாமரைப்பூவை உங்கள் கரங்களில் வாங்கிக் கொண்டாலே போதும் என்று சொன்னார். அது அந்தப்பூ தேசத்தை விட பெரிதாக இருந்தது. அந்த பெரும் செல்வந்தரின் கருவூலம் முழுவதையும் விட பெரிதாக இருந்தது. நான் ஒரு ஏழைதான். அதற்காக நான் கவலைப்படவில்லை. நான் என் வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்படவில்லை. நான் பணக்காரன் ஆக வேண்டிய தேவையுமில்லை. ஆனால் இது வரலாற்றுப் பூர்வமான நிகழ்வாக இருந்து பல நூற்றாண்டுகளுக்கு நினைவில் வைக்கப்படும். மனிதர்கள் உங்களை நினைவில் வைக்கும் வரை சுதாஸையும் நினைவில் வைப்பார்கள். அவரது தாமரைப் பூவும் நினைக்கப்படும். இதை நீங்கள் உங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டால் போதுமானது என்று சொன்னார்.

            புத்தர் தனது கரங்களில் அந்த தாமரைப் பூவை எடுத்தார். அது அவர் வழக்கமாக காலைச் சொற்பொழிவை நிகழ்த்தும் நேரமாக இருந்தது. அவர் தனது காலைச் சொற்பொழிவை ஆரம்பிப்பார் என்று எல்லாரும் காத்திருந்தனர். ஆனால் புத்தர் தனது சொற்பொழிவை ஆரம்பிக்காமல் வெறுமனே அந்தத் தாமரைப் பூவையே பார்த்துக் கொண்டிருந்தார்.

            நிமிடங்கள் கடந்தன. ஒரு மணிநேரம் கடந்தது. காத்திருந்த எல்லாரும் பொறுமையிழந்தனர். என்ன ஆனது? இந்தத் தாமரைப் பூ மனதை மயக்கம் பூவாக இருக்குமோ? அவர் வெறுமனே அந்த பூவை பார்த்தவாறே இருக்கிறாரே என்று எல்லாரும் நினைத்தனர். அந்த நேரத்தில், கௌதம புத்தரின் சீடர்களில் ஒருவரும், ஒருபோதும் பேசியிராதவருமான மஹாகஷ்யபா வாய்விட்டுச் சிரித்தார். அவரைப் பற்றி இந்த நிகழ்வுக்கு முன்பும் பின்பும் பேசப்படவேயில்லை. எந்தப் பதிவுகளிலும் அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை.
            புத்தர் அவரை அழைத்து அந்த பூவை அவரிடம் கொடுத்தார். நான் உனக்கு இந்த பூவை மட்டும் கொடுக்கவில்லை. நான் எனது ஒளி, நறுமணம், விழிப்புணர்வு முழுவதையும் தருகிறேன் என்று சொன்னார். அது ஒரு அமைதியான கடத்துதலாக இருந்தது. அந்த பூ ஒரு அடையாளமாக கொடுக்கப்பட்டது.

            இதுதான் ஜென் பிரிவின் ஆரம்பமாக அமைந்தது. என்ன நடந்தது என்று எல்லாரும் மஹாகஷ்யபாவிடம் கேட்டார்கள். நாங்கள் இங்கே இருந்தாலும் நடந்ததை கவனித்தாலும் எங்களால் அந்த பூ கொடுக்கப்பட்டதைத் தவிர எதையும் பார்க்க முடியவில்லை என்று சொன்னார்கள். நீங்கள் புத்தரின் பாதங்களை தொட்டு வணங்கிவிட்டு உங்கள் இடத்திற்குத் திரும்பிச் சென்று கண்களை மூடி அமர்ந்து விட்டீர்கள், என்ன நடந்தது என்று கேட்டார்கள்.

            நீங்கள் குருவிடம் கேளுங்கள் என்று மட்டும் மஹாகஷ்யபா சொன்னதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் உயிரோடு இருக்கும்போது அதற்கு பதில் சொல்லும் உரிமை எனக்கு இல்லை என்று சொன்னார். இது ஒரு புதிய ஆரம்பம் என்று கௌதம புத்தர் சொன்னார். வார்த்தைகளை பயன்படுத்தாமல், உங்கள் முழு அனுபவத்தையும் கடத்துவது இதுவே முதல் முறை என்று சொன்னார். ஒருவர் பெற்றுக் கொள்ளத் தயாராக இருந்தால் போதும்.

            மஹாகஷ்யபா தனது சிரிப்பின் மூலமாக தன்னுடைய பெறும் தன்மையை காட்டினார். அவர் ஏன் சிரித்தார் என்று உங்களுக்குத் தெரியாது. அவர் அந்த கனத்தில் திடீரென தனக்குள்ளே  பார்த்தபோது தானும் ஒரு புத்தர் என்பதை கண்டு சிரித்தார். அதனை அடையாளப்படுத்துவதற்காக நான் அந்த தாமரைப் பூவைக் கொடுத்தேன். அதன் மூலம் நான் அவரது விழிப்புணர்வை ஏற்றுக் கொண்டேன்.

            இந்த மஹாகஷ்யபாதான் ஜென் மதத்தை தோற்றுவித்தவர் ஆவார். மஹாகஷ்யபா மற்றும் புத்தர் இடையே ஏற்பட்ட இந்த சூழ்நிலைதான் ஜென் என்ற நதியின் ஆரம்பம் ஆகும். அவர் மஹாகஷ்யபாவிற்கு பிறகு 1000 ஆண்டுகளுக்கு பின் வாழ்ந்தவராக இருந்தபோதிலும் போதிதர்மர் ஒரு பெரும் வலிமை படைத்தவராக இருந்த காரணத்தால் அவர்தான் ஜென் மதத்தின் நிறுவனர் என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது.

            ஆனால் அவர் சிறந்த வாக்குத்திறன் கொண்டவராக இருந்தார். சொல்ல முடியாத விஷயங்களையும் சொல்லக் கூடியவராக இருந்தார். அவர் பேச முடியாத விஷயத்தையும் பேசக் கூடியவராக இருந்தார். அவர் உங்கள் சுயதன்மையை விழிப்படையச் செய்யக் கூடிய வழிமுறைகள், உபாயங்களை அறிந்தவராக இருந்தார்.

            மஹாகஷ்யபா தன்னுடைய இயல்பு நிலையை உணர மட்டுமே செய்யப்பட்டார். அவருக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை. அது அவரது குருவால் அவருக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம் மட்டுமே. ஒரு குரு இறுதி அங்கீகாரம் என்பதைத் தவிர தனது சீடருக்கு எதையும் கொடுப்பதில்லை. ஒரு சீடரிடம் எல்லாமே உள்ளது. அவரை தனக்குள் பார்ப்பதற்கு ஏதாவது வழியில் தூண்டினால் போதுமானது.

ஓஷோ, போதிதர்மர், சொற்பொழிவு -05

------------------------------------
ஆன்மா, சூட்சும, ஸ்தூல உடல்கள், மனம்

ராமன் ஐயங்காரின் ஆன்மீக கேள்விகளும் நமது பதில்களும்…

Raman Iyengar 

• எனக்கு சிறு வயதில் இருந்தே மரணத்தை பற்றிய பயம் உண்டு ஆனால் அதனை பற்றி அறிய வேண்டும் என்ற ஆவலும் பல வித மான ஐயங்களும் தான் ஆன்மிகத்தில் இன்றும் பல விஷயங்களை என்னை தேட வைக்கிறது...

- மரண பயம் சாதாரணமாக எல்லாருக்கும் ஏற்படுவதே. ஆன்மீகத் தேடலுக்கு இந்த பயமும் ஒரு காரணமாகிறது. சமூக அவலங்களும் ஆன்மீகத் தேடலுக்கு காரணமாகவும், நாத்திகத்திற்கு காரணமாகவும் அமைகின்றன. நாத்திகமும் ஆன்மீகத் தேடலுக்கு காரணமாக அமைகிறது.

• ஆன்மா என்பது என்ன ? அதற்கு வடிவம் உண்டா ? அப்படி வடிவம் இருந்தால் அது அணு அளவு சிறியதா ? அல்லது அண்டம் அளவு பெரியதா ?

- ஆன்மா என்பது கடலிலிருந்து ஆவியாகி மழையாகப் பெய்யும் மழைத்துளிக்குச் சமம் என்று சொல்லலாம். அதன் நோக்கம் கடல் என்ற கடவுளை, பிரம்மத்தை அடைவதே. அதற்கு வடிவம் இல்லை. அணு என்பது மழைத்துளி என்றால், அண்டம் என்பது கடல். மழைத்துளியும் கடலும் வேறு வேறல்ல. இரண்டும் ஒரே பொருளின் இரண்டு வடிவம். எனவே இதில் எது பெரிது என்று கேட்பது நமது மனதின் ஒப்பீட்டையே காட்டுகிறது.

ஒரு துளியை கடலுடன் ஒப்பிடுவது சரியா அல்லது கடலில் உள்ள துளிகள் அனைத்தையும் தனித்தனியாக பிரித்து ஒப்பிடுவது சரியா? அப்படி ஒப்பிட்டால் எது பெரிது என்ற கேள்வியே வராது. உலக அளவுகள் ஆன்மீகத்திற்கு ஒத்து வராது. மனம் என்பது மாயையின் பிரதிநிதி. அது இருக்கும் வரை ஆன்மீகத்தை சரியாக புரிந்துகொள்ள முடியாது. இறைவனை அடைய முடியாது.

• ஆன்மா அலையுமா ? உடலில் இருந்து விடு பட்ட பின் மனம் இல்லாத ஆன்மா ஏன் அலைய வேண்டும் ? அது காற்றோடு கலைந்து விடுமா ? நிலத்தில் இருக்குமா ?நீரில் மூழ்கி விடுமா ?

- ஆன்மா அலையும். ஆன்மா மனதின் மூலம் உருவான தனது நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள மீண்டும் ஒரு உடலைத் தேடுகிறது. அதற்காக அது அலைகிறது. தகுந்த கர்ப்பம், உடல் கிடைக்கும் வரை அது அலைந்துகொண்டிருக்கிறது. ஆன்மா காற்றில் கலக்காது. நிலத்தில் நடக்காது. நீரில் மூழ்காது. (மறையாது).

• இப்படி அதிகரித்து கொண்டே போனது என் சந்தேகங்கள் ...மரணத்திற்கு பின் என் நிலை என்ன? சொர்க்கமா ? நரகமா ? இப்படி நீண்டு கொண்டே போனது என் சந்தேகம் !!! ஆனால் ஆன்மா, சொர்க்கம், நரகம் என்ற கருத்துகளை சூட்சம ,ஸ்தூல உடல் நிலை என் சந்தேகத்தை தெளிவு படுத்துகிறது.

- மரணத்திற்குப் பின் ஒவ்வொருவரும் அடைந்த பக்குவத்திற்கேற்ப, ஆசைகளுக்கேற்ப அவர்களின் சூட்சும (கண்ணுக்குத் தெரியாத) உடல் தங்களுக்குப் பொருத்தமான உடலைத் தேடிக் கொண்டிருக்கும். சொர்க்கம், நரகம் என்பது மதவாதிகளின் கற்பனை. அப்படி ஒன்று இல்லை. இது மதங்களின் மீது, ஒழுக்கங்களின் மீது மக்களுக்கு பற்று ஏற்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் மதவாதிகளால் ஏற்படுத்தப்பட்டவையே. இவற்றுக்கும் ஒரு மனிதனின் சாதாரண ஆசைகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

ஆன்மா, சொர்க்கம், நரகம் என்ற கருத்துக்களும் சம்பந்தமில்லாதவை. ஆன்மாவின் நீட்சிதான் சூட்சும, ஸ்தூல (கண்ணுக்குத் தெரியும்) உடல்.
சூட்சும, ஸ்தூல உடல்கள் என்பதை இப்படிப் புரிந்துகொள்ளலாம். நாம் அணியும் முழுக்கை சட்டையில் கை உள்ளது. நாம் சட்டையை கழற்றிவிட்டால் அந்த சட்டையில் உள்ள கையால் ஒன்றும் செய்ய முடியாது. சட்டை செயல்பட வேண்டுமானால் அதனை உடலில் அணியப்பட்டிருக்க வேண்டும். அதுபோலவே வெறும் பேண்ட் நடக்காது. உருவமற்ற ஆன்மாவானது சூட்சும உடலைப் பெற்று உடலுக்குள் வருகிறது.

• கடவுள் மனிதனின் ஆத்மாவை மூன்று சரீரங்களுக்குள் அடைத்து வைத்துள்ளார். 
இதில் 'காரண சரீரம்'(எண்ணங்கள் ) முதன்மையானது. 
இரண்டாவது மனம் மற்றும் உணர்ச்சிகளால் ஆன 'சூட்சும சரீரம்'. 
மூன்றாவதாக புலன்களால் உணரக்கூடிய‌ சாதாரண 'ஸ்தூல சரீரம்' (நம் உடல் )ஆகும். 

- கடவுளின் படைப்பை புரிந்துகொள்ளும் முயற்சியில் ஞானிகளால் கண்டறியப்பட்ட உண்மைகளே இவை. ஆன்மா, சூட்சும, ஸ்தூல உடல்கள், மனம், எண்ணங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.

மனம் என்பது எண்ணங்களின் ஓட்டமே. இதனை இழக்க முடியும். மனமற்ற நிலையை ஆன்மாவை உணரும் முதல்படி. எண்ணங்களை இழந்துவிட்டால் மனமும் அதில் எழும் ஆசையும் மறைந்துவிடும். அதன் பின் ஸ்தூல உடலை இழக்கத் தயாராகி விடுவோம். ஸ்தூல உடலை இழக்கத் தயாராகும்போது சூட்சும உடலுக்கும் வேலையில்லாமல் போய்விடுகிறது. எனவே ஆன்மா தனித்து விடுகிறது. இந்த ஆன்மா பரமாத்வா உடன் இணைந்து விடுகிறது.

• சமீபத்தில் இறக்கும் மனிதன், அதே போன்ற மனோபாவம் மற்றும் ஆன்மீகத் தன்மை உடைய ஒரு சூட்சும குடும்பத்தால் ஈர்க்கப்படுகிறான்.

- இறக்கும் ஒரு மனிதன் தான் இறந்ததை இரண்டு மூன்று நாட்களுக்கு உணருவதில்லை. தன் குடும்பத்தினர் மீது அதிகம் பற்று வைத்திருப்பவராக இருந்தால் அவர்களுடன் அதிக நாட்கள் இருக்கலாம். ஒரு மனிதன் தான் கொண்டிருக்கும் ஆசைகள் காரணமாக அவனது சூட்சும உடல் தனக்குப் பொருத்தமான கர்ப்பம் ஏற்படும் வரை காத்திருந்து அந்த உடலைப் பெறுகிறது.

• சூட்சும உலகின் சராசரி ஆயுட்காலம் ஐநூறு முதல் ஆயிரம் ஆண்டுகள்.
இது பல காரணங்களைக் கொண்டு ஞானிகள் கணித்தவையாக இருக்கலாம். ஆனால் ஆனால் மனிதன் என்று தன் மனதை இழக்கிறானோ அன்றே சூட்சும உடலின் தேவை குறைந்து விடும். எனவே அதன் ஆயுளும் அன்றே முடிந்து விடும். இது ஆன்மீக ஞானிகள் ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டிய விஷயம்.

• மனிதனுடைய ஆத்மாவானது இறைவனின் முப்பத்தைந்து எண்ணங்களின் சேர்க்கை ஆகும். இதிலிருந்து பத்தொன்பது மூலப்பொருட்கள் அடங்கிய சூட்சும உடலையும், பதினாறு மூலப்பொருட்களை உள்ளடக்கிய ஸ்தூல உடலையும் உருவாக்கினான்.

- இவை ஆய்வுக்குரியவை. இந்தக் கணக்குகளுக்கு பொருத்தமான விளக்கங்கள் தேவை.

• ஸ்தூல உடலானது புலன்களின் மூலம் மகிழ்ச்சி கொள்கிறது.

- உண்மை.

• ஆனால் சூட்சும உடலோ ஒளிவடிவிலான அதிர்வலைகள் மூலம் தங்களின் ஆசைகளை, அனுபவங்களை நிறைவேற்றிக் கொள்கிறது.

-  சூட்சும உடல் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவே ஸ்தூல உடலைத் தேடுகிறது. அது சுயமாக தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடியதாக இருந்தால் அதற்கு ஸ்தூல உடல் தேவையாக இருக்காது. மறு பிறவியையும் அடையாது.

• இது ஒரு கனவு நிலைக்கு ஒப்பானது ஆகும். மேற்கூறிய இன்ப நிலைகளைக் கடந்த ஆத்மாவானது அடுத்ததாக காரண சரீரத்தில் வந்து நிற்கும். காரண உலகில் நினைத்த மாத்திரத்தில் எல்லா இன்பங்களையும் அடைய முடியும்...

- இதுவும் ஏற்க முடியாத கருத்து. ஆத்மா காரண சரீரத்தில் அனைத்து இன்பங்களையும் அடைய முடியும் என்றால் அதற்கு ஸ்தூல உடல் தேவையில்லை. இதுவும் கற்பனை அடிப்படையிலான ஒன்றே.

• இந்த மண்ணுலகில் தன் கர்மங்களை முழுவதும் செய்து முடிக்காத மனிதர்களின் அல்லது ஜீவராசியின் ஆத்மா இந்த சூட்சம, ஸ்தூல நிலைகளிலேயே சுற்றி கொண்டிருக்கும்.. ஸ்தூல நிலை என்பது நாம்  இப்பொழுது இருக்கும் நிலை. சூட்சம நிலை என்பது தூக்கத்தில் வரும் கனவு என்ற மாயை நிலை.

- ஆசையின் காரணமாகவே ஒரு உயிர் தோன்றுகிறது. ஆசைகள் பூர்த்தியடையும் வரை ஆன்மா சூட்சும உடலைக் கொண்டு மறுபிறவிகளின் மூலம் புதிய உடல்களை பெறுகிறது. கனவு சூட்சுமத்தின் ஒரு பகுதி. அதுவே சூட்சுமம் ஆகாது. மாயை என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக நினைப்பது. நிரந்தரம் இல்லாத ஒன்றை நிரந்தரமானதாக நினைப்பது.
உதாரணமாக பரபரப்பாக வாடிக்கையாளர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும் ஒரு நிறுவன ஊழியரை எடுத்துக் கொண்டால் அவர் அந்த வேலையில் மூழ்கியிருக்க வேண்டும். அதே ஊழியர் அந்த வேலையை விட்டு விட்டு வாடிக்கையாளர்களை கவனிக்க வேண்டிய தேவை இலலாமல் தனிமையில் வேலையில் மட்டுமே மூழ்கியிருக்க வேண்டிய வேலையை பார்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது முந்தைய வேலை, அதில் காட்டிய பரபரப்பு அவருக்கு வேடிக்கையானதாக, வீணானதாக தோன்றலாம்.  இதுதான் மாயை.

• ஒரு மனிதன் ஒரு நாளில் பதினாறு மணி நேரம் ஸ்தூல உடலில் சஞ்சரிப்பான். எஞ்சியுள்ள நேரத்தை தூக்கத்தில் செலவிடும் பொழுது கனவுகளின் மூலம் சூட்சும சரீரத்தை அடைகிறான். அங்கே நினைத்ததை நிறைவேற்றிக் கொள்கிறான்.

- ஆத்மா ஸ்தூலம், சூட்சுமம் உடல்களில் ஒருசேர வசிக்கிறது. தூக்கத்தின்போது ஸ்தூல உடலுக்கு ஓய்வளிக்கிறது. இருந்தாலும் ஆன்மா விழிப்புடனே இருக்கிறது. கனவில் நினைத்ததை நிறைவேற்றுவது என்பது கற்பனையான ஒன்றுக்கு ஒப்பானதே. உண்மையானதாகாது.

• நித்திரை கனவுகள் அற்ற ஆழ்ந்த நிலையில் மனிதன் உணர்வை அதாவது 'நான்' எனும் உணர்வைக் கடந்து காரண உலகத்தில் வாழ்கிறான். கனவு காண்பனுடைய நித்திரை களைப்பில் ஆழ்கிறது. மாறாக தன்னை மறந்து காரண சரீர நிலை எய்தும் உடலானது புத்துணர்ச்சி பெறுகிறது.

(மனதை) எண்ணங்களை இழக்கும்போது கனவுகள் மறைந்துவிடும். அல்லது கனவுகள் பொய்யானவை என்பதை அறியும்போது அவை மறைந்து விடும். அப்போது ‘நான்’ என்ற உணர்வு கடக்கப்படுவதில்லை. அது அப்படியே இருக்கிறது. கனவுகளற்ற ஆழ்ந்த தூக்கத்தில் உடல் முழுமையான ஓய்வைப் பெறுகிறது. கனவு உடலின் தூக்கத்திற்கு இடையூறாகவே உள்ளது. உடல் தூக்கத்தின் மூலம் ஓய்வைப் பெற்று புத்துணர்வு பெறுகிறது.

• மரண பயத்திற்கு உட்படாத மனிதர்கள் உலகில் ஒருவர் கூட இருக்க முடியாது. அந்த பயத்தை விட்டு தள்ளுங்கள். மண்ணுலக கடமைகளை முழுவதும் தீர்த்து நித்ய சூட்சமத்தில் ஆழ்வோம். பிரபஞ்சத்தின் ரகசியத்தை உணர்வோம் !

- மரண பயம் என்பது அறியாமையால் ஏற்படுவது. மரணம் என்பது ஒரு முடிவு என்று நினைக்கிறோம். அதனால் நாம் அதைக் கண்டு அஞ்சுகிறோம். ஆன்மாவின் பயணத்தில் பிறப்பும் இறப்பும் நிறுத்தங்களில் ஏறி இறங்குவதைப் போன்றதாகும். இதை உணர்ந்தவர்கள் பிறப்புக்கு மகிழ்ச்சி அடையவோ இறப்புக்குத் துக்கமடையவோ மாட்டார்கள்.

யாரும் தாங்கள் செல்லும் ஊரை அடைந்ததும் எத்தனை மகிழ்ச்சி அடைவார்களோ அதைப்போலவே இறப்பை மகிழ்ச்சியுடன் அணுக வேண்டும். அந்த நிலையே பெரும் மாற்றத்தைக் கொடுக்கும். நமது வாழ்க்கையை சாதாரணமாக வாழ்வதே நமது கடமையாகும். அது எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் செய்யப்பட வேண்டும். அந்த நிலைதான் ஆசைகளிலிருந்து விடுவிக்கும். முக்தியைத் தரும்.

வாழ்க பாரதம் ! வளர்க தர்மம் !

------------------------ கழுதையிடமிருந்து ஒரு பாடம்!

ஜென் துறவி ஒருவர் தன் சீடர்களிடம் உலகின் எதார்த்தங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சீடர்களுள் ஒருவன், "குருவே, நீங்கள் இன்பத்தில் மகிழ்ச்சியோ, துன்பத்தில் சோர்வோ அடைவதில்லை. ஆனால், இரண்டையும் தாங்கள் சமமாக எடுத்துக் கொள்கிறீர்கள் அல்லவா? இந்த குணம் உங்களுக்கு எப்படி வந்தது?" என்று கேட்டான்.

அதற்கு அந்த குரு "கழுதையிடமிருந்து தான்..." என்று உடனே கூறினார். உடனே அனைத்து சீடர்களும் "என்ன கழுதையிடமிருந்தா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டனர்.

"ஆமாம், அதனிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். நீங்கள் கழுதையை கூர்ந்து கவனித்ததில்லையா? காலையில் அது அழுக்கு துணிகளை சுமந்து செல்லும். மாலையில் சுத்தமான துணிகளை சுமந்து செல்லும் தானே! அதை வைத்து தான்" என்று சொன்னார்.

அப்போது மற்றவன் "இதில் என்ன குருவே இருக்கிறது, நீங்கள் அதனிடம் கற்று கொள்வதற்கு" என்று கேட்டான். அதற்கு குரு "ஆமாம், அது அழுக்கு துணிகளை சுமக்கும் போது வருத்தப்படுவதும் இல்லை, சுத்தமான துணிகளை சுமக்கும் போது மகிழ்வதும் இல்லை. அதைத் தான் கற்றுக் கொண்டேன்" என்று கூறினார்.


-------------------------------

                                  பேசியது யார்?


ஒரு இளம் சன்னியாசி ஒரு குருவின் ஆசிரமத்தில் தங்கியிருந்து துறவறம் பற்றி அறிந்துகொள்ள முயன்று வந்தார்.

ஆனால் அந்த குருவோ எப்போதாவது ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்வார். அவர் சொல்வதும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்காது. இதனால் மனம் வெறுத்த அந்த துறவி அங்கிருந்து வெளியேற முடிவு செய்தார்.

ஆனால் அவர் வெளியேறும் முன்பாக அங்கு ஒரு நிகழ்வு நடந்தது. அதன் பிறகு அந்த துறவி அங்கிருந்து வெளியேறவேயில்லை.

அதாவது, அன்றைய தினம் மற்றொரு இளம் துறவி அந்த ஆசிரமத்திற்கு வந்தார். அங்கிருந்தவர்களுடன் பேச ஆரம்பித்த அவர் பல்வேறு ஆழமான கருத்துக்களை பேசினார். ஆன்மீகத்தின் பல கோணங்களை ஆராய்ந்து ஏறக்குறைய 2 மணிநேரம் பேசினார். அந்த ஆசிரமத்தின் குரு கண்களை மூடியவாறு அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அந்தப் பேச்சைக் கேட்ட இளம் துறவி, “குரு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று முடிவு செய்தார். அவருடன் சென்று விட முடிவு செய்தார். அவரது பேச்சைக் கேட்ட அனைவரும் அவரைப் பாராட்டினார்கள்.

பேசி முடித்த அந்த புதிய துறவி அருகேயிருந்த குருவிடம் தனது பேச்சு எப்படி இருந்தது என்று சிறிது கர்வத்துடன் கேட்டார். கண் விழித்த அந்த குரு, நீ எப்போது பேசினாய்? நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் 2 மணிநேரமாக நீ பேசாமல் அமர்ந்து கொண்டிருக்கிறாயே என்றார்.

அப்போ, இதுவரை பேசியது யார் என்று அந்த புதிய துறவி கேட்டார். “சாஸ்திரங்கள் பேசின, நீ படித்த புத்தகங்கள் பேசின, நீ உன் சுய அனுபவத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை“ என்று குரு சொன்னார்.

இப்படித்தான் பலரும் தாங்கள் மற்றவரிடமிருந்து கேட்ட கற்ற விஷயங்களை பேசி வருகின்றனர். சுய அனுபவத்தைப் பேசுவதில்லை. சுய அனுபவமே உண்மையானது.

-      ஓஷோ


---------------------------------------------------------------

சாதுவின் அடையாளம் என்ன?

சுஃபி ஞானியான இப்ராஹிம் இந்தியாவுக்கு வந்திருந்தார். இவர் துறவு மேற்கொள்வதற்காக தனது அரசையே துறந்தவர் ஆவார். 

அப்போது சாதுக்களைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார். அவர் ஒரு சாதுவிடம் கேட்டார், “சாதுவின் அடையாளம் என்ன?“

அதற்கு அந்த சாது சொன்னார், ‘சாப்பாடு கிடைத்தால் மகிழ்ச்சியாக சாப்பிட வேண்டும். அது கிடைக்காவிட்டால் அப்போதும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.’

அதற்கு இப்ராஹிம், “இது நாயின் அடையாளம்“ என்றார்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சாது, “அப்படியானால் சாதுவின் அடையாளம் என்ன?” என்று கேட்டார்.

“சாப்பாடு கிடைத்தால் பகிர்ந்து சாப்பிட வேண்டும். சாப்பாடு கிடைக்காவிட்டால், அன்றைய தினம் நோன்பு இருக்க வாய்ப்புக் கொடுத்ததற்காக நடனமாடி இறைவனுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்” என்று இப்ராஹிம்.
----------------------------------------------------

மகாவீரரும் மாட்டுப் பண்ணை உரிமையாளரும்ஒருமுறை மகாவீரர் பிரச்சாரத்திற்காக அருகேயுள்ள கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

மழைக்காலம் முழுவதும் அவர் பிரச்சாரம் செய்வதில்லை. சில நாட்களுக்கு முன்புதான் மழைக்காலம் முடிந்திருந்தது. வழியில் அவர் ஒரு மாட்டுப் பண்ணையை கடந்து சென்று கொண்டிருந்தார்.

அங்கே நின்றிருந்த அந்தப் பண்ணையின் உரிமையாளர், “ஐயா இந்தச் செடி பூப்பூக்குமா, இல்லை பூப்பூக்காதா?” என்று கேட்டார்.

உடனே, மகாவீரர் கண்களை மூடி தியானிக்க ஆரம்பித்தார். அவர் கண்களைத் திறக்கும் முன்பாக மாட்டுப் பண்ணைக்காரர் அந்தச் செடியை பிடுங்கி தொலைவில் எறிந்தார். “இப்போது இந்தச் செடி பூப்பூக்குமா?” என்று கேட்டுவிட்டு அவர் பலமாகச் சிரித்தார்.

மகாவீரரும் ஒன்றும் பேசாமல் புன்னகை புரிந்தவாறு சென்று விட்டார். அவர் சென்ற பின் ஓரிரு நாட்கள் நல்ல மழை பெய்தது. அந்தச் செடி எழுந்து நின்றது.

மகாவீரர் ஒரு வாரகாலத்தில் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அந்த வழியே திரும்பினார். மகாவீரரை பார்த்ததும் அந்தப் பண்ணை உரிமையாளர் செடியைப் பார்த்தார். அந்தச் செடி உயிர் பிடித்து நின்றதை பார்த்துத் திகைத்தார்.

பின்னர் மகாவீரரைப் பார்த்து “நீங்கள் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டீர்களே?” என்று கேட்டார்.

“நான் தியானத்தின் மூலம் அந்த செடிக்கு அபரிமிதமான உயிர்வாழும் ஆசை இருக்கிறது என்பதை கண்டேன். அதே நேரத்தில் அருகே நின்ற நீயும் என் பார்வையில் வந்தாய். நீ என்ன செய்யப் போகிறாய் என்பதை அறிந்துகொண்டேன்” என்றார்.

இப்போது மகாவீரர் சிரித்துவிட்டுச் சென்றார். மாட்டுப் பண்ணை உரிமையாளர் திகைத்து அமைதியாக நின்றார்.

நடக்கப்போவதை நாம் மாற்றி விடலாம் என்று நினைப்பதும் வீணே.

- சொன்னவர் ஓஷோ


------------------------------------------------
                                                     அக்பரும் தான்சேனும்பேரரசர் அக்பரின் அவையில் இடம்பெற்ற இசையமைப்பாளர், பாடகர்களில் தான்சேனும் ஒருவராவார். அக்காலகட்டத்தில் தான்சேன் மிகச் சிறந்த பாடகராக இருந்தார்.

ஒருமுறை தான்சேனை விடச் சிறந்த பாடகர்கள் உலகில் இருப்பார்களா என்ற சந்தேகம் அக்பருக்கு ஏற்பட்டது. இதை அவர் தான்சேனிடமே கேட்டார்.

எனது குருநாதர் ஹரிதாஸ் சிறந்த குரல்வளம் படைத்த பாடகர், அவர் முன்பாக நான் ஒன்றுமேயில்லை என்று சொல்கிறார்.

அப்படியானால் அவரது பாடலைக் கேட்க வேண்டும், அவரை அழைத்து வாருங்கள் என்று அக்பர் சொல்கிறார்.

அவரது பாடலைக் கேட்க வேண்டுமானால் நாம்தான் அவரிடம் செல்ல வேண்டும், அவர் வரமாட்டார் என்று தான்சேன் சொன்னார்.

அதைக் கேட்டதும் அவரது பாடலைக் கேட்கத் தயாரானார். அவர்கள் இருவரும் நடுநிசியில் புறப்பட்டுச் சென்று ஹரிதாஸின் குடிசைக்கு வெளியே மறைந்திருந்து காத்திருந்தார்கள். அதிகாலை 3 மணிக்கு ஹரிதாஸ் பாட ஆரம்பித்தார். அவரது பாடலைக் கேட்டதும், அக்பரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது.

அவர் பாடி முடிந்ததும் இருவரும் அரண்மனைக்குத் திரும்பி விட்டனர். உங்கள் குருநாதரின் குரல் எங்கே, உங்களது குரல் எங்கே, ஏன் இந்த வித்தியாசம் என்று அக்பர் கேட்டார்.

அதற்கு தான்சேன், அரசே நான் ஒன்றை எதிர்பார்த்துப் பாடுகிறேன், அவர் எதையும் எதிர்பார்த்துப் பாடுவதில்லை, இதுதான் வித்தியாசம் என்று சொன்னார்.

இதையே கீதையில் கிருஷ்ணர் கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று சொன்னார். நீங்கள் பலனை எதிர்பார்க்கும்போதே உங்கள் வேலையின் தரம் குறைந்து விடுகிறது.

- சொன்னவர் ஓஷோ

-------------------------------


                                              புத்தரின் பதில்கள்


ஒருநாள் புத்தர் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார்.

அன்று காலையில் அவரிடம் ஒருவர் வந்தார்.

“கடவுள் இருக்கிறாரா?” என்று அவர் புத்தரிடம் கேட்டார்.

“இல்லை” என்று புத்தர் சொன்னார்.

“எப்பவும் இருந்ததில்லை. இருக்கவுமில்லை. இருக்கப் போவதுமில்லை”

அவர் நடு நடுங்கிப் போய்விட்டார்.  

“நீங்க என்ன சொல்றீங்க? கடவுள் இல்லையா?” என்று கேட்டார்.

“நிச்சயமாக இல்லை” என்று புத்தர் சொன்னார்.

“எல்லா இடத்திலும் தேடிப் பார்த்து விட்டேன். நான் சொல்றேன் இல்லை.”

மதியம் ஒருவர் அந்த கிராமத்திற்கு வந்தார்.

“எனக்குத் தெரிந்த வரைக்கும் கடவுள் இல்லை. நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேட்டார்.

“கடவுள் இல்லையா? எல்லா இடத்திலும் அவர்தான் இருக்கிறார்” என்று புத்தர் சொன்னார்.
“அவரில்லாமல் வேறு எதுவும் இல்லை”

“நீங்க என்ன சொல்றீங்க? புத்தர் நாஸ்திகர் என்று அல்லவா நான் நினைத்திருந்தேன்” என்று அவர் சொல்லிச் சென்றார்.

மாலையில் ஒருவர் வந்தார்.

“கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“நானும் ஒன்றும் சொல்ல மாட்டேன்” என்று புத்தர் சொன்னார்.

“நானும் ஒண்ணும் சொல்ல மாட்டேன்” என்றார்.

“இல்லை. ஏதாவது சொல்லுங்க” என்று அந்த நபர் கேட்டார்.

“நான் எதுவும் சொல்ல மாட்டேன்” என்றார் புத்தர்.

அந்த மூவரும் சென்று விட்டனர். ஆனால் இந்த மூன்று நிகழ்ச்சியின்போதும் புத்தருடன் இருந்த ஆனந்த் இது பற்றி நினைத்து குழம்பிப் போனார். காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் மூன்று பதில்களைக் கேட்ட ஆனந்த் குழம்பிப் போயிருப்பார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

புத்தர் இப்படி காலை, மதியம், மாலை என சம்பந்தம் இல்லாத பதிலைச் சொல்லுவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஞானிகளால்தான் முரணாக இருக்க முடியும்.

புத்தியில்லாதவர்கள்தான் ஒரேமாதிரி இருப்பார்கள். புத்திசாலிகள் முரணாகத்தான் இருப்பார்கள். ஏனெனில் ஒவ்வொரு பதிலும் வெவ்வேறு நபருக்கு கொடுக்கப்பட்டது. எல்லாருக்கும் ஒரே பதிலைச் சொல்லவில்லை.

“நீங்கள் என்னைக் குழப்பிவிட்டீர்கள். இதற்கு விளக்கம் அளிக்காவிட்டால் எனக்கு தூக்கம் வராது. எனக்குப் பதில் சொல்லுங்கள். இதில் எது சரி? மூன்று பதில்களிலும் எது சரியானது?” என்று ஆனந்த் புத்தரிடம் கேட்டார்.

“அதைப் பத்தி நீ ஏன் கவலைப்படுகிறாய்? யாருக்கு சொன்னோனோ அவர்களுக்கு புரிந்திருக்கும். அந்த கேள்வியும் உன்னுடையது இல்லை. பதிலும் உனக்கில்லை. நீதான்  கேள்வியே கேட்கவில்லையே. பதிலை ஏன் கேட்டாய்?” என்று புத்தர் கேட்டார்.

“என்ன கிண்டல் செய்றீங்களா? எனக்கு காது இருக்கிறது. நான் செவிடனும் அல்ல. நானும் பக்கத்தில்தான் இருந்தேன். எனக்கும் கேட்டுவிட்டது” என்று ஆனந்த் சொன்னார்.

“மற்றவர்களுக்கு சொல்வதை கேட்பது தவறு.”

“உனக்கு என்ன அவசியம் வந்தது?” என்று புத்தர் சொன்னார்.

“எனக்கு அவசியமில்லை. ஆனால் எனக்கு கேட்டுவிட்டது. நான் குழம்பி விட்டேன். ஒரே நாளில் மூன்று பதில்கள் கொடுத்தால் எப்படி? நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?”

“நான் மூன்று பதில்கள் கொடுக்கவில்லை. நான் ஒரே பதிலைத்தான் சொன்னேன்” என்று புத்தர் சொன்னார்.

“நீங்கள் சொல்வதை நான் உறுதி செய்யமாட்டேன்” என்பதுதான் அந்தப் பதில்.

“நீங்கள் சொல்வதற்கு ஆமாம் அல்லது இல்லை என்று சொல்ல மாட்டேன். நான் மூன்று வேளையும் ஒரே பதிலைத்தான் சொன்னேன்.”

“காலையில் வந்தவர் கடவுள் இருக்கிறார் என்பதை உறுதி செய்துகொள்ள விரும்பினார். அதாவது அவர் எந்தக் கடவுளை நம்புகிறாரோ, அதை உறுதிப்படுத்திக்கொள்ள என்னுடைய உதவியை நாடி வந்தார். புத்தரும் இதையே சொல்கிறார் என்று தன்னைத்தானே ஆசுவாசப் படுத்திக்கொள்ள விரும்பினார். அவர் என்னைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார்.”

“அவர் என்னிடம் கற்றுக் கொள்ள வரவில்லை. என்னிடமிருந்து எதையும் அறிந்துகொள்ள வரவில்லை. அவருக்கு ஏற்கனவே ஒரு விஷயம் தெரிந்திருக்கிறது. ஏற்கனவே கற்றிருக்கிறார். நான் சொல்வதையே புத்தரும் சொல்கிறார் என்று என்னிடம் சான்றிதழ்ப்  பெறவே விரும்பினார். நான் சொல்வது சரியே. புத்தரும் இதையே சொல்கிறார். தன்னுடைய அகங்காரத்தை பலப்படுத்திக் கொள்ள ஒரு சான்று தேடுகிறார். அவர் தனது அகங்காரத்திற்காக ஞானிகளையும் சுரண்ட விரும்புகிறார்.”

“மதியம் வந்த நபர் நாஸ்திகர். அவரும் தனது நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். தனக்கு தெரியும் என்று இருந்தார். யாருக்கு உறுதியாக தெரிகிறதோ, அவருக்கு ஆர்வம் இருக்காது. நிச்சயமாக தெரிந்திருக்கும் ஒருவருக்கு ஒன்ற அறிந்துகொள்ளும் ஆர்வம் எப்படி வரும்?”

“ஆனால் உறுதியாக தெரிந்திருப்பவர்களும் ஆர்வம் காட்டுவதுதான் வேடிக்கை. அப்படியானல் அவருடைய உறுதி உறுதியற்ற தன்மைக்கு மேலாக இருக்கிறது என்று பொருள். மேலடுக்கு முதிர்ந்திருக்கிறது என்றால் கீழடுக்கு முதிர்ச்சி அடையவில்லை. உறுதி மேலே உறுதியற்றது கீழே. ”

“எனவே உறுதியற்ற தன்மையானது இன்னும் உறுதி செய்துகொள் என்று உறுதி நிலையை உந்துகிறது. இன்னும் உறுதி செய்துகொள். அது உறுதி இல்லை. ஒன்றும் தெரியாது. ஆனால் தெரியும் என்ற பிரமை ஏற்பட்டிருக்கிறது.”

 இதைப்போலவே அர்ஜூனன் கேள்வி மேல் கேள்வியாக கிருஷ்ணரிடம் கேட்டுக் கொண்டே செல்கிறான்.

- ஓஷோ
கீதா தர்ஷன் அத். 1 & 2, சொற்பொழிவு 15. ---------------------------


இந்திய சன்னியாசியும் அலெக்சாண்டரும்


அலெக்சாண்டர் இந்தியா எல்லையிலிருந்து கிளம்பும்போது கிரேக்கத்திற்கு இந்திய சன்னியாசி ஒருவரை கொண்டு வருமாறு அங்குள்ள அறிஞர்கள் சொன்னதை அவரது நண்பர்கள் நினைவுறுத்தினார்கள்.

சன்னியாசி என்பவர் உலகில் இந்தியாவுக்கு மட்டும் கிடைத்த ஒரு வரம். ஆனால் அது ஏராளமானதாக உள்ளது. எல்லா நாடுகளின் செல்வங்களை கொண்டு செல்லும்போது ஒரு சன்னியாசியையும் கொண்டு சென்றால்தானே முழுமையானதாக இருக்கும்?

உலகின் அனைத்து செல்வங்களும் வீணாகும்போது ஒருவேளை நமது சன்னியாசி மதிப்பு மிக்க செல்வமாகலாம். எனவே அலெக்சாண்டரின் நண்பர்கள் நாம் ஏராளமான பொருட்களை கொள்ளையடித்து விட்டோம், ஒரு சன்னியாசியையும் அழைத்துச் செல்வோம் என்று நினைவுறுத்தினார்கள்.

செல்வத்தை கொள்ளையடித்திருக்கிறோம். ஆனால் செல்வம் அங்கேயும் இருக்கிறது. வைரம், வைடூரியம் எடுத்துச் செல்கிறோம். அவை அங்கேயும் உள்ளன. அங்கே இல்லாத சன்னியாசியையும் அழைத்துச் செல்வோம் என்றனர்.

இவ்வளவு பொருட்களையும் எடுத்துச் செல்லும்போது ஒரு சன்னியாசியை அழைத்துச் செல்வதில் என்ன சிரமம் என்று நினைத்த அலெக்சாண்டர், “போய் ஒரு சன்னியாசியை அழைத்து வாருங்கள்”  என்றார்.

அவர்கள் அருகேயுள்ள கிராமத்திற்குச் சென்று,“ ஊரில் யாராவது சன்னியாசி இருக்கிறார்களா?” என்று கேட்டார்கள்.

“சன்னியாசி இருக்கிறார். ஆனால் அதனால் என்ன பிரயோஜனம்? நீங்கள் கேட்கும் முறையே சன்னியாசியிடம் செல்வதைப் போல தோன்றவில்லையே? கையில் உருவிய வாளோடு வந்திருக்கிறீர்களே? பைத்தியக்காரர்களைப் போல இருக்கிறீர்கள்? என்ன விஷயம்?” என்று ஊர் மக்கள் கேட்டார்கள்.

“நாங்கள் பைத்தியக்காரர்கள் இல்லை. அலெக்சாண்டரின் சிப்பாய்கள். நாங்கள் யாராவது ஒரு சன்னியாசியை கிரேக்கத்திற்குக் கொண்டு செல்ல விரும்புகிறோம்” என்று சொன்னார்கள்.

“உங்களால் பிடிக்க முடிந்தால் அவர் சன்னியாசி கிடையாது. சரி போங்கள். ஊரில் ஒரு சன்னியாசி இருக்கிறார். அவர் எங்கே இருக்கிறார் என்று சொல்கிறோம்” என்று அவர்கள் சொன்னார்கள்.

“ஆற்றங்கரையில் 30 வருடமாக ஒரு சன்னியாசி நிர்வாணமாக இருக்கிறார். இந்த 30 ஆண்டுகாலத்தில் நாங்கள் கேள்விப் பட்டவரைக்கும், பார்த்த வரைக்கும், அவர் ஒரு சன்னியாசிதான். ஆனால் உங்களால் அவரை பிடிக்க முடியாது.”

“ஏன் பிடிக்க முடியாது? எங்களிடம் வாள்கள் உள்ளன? சங்கிலிகள் உள்ளன?” என்று கேட்டனர்.

“நீங்க போங்கள், போய் அவரைப் பாருங்கள்” என்று ஊர் மக்கள் சொன்னார்கள்.

அவர்கள் சன்னியாசியிடம் சென்றனர். “மாவீரன் அலெக்சாண்டரின் உத்தரவு, நீங்கள் எங்களோடு வரவேண்டும். பரிசு கிடைக்கும், பாராட்டுக் கிடைக்கும், ராஜஉபச்சாரம் கிடைக்கும். உங்களை கிரேக்கத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறோம். ஒரு பிரச்சனையும் வராது. வழியில் ஒரு தொந்தரவும் இருக்காது” என்றனர்.

அந்த சன்னியாசி சிரிக்க ஆரம்பித்தார். அவர் சொன்னார், “பாரட்டுத்தான் எனக்குத் தேவை என்றால், வரவேற்புத்தான் எனக்குத் தேவை என்றால், சுகபோகம்தான் எனக்குத் தேவை என்றால், நான் எப்படி சன்னியாசி ஆவேன்?” என்று கேட்டார்.

“கற்பனையில் பேசுவதை விடுங்கள். விஷயத்திற்கு வாருங்கள்” என்றார்.

“நீங்கள் வரவில்லை என்றால், நாங்கள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வோம்” என்று வீரர்கள் சொன்னார்கள்.

“நீங்கள் பிடித்துச் செல்லக் கூடியவர் சன்னியாசி இல்லை. சன்னியாசி என்பவர் முற்றிலும் சுதந்திரமானவர். அவரை உங்களால் அழைத்துச் செல்லமுடியாது’‘ என்று சன்னியாசி கூறினார்.

“நாங்கள் கொன்று விடுவோம்” என்று வீரர்கள் சொன்னார்கள்.

“அது உங்களால் முடியும். ஆனால் கொன்றால் நீங்கள் என்னைக் கொன்றுவிட்டோம் என்ற பிரமையில்தான் இருப்பீர்கள். ஏனெனில் நீங்கள் கொல்லும் நபர் நானாக இருக்கமாட்டேன். நீங்கள் உங்கள் அலெக்சாண்டரையே வரச்சொல்லுங்கள். ஒருவேளை அவருக்குப் புரியலாம்” என்றார் சன்னியாசி.


அலெக்சாண்டரிடம் திரும்பிய வீரர்கள், “சன்னியாசி ஒரு வினோதமான நபராக இருக்கிறார். நீங்கள் கொலை செய்யலாம். ஆனால் நீங்கள் கொல்லும் நபர் நானாக இருக்க மாட்டேன் என்று சொல்கிறார்” என்றனர்.

அலெக்சாண்டர், “இதுவரை நான் அதுபோன்ற ஒரு மனிதரை பார்க்கவில்லையே? கொலை செய்த பின்னர் அவர் எப்படி உயிருடன் இருப்பார்?” என்று கேட்டார்.

அலெக்சாண்டர் தனது அனுபவத்தின் அடிப்படையில் கேட்டார். ஆயிரக்கணக்கானோரை கொலை செய்தவர் அல்லவா?  “எனக்குத் தெரிந்தவரை வரை கொலை செய்த பின்னர் யாரும் உயிர் பிழைத்திருப்பதை நான் பார்த்ததில்லை. ”

அலெக்சாண்டர் கையில் உருவிய வாளுடன் சென்றார். “நீ வந்தே ஆகவேண்டும். இந்த வாள் உன் தலையைத் துண்டித்துவிடும்” என்று சான்னியாசியிடம் சொன்னார்.  

சன்னியாசி பலமாகச் சிரித்தார். பின்னர், “நீ எந்த தலையை துண்டிப்பேன் என்று சொல்கிறாயோ, அந்த தலை நான் துண்டிக்கப்பட்டு தனியானது என்று அறிந்து பலகாலமாகிவிட்டது. எனவே இப்போது உன்னால் அதனை துண்டிக்க முடியாது. நீ உன் வாளால் வெட்டினாலும் கூட உன் வாள் இடையே கடந்து செல்லும் அளவு அதனிடையே இடைவெளி உள்ளது என்பது எனக்குத் தெரியும்.”

“போதுமான அளவு துண்டாக இருப்பதை நான் அறிந்துகொண்டேன். இப்போது உன்னால் துண்டிக்க முடியாது” என்று சன்யாசி சொன்னார்.

அலெக்சாண்டருக்கு இது எப்படி புரியும்? அவர் வாளை கையில் ஏந்தினார்.

“இங்கே பார். நான் வெட்டிவிடுவேன். தத்துவம் பேசுவதை நிறுத்திவிடு. தத்துவத்திற்கும் எனக்கும் வெகு தூரம். நான் ஒரு மனிதன். யதார்த்தவாதி. இந்த விஷயங்களை விட்டுவிடு. ஒரே வெட்டு தலை தனியாகப் போய்விடும்.”

அலெக்சாண்டரைப் பார்த்து சன்னியாசி சொன்னார், “நீ வாளால் வெட்டு. தலை துண்டாகி கீழே விழுவதை நீ எப்படி பார்ப்பாயோ நானும் அதேபோல தலை துண்டாகி கீழே விழுவதைப் பார்ப்பேன்” என்று கூறினார்.

இதையே பகவத் கீதையில் கிருஷ்ணர், யாரையும் வாளால் குத்தவோ வெட்டவோ முடியாது என்று சொல்கிறார்.

ஓஷோ, கீதா தர்ஷன், அத்தியாயம் 1 & 2, சொற்பொழிவு 8


--------------------------------------------------------
கபீரும், ஃபரீதும்


இரண்டு ஞானிகளிடையே போட்டி ஏற்படுவதில்லை.
இரண்டு மாபெரும் சுஃபி துறவிகளான கபீரும் ஃபரீதும் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்தது. ஆரம்பத்தில் இரண்டு துறவிகளின் சிஷ்யர்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஏதாவது ஒரு அற்புதமான விஷயம் இருவராலும் பரிமாறிக் கொள்ளப்படும், கபீர் ஃபரீத்க்கோ, அல்லது ஃபரீத் கபீருக்கோ ஏதாவது அற்புதமான விஷயத்தை சொல்லலாம் என்று நினைத்து அவர்கள் பரவசமடைந்தார்கள். ஆனால் நேரம் செல்லச் செல்ல அவர்களது பரவசம் ஏமாற்றமாக மாறியது.

ஏனெனில் கபீரும், ஃபரீதும் பேசிக் கொள்ளவேயில்லை. இருவரும் முற்றிலும் அமைதியாக இருந்தனர். இருவரும் அருகருகே அமர்ந்தவாறு பேரன்பினால் ஒருவரின் கரத்தை ஒருவர் பற்றியவாறு அமர்ந்திருந்தனர். எப்போதாவது ஒருமுறை புன்னகைத்துக் கொண்டனர்.

அந்த புன்னகை சிஷ்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.

அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை.

ஃபரீத் புனிதப் பயணம் சென்று கொண்டிருந்தார். அருகேயுள்ள கிராமத்தில் கபீர் இருக்கிறார் என்று அவரது சிஷ்யர்கள் சொன்ன காரணத்தால் அவரை சந்திக்க வந்திருந்தார். இவர்கள் இருவரும் ஓரிரண்டு நாட்கள் சந்தித்தால் ஏதாவது அற்புதமான விஷயங்கள் பேசப்படலாம் என்று அவர்கள் நினைத்தார்கள்.

அதேபோல கபீரின் சிஷ்யர்களும், அவ்வழியே செல்லும் ஃபரீதை வரவேற்காவிட்டால் நாகரீகமாக இருக்காது என்று சொன்னார்கள். இதற்கு ஃபரீத் ஒப்புக்கொண்டார். கபீர் தானே கிராமத்திற்கு வெளியே வந்து ஃபரீதை வரவேற்றார். இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர்.

ஆனால் இரண்டு நாட்களும் அமைதியாகவே கழிந்தன. அந்த இரண்டு நாட்களும் சிஷ்யர்களுக்கு இரண்டு நூற்றாண்டுகளாக தோன்றியது. 
இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் மறுபடியும் கட்டித் தழுவிக் கொண்டனர். பலமாகச் சிரித்தனர். பின்னர் பிரிந்து சென்றனர்.

இது வரை இரண்டு குருக்களின் சிஷ்யர்களும் மற்ற குருக்களின் முன்னிலையில் சிரமப்பட்டு பொறுமை காத்தனர். கபீரின் சிஷ்யர்கள் மிகவும் வெறுப்படைந்திருந்தனர். அவர்கள், நீங்கள் தினமும் எங்களிடம் பேசுவீர்களே, உங்களுக்கு என்ன ஆச்சு, நீங்கள் ஏதோ பேசத் தெரியாதவர் போல பேசாமல் இருந்தீர்களே? என்று கேட்டனர்.

உங்களுக்குப் புரியாது என்று கபீர் சொன்னார்.

நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தோம். இரண்டு உடல்கள், ஒரு ஆத்மா. யார் யாரிடம் பேசுவது? என்ன பேச வேண்டுமோ அதை அவரும் அறிவார், நானும் அறிவேன்.

ஃபரீதும் தன் சிஷ்யர்களுக்கு இதே பதிலைத்தான் சொன்னார். முட்டாள்தனமாக இருக்காதீர்கள் என்று சொன்னார். நான் எந்த இடத்தில் இருக்கிறேனோ அதே இடத்தில்தான் அவரும் இருந்தார். உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. எங்கள் உடல்கள் தனியாக இருந்தன. ஆனால் எங்களின் இருப்பு உருகி இணைந்து கொண்டிருந்தன.
எதையும் சொல்லிக் கொள்ள தேவையில்லை. சொல்லாமலேயே எல்லாமும் புரிந்துகொள்ளப்பட்டது. 

துறவிகளின் வாழ்க்கையில் போட்டி என்ற ஒன்று ஏற்படவேயில்லை. எல்லாக் காலத்திலும் இருந்த துறவிகள் ஒன்று கூடினாலும் கூட அவர்களிடையே போட்டி இருக்காது. அங்கு மகிழ்ச்சி இருக்கும், நடனம் இருக்கும்.

- ஓஷோ

-----------------------------------------
குரு நானக் 

குரு நானக் ராணுவத்தில் பண்டங்களை வினியோகிப்பவராக பணிபுரிந்து வந்தார். 

ஒரு நாள் பண்டங்களை எண்ணிக் கொடுக்கும்போது தேரா (பதிமூன்று, உன்னுடைய என்ற பொருளையும் தரும்) என்ற எண்ணிற்கு மேல் அவர் எண்ணவில்லை. தொடர்ந்து தேரா, தேரா என்று சொல்ல ஆரம்பித்தார். 

எல்லாரும் நானக்கிற்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று சொல்ல ஆரம்பித்தனர். எல்லாம் அவனுடையதே என்று உணர்ந்த நானக், எல்லாவற்றுக்கும் முதலாளியான அவனுக்கே பணி புரிய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். அந்த பணியையும் விட்டுவிட்டார்.

இறைபணி செய்வதையே தன் பணி என்று தொடர்ந்தார்.

--------------------------------------
குளியலறை சூத்திரம்

புத்தமதத்தில் சொல்லப்பட்டுள்ள சூத்திரங்களில் ஒன்றுதான் குளியலறை சூத்திரம். அதென்ன குளியலறை சூத்திரம், அதற்கான தேவை என்ன?

புத்த மதத்தின் கருத்துக்களின்படி ஒரு பௌத்த சன்னியாசி மூன்று தைக்காத துணிகளையே வைத்திருக்க கடமைப்பட்டவர் ஆவார். 

ஒன்றை இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும். ஒன்றை மேலோ போர்த்திக் கொள்ள வேண்டும். ஒன்று மாற்றுத் துணியாக இருக்கும். இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இது மூன்றையுமே தினமும் துவைத்துத்தான் கட்ட வேண்டும். 

அதேபோல பௌத்த சன்னியாசிகள் பிச்சை எடுத்துத்தான் உணவு உண்ண வேண்டும். இப்படி பிச்சைக் காரர்களாக உள்ள சன்னியாசிகள் பொது மக்கள் குளிக்கும் பொது இடங்களில் எப்படி குளிப்பது?

அந்த காலத்தில் பெரும் வசதி படைத்த செல்வந்தர்களின் வீட்டில்தான் குளியறையே இருந்தது. அவர்களும் வாசனை திரவியங்கள் கலந்த நீரில்தான் குளிப்பார்கள். அவர்கள் எப்படி இந்த பிச்சைக்கார சன்னியாசிகளை தங்கள் குளியலறையில் குளிக்க அனுமதிப்பார்கள். 
குளியலறை சூத்திரம்

புத்தமதத்தில் சொல்லப்பட்டுள்ள சூத்திரங்களில் ஒன்றுதான் குளியலறை சூத்திரம். அதென்ன குளியலறை சூத்திரம், அதற்கான தேவை என்ன?

புத்த மதத்தின் கருத்துக்களின்படி ஒரு பௌத்த சன்னியாசி மூன்று தைக்காத துணிகளையே வைத்திருக்க கடமைப்பட்டவர் ஆவார். 

ஒன்றை இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும். ஒன்றை மேலோ போர்த்திக் கொள்ள வேண்டும். ஒன்று மாற்றுத் துணியாக இருக்கும். இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இது மூன்றையுமே தினமும் துவைத்துத்தான் கட்ட வேண்டும். 

அதேபோல பௌத்த சன்னியாசிகள் பிச்சை எடுத்துத்தான் உணவு உண்ண வேண்டும். இப்படி பிச்சைக் காரர்களாக உள்ள சன்னியாசிகள் பொது மக்கள் குளிக்கும் பொது இடங்களில் எப்படி குளிப்பது?

அந்த காலத்தில் பெரும் வசதி படைத்த செல்வந்தர்களின் வீட்டில்தான் குளியறையே இருந்தது. அவர்களும் வாசனை திரவியங்கள் கலந்த நீரில்தான் குளிப்பார்கள். அவர்கள் எப்படி இந்த பிச்சைக்கார சன்னியாசிகளை தங்கள் குளியலறையில் குளிக்க அனுமதிப்பார்கள்? 

அதனால்தான் புத்தர் குளியலறை சூத்திரத்தைச் சொன்னார், அதாவது ஒருவர் தனது வீட்டில் உள்ள குளியலறையை பௌத்த சன்னியாசிகள் பயன்படுத்த அனுமதித்தால் அவர்களுக்கு புண்ணியம் கிடைக்கும் எனறு சொன்னார்.
-----------------------------------------------------------------

காதலர் தின சிறப்புக் கதை

முல்லா நஸ்ருதீன் தன் பங்களாவில் மிகவும் அவலட்சனமான ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தினார்.

இது அவரது நண்பர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

அருகேயுள்ள மலைக்கு செல்வதாக கூறிச் செல்லும் அவர் சொல்லும் தேதிக்கு முன்னதாகவே திரும்பி வந்து விடுவார்.

இதற்கான காரணம் என்னவென்று அவரது நண்பர்கள் கேட்டார்கள். அதற்கு முல்லா நஸ்ருதீன் நேரம் வரும்போது சொல்கிறேன் என்று கூறி அதற்கான காரணத்தை தெரிவிக்க மறுத்து விட்டார்.

இரண்டு வாரங்களில் திரும்பி வருவேன் என்று சொல்லி செல்லும் அவர் ஒரு வாரத்தில் திரும்பி வந்துவிடுவார்.

மூன்று வாரங்கள் கழித்து திரும்புவேன் என்று சொல்லிச் செல்லும் அவர் பத்து நாட்களில் திரும்பி விடுவார்.

இதைக் கண்டதும் அவரது நண்பர்கள் மீண்டும் அதற்கான காரணத்தை கேட்டனர்.

காரணத்தைச் சொல்லும் நேரம் வந்துவிட்டது என்று கூறிய முல்லா நஸ்ருதீன், அந்தப் பெண்ணைப் பார்த்ததும் வெறுப்பு வரும் உடனே மலைக்குக் கிளம்பி விடுவேன்.

மலைக்குச் சென்ற ஓரிரு நாளில் அவள் ஒன்றும் அவ்வளவு அவலட்சனமான பெண்ணாக தோன்ற மாட்டாள். அதன் பிறகு ஓரிருநாளில் அவளும் சாதாரண பெண்ணாகத்தான் தோன்றுவாள்.

இன்னும் சில நாளில் அவள் அழகான பெண்ணாகத் தோன்ற ஆரம்பிப்பாள். உடனே மலையிலிருந்து திரும்பி விடுவேன் என்று சொன்னார்.

- சொன்னவர் ஓஷோ

---------------------------------------------------

ஓஷோவுக்கு திருமண முயற்சி


ஓஷோ கல்லூரிப் படிப்பை முடித்த உடனே அவரது தந்தை அவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். அவரை சம்மதிக்க வைப்பதற்காக அந்த பகுதியிலேயே விவரமான ஆளான ஒரு மருத்துவரை தேர்ந்தெடுத்து அவர் மூலம் பேச ஏற்பாடு செய்தார்.

அந்த மருத்துவர் எதையும் புத்திசாலித்தனமாகப் பேசி சம்மதிக்க வைக்கக் கூடியவர். அவர் ஓஷோவுக்காக விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே திருமணத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று அந்த மருத்துவர் கேட்டார்.

நான் என்ன நினைப்பது? நானோ திருமணம் ஆகாதவன். நீங்களோ ஒன்றுக்கு மூன்று திருமணம் செய்தவர். எனவே திருமணத்தைப் பற்றி நீங்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும். நீங்களே சொல்லுங்கள் என்று ஓஷோ சொன்னார்.

அதை ஏன் கேட்கிறாய் என்று ஆரம்பித்த மருத்துவர் மனதில் இருந்ததை கொட்ட ஆரம்பித்தார். முதல் மனைவியின் தொல்லை தாங்க முடியவில்லை. ஆண்டவன் அவளை அற்ப ஆயுளில் எடுத்துவிட்டான். இரண்டாம் மனைவி வேறு பெண்தானே என்று நினைத்தேன். ஆனால் அவளும் முதல் மனைவியை மாதிரியே இருந்தாள்.

அவளும் இறந்துவிட்டாள். ஆனால் முட்டாள்கள் திருந்துவார்களா? மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டேன். அவதிப்படுகிறேன் என்றார்.

அப்படியானால் இந்த பதிலையே என் தந்தையிடம் சொல்லிவிடுங்கள் என்று ஓஷோ சொன்னார்.

திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பதற்குப் பதிலாக நாமே இப்படிச் சொல்லி விட்டோமே என்று நினைத்த அவர் ஓஷோவின் தந்தையிடன் தங்கள் மகன் தன்னை சாதுர்யமாக மடக்கி விட்டதாக சொன்னார். நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும் என்று சொன்ன ஓஷோவின் தந்தை வேறு நபரை ஏற்பாடு செய்ய நினைத்தார்.

இந்த முறை அவர் தனது நண்பரும் பிரபல உயர்நீதி மன்ற வழக்கறிஞருமான ஒருவரை ஏற்பாடு செய்தார். நீங்கள் எதற்கும் ஹோம் ஒர்க் செய்துகொள்ளுங்கள் என்று சொன்னார். அதற்கு அந்த வழக்கறிஞர் இதென்ன பிரமாதம், நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். என் மகன் கொஞ்சம் வினோதமான ஆள் அவ்வளவுதான் சொல்வேன் என்று ஓஷோவின் தந்தை சொன்னார்.  

அந்த வழக்கறிஞர் அழைத்ததும் ஓஷோ அவரது வீட்டிற்குச் சென்றார். வழக்கறிஞருக்கு வணக்கம் சொன்னதும் ஹோம்ஒர்க் செய்து விட்டீர்களா என்று கேட்டார்.

எதற்கு?- என்று வழக்கறிஞர் கேட்டார்.

நீங்கள் எதற்காக வரச் சொல்லி இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும் – என்று ஓஷோ சொன்னார்.

எதற்காக வரச் சொல்லி இருக்கிறேன் என்று வழக்கறிஞர் கேட்டார்.

சரி நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். நான் தோல்வி பெற்றால் நீங்கள் சொல்வதை கேட்கிறேன். நீங்கள் தோல்வி பெற்றால் நான் சொல்வதை கேட்க வேண்டும் என்றார்.

வாக்குத் திறமை பெற்ற அந்த வழக்கறிஞர் சரி, என்ன சொல்கிறாய் என்று கேட்டார்.

நான் தோல்வி பெற்றால் நான் திருமணத்திற்கு சம்மதிக்கிறேன். நீங்கள் தோல்வி பெற்றால் உங்கள் மனைவியை விவாகரத்துச் செய்ய வேண்டும் என்று ஓஷோ சொன்னார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த வழக்கறிஞர் ஹோம் ஒர்க் செய்திருக்க வேண்டும் போலிருக்கே என்று நினைத்தார். மேலும், அவரது மனைவியை நினைத்ததும் அவருக்கு உதறல் எடுத்தது. ஒரு வழியாக சமாளிக்க சரி அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்று ஓஷோவை அனுப்பி வைத்தார்.

ஓஷோ அவரை விடவில்லை. தினமும் அவரது வீட்டிற்குச் செல்ல ஆரம்பித்தார். அவர் ஓஷோவைக் கண்டதும் ஒளிய ஆரம்பித்தார். நீதிமன்றம் சென்று விட்டதாக பொய் சொன்னார்.

ஒருநாள் அவர் குளியறையில் ஒளிந்து கொண்டார். ஓஷோ தினமும் வருவதையும் தன் கணவர் மறைந்து கொள்வதையும் கண்ட அவரது மனைவி, ஓஷோவிடம் என்ன விஷயம்? ஏன் இவர் இப்படி மறைந்து கொள்கிறார் என்று கேட்டார்.

ஒன்றுமில்லை. அவர் உங்களை நினைத்துதான் பயப்படுகிறார் என்று ஓஷோ சொன்னார்.

என்னை நினைத்துப் பயப்படுகிறாரா? உங்கள் பிரச்சனையில் நான் எங்கே வந்தேன் என்று கேட்டார்.

பின்னர் நடந்ததைக் கூறவே அவரும் அதிர்ச்சி அடைந்தார். இவ்வாறு ஓஷோ திருமண முயற்சியிலிருந்து தப்பி விட்டார்.
---------------------------------------------------------------------------
காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் 
ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!".
- சொன்னவர் ஓஷோ

-------------------------------------------------------
நெற்றிப்பொட்டு

நாம் நமது இரு கண்களால் மற்றவர்களையும் இந்த உலகத்தையும் பார்க்கிறோம். ஆனால் நம்மை நாமே பார்க்க உதவுவது அகக் கண் என்றும் மனக் கண் என்றும் அழைக்கப்படும் நெற்றிக் கண்ணே ஆகும்.

இது நமது இரண்டு புருவங்களின் மத்தியில் அமைந்துள்ளது. அதைக் குறிக்கும் வண்ணமாகவே நாம் நெற்றியில் திலகமிடுகிறோம். இந்தக் கண்ணே நம்மை நமக்கு உணர்த்தி பிறவிக் கடலை கடக்கும் ஞானத்தை தரக் கூடியதாகும்.

முக்கண்ணை கொண்டிருப்பதாலே தேங்காயை நாம் நமக்கு பதிலாக ஆலயங்களில் பலியிடுகிறோம்.

----------------------------------------------------------------------------------------
முழு விழிப்புணர்வு - ஜென் கதை

பொக்கோஜு என்ற ஜென் குரு தன்னிடம் தியானம் கற்றுக் கொள்ள வரும் சிஷ்யர்களை மரம் ஏறச் சொல்வார்.

அவரிடம் வந்த ஒரு இளவரசன் தனக்கு மரம் ஏறிப் பழக்கம் இல்லை என்று சொன்னான். மரம் ஏறினால் விழுந்து காயமடையலாம் என்று சொன்னான்.

அதெல்லாம் முடியாது மரத்தில் ஏறித்தான் ஆகவேண்டும் என்று பொக்கோஜு சொல்லிவிட்டார். மரம் ஏறும்போது முடிந்தவரை உச்சிக்கு ஏறிச் செல்லவேண்டும். பின்னர் கீழே இறங்கி வரவேண்டும். இதுதான் நிபந்தனை.

மரத்தில் ஏறச் சொன்ன குரு கீழே கண்களை மூடி தியானத்தில் அமர்ந்து விட்டார்.
கஷ்டப்பட்டு மரத்தின் உச்சிக்கு ஏறிய இளவரசன் பின்னர் கீழே இறங்கி வந்தான். கீழே இறங்கும் தருவாயில் கண்விழித்த பொக்கோஜு, கவனமா பார்த்து இறங்கு என்றார்.

உடனே இளவரசனுக்கு கோபம் வந்தது. அபாயகரமான இடங்களை கடந்தபோது நீங்கள் ஒன்றும் சொல்லவில்லை. கீழே இறங்கும்போது கவனமாக இறங்கச் சொல்கிறீர்கள் என்று கடிந்து கொண்டான்.

அப்போது பொக்கோஜு, அபாயகரமான இடத்தில் நீயே விழிப்புணர்வுடன் கவனமாக இருந்துகொள்வாய், அங்கே நான் தேவையில்லை, அபாயமில்லை என்று நீ நினைக்கும்போதுதான் தூங்கிவிடுகிறாய். அதனால்தான், கவனமாக இருக்கச் சொன்னேன் என்றார்.

நாம் எப்போது பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நினைக்கிறோமோ அப்போது நாம் முழு விழிப்புணர்வுடன் இருப்பதில்லை. அபாயகரமான நிலையில்தான் நாம் முழு விழிப்புணர்வுடன் இருக்கிறோம். இந்த விழிப்புணர்வுதான் எப்போதும் தேவை.

-சொன்னவர் ஓஷோ

  

--------------------------------------------
கலீல் ஜிப்ரானின் குட்டிக்கதை...

ஒரு ஊரில் ஒரு ஆத்திகர், ஒரு நாத்திகர் இருந்தனர். ஆத்திகர் கடவுளை நம்புங்கள், அவர்தான் அனைத்துக்கும் காரணம் என்று சொல்லி வந்தார். 

நாத்திகர் கடவுள் ஒன்று இல்லை, அதை நம்பத் தேவையில்லை என்று சொல்லி வந்தார். இவர்களது பேச்சுக்களால் கிராம மக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகினர். 

உடனே கிராம மக்கள், நீங்கள் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று இருவரிடமும் சொன்னார்கள். ஒரு விவாத மேடைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆத்திகரின் வாதங்கள் நாத்திகரை அசர வைப்பதாக இருந்தது. நாத்திகரின் வாதங்கள் ஆத்திகரை நிலைகுலையச் செய்தது. 

மறுநாள் காலையில் ஆத்திகர் நாத்திகராகவும், நாத்திகர் ஆத்திகராகவும் மாறியிருந்தனர். இப்போது இருவரும் தங்கள் புதிய கருத்தை மக்களிடம் வலியுறுத்த ஆரம்பித்தனர். 

மக்கள் தொடர்ந்து துன்புற ஆரம்பித்தனர். இப்படித்தான் மக்கள் தங்கள் நிலைகளை மாற்றிக் கொள்கிறார்களே தவிர உண்மையை உணர்பவர்கள் மிகக் குறைவு. 

-சொன்னவர் ஓஷோ----------------------------------------------
பூரண விழிப்புணர்வு

ஒருமுறை ஒரு ஜப்பானிய அரசர் ஒரு துறவியிடம் ஆசி பெற்றார். தனது மகனுக்கும் ஏதாவது புத்திமதி வழங்குமாறு கூறினார்.

அவனை விழித்திருக்கச் சொல்லுங்கள் என்று அந்த துறவி சொன்னார். அவன் விழித்துத்தான் இருக்கிறான் என்று அரசர் சொன்னார். இல்லை, அவன் விழித்திருக்கவில்லை என்று துறவி சொன்னார்.

அப்படியானால் அவனுக்கு அதை நீங்கள்தான் கற்றுத் தரவேண்டும் என்று அரசர் சொன்னார். மூன்று மாதங்கள் என்னோடு தங்கியிருக்க வேண்டும் என்று அந்த துறவி சொன்னார். அரசனும் தன் மகனை துறவியுடன் அனுப்பி வைத்தார்.

இளவரசனை ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்ற துறவி எப்போது வேண்டுமானாலும் நான் தாக்குவேன் எச்சரிக்கையாக இருந்துகொள் என்று சொன்னார். அதன் பின் அவர் திடீர் திடீரென அவர் இளவரசனை தாக்க ஆரம்பித்தார். இளவரசன் எதையாவது படித்துக் கொண்டிருப்பான். துறவி வந்து தாக்குவார். அதனால் அந்த இளவரசன் எச்சரிக்கையாக இருந்து அவரது தாக்குதலை சமாளிக்க வேண்டியதாயிற்று.

சில நாட்களுக்குப் பின்னர் துறவி இனி கம்பால தாக்குவேன் எச்சரிக்கையாக இருந்துகொள் என்று சொன்னார். அந்த இளவரசனும் அப்படியே இருந்து அவரது தாக்குதல்களை சமாளிக்க ஆரம்பித்தான்.

மேலும் சில நாட்கள் கழித்து இனி தாக்குதல் கத்தியால் நடத்தப்படும் என்று துறவி சொன்னார். இளவரசன் அதற்கும் தயாராக ஆரம்பித்தான்.

ஒருநாள் மதியம் துறவி அருகேயுள்ள மரத்தடியில் படுத்திருந்தார். அப்போது இளவரசன் இந்த துறவி நம்மை தாக்குகிறாரே நாம் அவரை தாக்கிப் பார்த்தால் என்ன என்று நினைத்தான்.

உடனே மரத்தடியில் படுத்திருந்த துறவி எழுந்து அமர்ந்து, நானோ வயதான கிழவன் என்னை அப்படி எதுவும் செய்துவிடாதே என்றார்.  

ஓஷோவின் குட்டிக்கதை

-----------------------------------------------------------------
வால்மீகி என்ற கொலைகாரன்

வால்மீகி கொள்ளையனாக இருந்தபோது வழிப்பறி செய்ய ஒரு சாதுவை  வழிமறித்தார். 

அந்த சாதுவிடம் இருந்த பொருட்களை பறித்துக் கொண்ட அவர் அந்த சாதுவை ஒரு மரத்தில் கட்டி வைத்தார். 

தன்னை கொலை செய்யப்போவதை உsணர்ந்த சாது கொல்வதற்கு  முன்பாக தன்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுமாறு கேட்டார். 
அந்த சாதுவின் அச்சமற்ற தன்மையைக் கண்ட வால்மீகி என்னவென்று கேட்டார்.

நீ யாருக்காக என்னை கொலை செய்யப் போகிறாய் என்று கேட்டார். நான் என் குடும்பத்திற்காக கொள்ளையடிக்கிறேன், கொலை செய்கிறேன் என்று சொன்னார்.

சரி, நீ வீட்டுக்குப் போய் உன் குடும்பத்தினரில் யார் உனது பாவத்தில் பங்கேற்க தயார் என்று கேட்டுவா, நான் இங்கேயே இருக்கிறேன் என்று சொன்னார். 

வீட்டுக்குப்போன வால்மீகி, எனது பாவத்தில் பங்கேற்பாயா என்று தனது மனைவியிடம் கேட்டார். அவரது மனைவி, அது உங்கள் தொழில் மனைவி என்ற காரணத்திற்காக நீங்கள் எனக்கு உணவளிக்கிறீர்கள், என்னால் உங்கள் பாவத்தில் பங்கேற்க முடியாது என்று சொல்லிவிட்டார்.

அதேபோல அவரது தந்தையாரும் வயதான காலத்தில் என்னை ஏன்உனது பாவத்தில் பங்கேற்கச் சொல்கிறாய் என்று கேட்டார்.

அவ்வளவுதான், சாதுவிடம் திரும்பிய வால்மீகி மாபெரும் சாதுவாகியிருந்தார். 
-----------------------------------------------------------------------------------------------------


                               ஏசு கிறிஸ்து எப்படி பிறந்தார்?இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்; அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 

அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 

அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 

அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்"; என்றார். 

 'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள். 

 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். 

 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு உறவு கொள்ளவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார். 

இப்படித்தான் ஏசு பிறந்தார் என்று விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனை கடவுள் நம்பிக்கையில்லாதோர் பல வகையில் கிண்டல் செய்கின்றனர். 

ஆனால் அறிவுப்பூர்வமாக இவ்வாறு ஒரு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதா என்று சிந்தித்துப் பார்த்தால் அது முடியாது. இதற்கு தற்கால ஞானியான ஓஷோ ஒரு விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கம் என்னவென்று பார்ப்போம்.

ஒரு ஆணும் பெண்ணும் முழு ஈடுபாட்டுடன் உடலுறவில் ஈடுபடும்போது அவர்கள் இருவரும் தங்களை மறந்த நிலையில் இருக்கிறார்கள். தன்வசத்தில் இல்லாதவர்கள் மேற்கொள்ளும் புணர்வு அவர்கள் செய்யாத ஒன்றே ஆகும். அது போன்ற உன்னதமான உறவுகளில்தான் சிறந்த மனிதர்கள், ஞானிகள், சாதனையாளர்கள் பிறக்கிறார்கள். 

அவ்வாறு ஏற்பட்டதுதான் ஏசுவின் பிறப்பு. இதையே பெற்றோர் உறவு கொள்ளாத நிலையில் ஏசு பிறந்தார் என்று விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஓஷோவின் இந்த விளக்கம் ஏற்கத் தக்கதாக உள்ளது. 

http://bibleintamil.com/ecu-tamil/u_startingnt.html


**************************
தெரிந்த புராணம்... தெரியாத கதை
=====================================

பாரதப் போர் முடிந்த 19-ஆம் நாள்!
அந்தக் கால வழக்கப்படி, போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை- மரியாதை செய்யும் விழா ஒன்று நடக்கும். போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்படும். தேரோட்டிகள் கீழே இறங்கி, மண்டியிட்டு நிற்பார்கள். மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும், தேர்ப்பாகன் மன்னனை வணங்கி, மாலையிட்டு, வெற்றி கோஷம் முழங்குவான். அதன்பிறகு, போரில் வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனுக்கு மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கௌரவிப்பார்கள்.

குருக்ஷேத்திரப் போர் வெற்றிகரமாக முடிந்தபின், வெற்றி கண்ட பாண்டவ சகோதரர்களுக்காக இந்த விழா ஏற்பாடாகி இருந்தது. தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரது ரதங்களும் வரிசையாக நின்றன.

மரியாதை விழாச் சடங்குகள் ஆரம்பமாயின. தர்மனுடைய தேரின் முறை முடிந்தபின், பீமனது சாரதி அவனை வணங்கி வாழ்த்தினான். பரிசாக விலை உயர்ந்த ரத்தினமாலையை பாகனுக்கு அணிவித்து கௌரவித்தான் பீமன். மேலும், பூமியும் பொன்னும் பொருளும் வழங்கினான். வெற்றி கோஷங்கள் வானைப் பிளந்தன.

அடுத்தது, அர்ஜுனன் ரதம். சாரதியோ பகவான் ஸ்ரீகிருஷ்ணன். 'யாருக்கும் கிட்டாத மாபெரும் பேறு தனக்குக் கிடைக்கப்போகிறது. பகவான் கிருஷ்ணனே தன்னை வணங்கிப் பாராட்டப் போகிறான்’ என்று எண்ணி, ஒரு கணம் தன்னை மறந்த நிலையில் இறுமாப்போடு, அந்த அற்புத தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் அர்ஜுனன். ஆனால், கண்ணன் தேரைவிட்டு இறங்கவில்லை. அர்ஜுனன் திகைத்தான். 'பெருமையோ சிறுமையோ பாராது, கடமையை நிறைவேற்ற வேண்டும்’ என்று கீதையில் தனக்கு உபதேசித்த கண்ணன், தேர்ப் பாகனுக்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்க வேண்டும் என்று நினைத்தான் அர்ஜுனன்.


அப்போது பகவான் கிருஷ்ணன், அர்ஜுனனின் அறியாமையை எண்ணி நகைத்தார். ''அர்ஜுனா! இந்தத் தேர் மட்டும் இந்தச் சடங்குக்கு விதிவிலக்கு. முதலில் நீ இறங்கு!'' என்று கட்டளையிட்டார்.

கண்ணனின் வார்த்தையை மீறி அறியாத அர்ஜுனன், அக்கணமே தேரில் இருந்து கீழே இறங்கினான். அதேநேரம், 'தன் சகோதரர்களுக்குக் கிடைத்த கௌரவம் தனக்குக் கிடைக்கவில்லையே’ என ஒரு கணம் ஏங்கினான். ' 'கர்மயோகம்’ என்ற பகுதியாகக் கடமையைப் பற்றி அத்தனை தத்துவங்களைச் சொன்ன கண்ணன், ஒரு தேர்ப்பாகனாக பணியாற்றுவதற்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்குகிறான்? இதனால், மஹாரதனான எனக்கு ஏற்படும் அவமானத்தை ஏன் அவன் எண்ணிப் பார்க்கவில்லை? நான் கண்ணனை என்னுடைய தேர்ப்பாகனாக ஏற்றுக்கொண்டதால்தானே, எல்லோர் முன்னிலையிலும் எனக்கு இந்தச் சிறுமை ஏற்பட்டுள்ளது?' என்று எண்ணி, மனம் குமுறினான் அர்ஜுனன்.

அர்ஜுனனின் மனோநிலையைத் தன் ஞானத்தால் அறிந்தார் ஸ்ரீகண்ணன். அடுத்த விநாடியே தேரிலிருந்து கீழே இறங்கினார். அதே விநாடியில், தேர்க் கொடியில் இருந்த ஆஞ்சநேயரும் விலகி மறைந்தார். கண்ணன் தேரைவிட்டு இறங்கிய மறுவிநாடியே அர்ஜுனனின் தேர் குபீரென்று தீப்பிடித்து, அக்னி ஜுவாலையுடன் எரிய ஆரம்பித்தது. எல்லோரும் திகிலோடும் ஆச்சரியத்தோடும் பார்த்தனர். யாருக்கும் எதுவும் புரியவில்லை.

''அர்ஜுனா! இந்த பாரத யுத்தத்தில் உன் எதிரிகள் அனைவரின் தாக்குதல்களும் உன் ரதத்தின் மீதுதான் குறிவைத்து நிகழ்த்தப்பட்டன. அவர்கள் போரில் எய்த அஸ்திரங்கள், ஏவிவிட்ட தீய மந்திரங்கள், அனுப்பிய தீய சக்திகள் அத்தனையையும் தடுத்து நிறுத்தி, யுத்தம் முடியும்வரை இந்தத் தேருக்கு உயிர் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தேன். நான் சாரதியாக அமர்ந்துகொண்டிருந்ததால்தான், இந்தத் தீய சக்திகள் இதுவரை செயலற்றிருந்தன. படைக்கப்பட்ட பொருள்கள் அனைத்துக்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு. இந்தத் தேரின் முடிவு ஏற்படும் தருணம் வந்ததை உணர்ந்தேன். நான் முதலில் இறங்கினால் இந்தத் தீய சக்திகள் செயல்படத் தொடங்கிவிடும். அந்த விநாடியே தேர் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகும் என்பதையும் அறிந்தேன். இப்போது புரிகிறதா, நான் முதலில் இறங்கியிருந்தால், நீ இந்தத் தீயில் சிக்கியிருப்பாய். இப்போதும் உன்னைக் காப்பாற்றவே இந்தத் தேரை விதிவிலக்காக்கி, உன்னை முதலில் இறங்கச் சொன்னேன்!

தேர்ப் பாகனாகப் பணிபுரிந்த நான் உன்னை வணங்கி, வாழ்த்தி, நீ தரும் சன்மானத்தைப் பெறத் தயங்குவதாக நீ நினைத்தாய். என் எல்லாச் செயல்களுக்கும் ஒரு காரணம்- காரியம் உண்டு என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நீ அறிய வாய்ப்பளித்து இருக்கிறேன். இருந்தாலும், உன்னுடைய சுயகௌரவத்தால் உன் சிந்தனை சற்று நேரம் கலங்கி இருந்தது. அது தவறு. இதோ... உன்னை வணங்க நான் சித்தமாயிருக்கிறேன்'' என்று, நீண்ட விளக்கம் தந்தார் ஸ்ரீகண்ணன்.

அவர் கூறிய கடைசி வார்த்தைகள் அர்ஜுனன் காதில் விழவில்லை. காரணம், அவர் கால்களில் அர்ஜுனன் வேரற்ற மரம் போல விழுந்துகிடந்தான்.

அக்கணமே 'கிருஷ்ண பகவான் வாழ்க’ என்ற கோஷம் வானைப் பிளந்தது. பார்த்தசாரதியை எல்லோரும் 'பார்த்தனைக் காத்த சாரதி’ என்று வாயார வாழ்த்தினார்கள்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணனிடம் இருந்து பகவத்கீதையை நேரடியாகவே உபதேசம் பெற்ற அர்ஜுனனுக்குப் பத்தொன்பதாம் நாளில் இத்தனை அஞ்ஞானம் இருந்தது என்றால்... கீதையை அரைகுறையாகக் கேட்டுவிட்டு அல்லது கீதையின் ஒரு சில வரிகளைப் படித்துவிட்டு, 'நான் கீதையைப் புரிந்துகொண்ட பரம ஞானி’ என்று ஒருவன் எண்ணினால், அது எத்தகைய அறியாமை?!
••••

நம்முடைய சொத்து எது?
=======================

இமயமலையில் கோண்டில்யர் என்ற ஒரு ரிஷி, தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் கீழே இறங்கி வந்து காண்டீப நாட்டு ராஜ்யத்தை அடைந்தார். ரிஷியை வரவேற்று உபசரித்து, "என் நாட்டுக்கு நீங்கள் வந்தது, நான் செய்த பெரிய பாக்யம்...' என்றான் அந்த நாட்டு ராஜா.

உடனே ரிஷி, "அது சரி... இது உன் ராஜ்யம் என்கிறாயே... இதற்கு முன் இது யாருடைய ராஜ்யமாக இருந்தது?' என்று கேட்டார். "இந்த ராஜ்யம், என் தகப்பனாரிடமிருந்து எனக்கு வந்தது...' என்றான் ராஜா! "அதற்கு முன் இது யாரிடம் இருந்தது?' என்று கேட்டார் ரிஷி.

"இந்த ராஜ்யம் வேறு நாட்டைச் சேர்ந்த அரசனிடம் இருந்தது. போர் செய்து அந்த அரசனிடமிருந்து இந்த நாட்டை ஜெயித்தார் என் பாட்டனார். அந்த ராஜ்யம், இப்போது என்னிடம் உள்ளது...' என்றான் ராஜா!

அதற்கு, "இது, உன் பாட்டனாரின் சொத்து. அதை, என்னுடையது என்று நீ சொல்வது எப்படி சரியாகும்...' என்றார் ரிஷி; விழித்தான் ராஜா. அதே போல, இப்போது நாம் அனுபவிப்பதெல்லாம் கடவுள் கொடுத்தது; அதை நாம் அனுபவிக்கிறோம். பகவான், எவ்வளவு காலம் நாம் அனுபவிக்கலாம் என்று நினைக்கிறாரோ, அவ்வளவு காலம் மட்டுமே நாம் அதை அனுபவிக்க முடியும். அதன் பின், அது நம் கையை விட்டுப் போய் விடும் அல்லது நாம் அதை விட்டு விட்டுப் போக வேண்டியிருக்கும்.

அதனால், எதுவும் நிலையானதல்ல. இன்று நம்மிடம் இருக்கும் பொருள், வேறு ஒருவருக்கு நாளை சொந்தமாகலாம். அதனால், "இது என்னுடையது' என்று உரிமை கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை. பகவான் கொடுத்ததை நாம் அனுபவிக்கிறோம். அனுபவ காலம் முடிந்ததும், அது நம்மை விட்டுப் போய் விடுகிறது. இப்படி எந்தப் பொருளையும் நம்முடை யது, என்னுடையது என்று சொல்வது சரியில்லை.

நாம் செய்யும் பாவ, புண்ணியம் தான் நம்முடையது. இதை, வேறு யாரும் களவாட முடியாது; சொந்தம் கொண்டாட முடியாது. அதனால், சொத்து, பணம் இவற்றை சேர்த்து வைப்பதை விட, புண்ணியத்தை சேர்த்து வைக்க வேண்டும். அது தான் பரலோகத்தில் நமக்கு உதவும்.
-----------------------------------------------------
ரசவாதம்! 

ஒரு நாட்டு அரசனுக்கு திடீர் என ஒரு யோசனை! 
தன மந்திரியை அழைத்து இந்த நாட்டிலேயே மிக ஏழை ஒருவரை கண்டு வா என்றான்!

சில வாரங்கள் கழித்து மந்திரி தான் ஒருவரை கண்டதாகவும் ஆனால் அவரை அழைத்து வர முடியவில்லையென்றும் தெரிவித்தார்!

ராஜாவோ நானே வருகிறேன் என்று கிளம்பினார்! அருகாமையில் இருந்த ஒருகாட்டில் அந்த மனிதர் காணப்பட்டார்! ஒரு துறவியை போன்ற தோற்றம்! கந்தலாடைகள்! மரத்தடியில் வாசம்! விறகு வேட்டிகள் தரும் ஏதாவது உணவும் காட்டுக்கனிகளுமே உணவு!

துறவியிடம் அரசன் கேட்டான்! தங்களுக்கு என்ன வேண்டும் என்று!

துறவியோ அரசனிடம் கேட்டார் என்ன தரப்போகிறாய் என்று!

ஒரு வீடு கட்டி, நல்ல துணிமணிகள் தருகிறேன் தினமும் உணவு தருகிறேன் என்றான் அரசன்!

எனக்கு எதற்கு என்று கேட்டார் துறவி!

தங்களை பார்த்தல் மிக வறிய நிலையில் இருப்பதாக தெரிகிறதே என்றான் அரசன் !

அதற்க்கு துறவி நானா வறியவன்? என்னை விட ஒரு வறியவன் உள்ளான் என சொன்னார்! மேலும் எனக்கு ரசவாதம் தெரியும்! இந்த உலகையே தங்கமாக மாற்ற முடியும் என்றார்!

அரசனுக்கோ பேரார்வம்!

அந்த ரசவாத வித்தையை எனக்கு கற்றுத்தாருங்கள்! மேலும் அந்த வறியவர் யார் என்று சொல்லுங்கள் என்று கேட்டான்.

துறவியோ தான் சொல்லும் நிபந்தனைக்கு உட்பட வேண்டும் என்றார்.
சரியாக ஓராண்டு காலம் தினமும் சூரியோதயத்துக்கு முன்னும் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னும் வந்து ஒரு மணிநேரம் தன்னுடன் கழிக்க வேண்டும் என்றார்!

அரசனும் ஒத்துக்கொண்டான்!

தினமும் அரசனும் வருவான்! துறவி முன்னர் அமர்வான்! துறவி எதுவும் பேசாமல் தன கருணை பார்வையை மட்டும் அரசன் மீது செலுத்திக்கொண்டிருப்பார்!

முதலில் சில நாட்கள் அரசனுக்கு என்னவோ போலிருந்தது! நாட்களாக நாட்களாக தன்னை சுற்றிலும் நடப்பதை கவனிக்க ஆரம்பித்தான்! இனிய காலைவேளைகளில் பறவைகள் பாடுவதும், விலங்குகள் ஓடியாடிதிரிவதும், சூரிய உதயமும் மாலையில் சூரிய அஸ்தமனமும் ஒருவித கிளர்ச்சியை மன்னனுக்கு ஏற்படுத்தின! சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் போது வானிலும் மேகங்களிகும் ஏற்படும் வண்ண ஜாலங்கள் அவனை வெகுவாக கவர்ந்தன! பருவ நிலை மாற்றங்கள், இயற்கை சூழல், இவையனைத்துமே மன்னனுக்கு பேருவகையை ஏற்படுத்துவதாக இருந்தன!

இப்படியே ஒரு ஆண்டு கழிந்தது தெரியவில்லை! இரு ஆண்டும் முடிந்து மூன்றாவது ஆண்டும் கழிந்தது! மன்னன் பெரும்பாலான நேரத்தை துறவியுடனே செலவிட ஆரம்பித்திருந்தான்!

திடீர் என துறவி கேட்டார் ஆமாம் நீ எதுவோ கேட்டிருந்தாயே! நினைவிருக்கிறதா என்று! அப்போதுதான் சுய நினைவுக்கு வந்தான் மன்னன் அதற்கு சிறிது நேரம் கழித்து பதிலளித்தான்!

ஆம்! ஆனால் இப்போது விடை தெரிந்துகொண்டேன்! ரசவாததுக்கு ஆசைப்பட்ட நானே பெரும் ஏழை! இந்த உலகத்தை எப்படி தங்கமாக்குவது என்ற வித்தையும் அறிந்து கொண்டேன் ! இந்த வித்தை இதுவரை எனக்குள்ளே தான் இருந்திருக்கிறது! இப்போது தான் நான் கண்டுகொண்டேன்!-----------------------------------------------------------
மஹாயானம் (பெரியவாகனம்), ஹீனயானம் (சிறிய வாகனம்) 

புத்தமதத்தில் மஹாயானம் (பெரியவாகனம்), ஹீனயானம் (சிறிய வாகனம்) என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன. மஹாயானம் என்பது பொதுநலத்தை அடிப்படையாகக் கொண்டது. ஹீனயானம் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டது.

மஹாயானத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் ஊர்மக்கள் அனைவரும் நலன் பெற வேண்டும் என்று விரும்புவார்கள். ஹீனயானத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் தான் மட்டும் நலன் பெற்றால் போதும் என்று விரும்புவார்கள். 

மஹாயானத்தை போதித்தவர் போதிதர்மர். ஹீனயானத்தை போதித்தவர்கள் புத்தருடன் 40 ஆண்டுகள் வசித்தும் அவர் இறந்த பின்னரே ஞானம் பெற்ற அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஆனந்த் போன்றோர் ஆவர். இந்த இரண்டு தரப்பினருக்கிடையே கருத்து வேறுபாடு இருந்து வருவது இயற்கையே. 

போதிதர்மரை ஹீனயாத்தை பின்பற்றுபவர்களும் ஆனந்தை மஹாயானத்தை பின்பற்றுபவர்களும் ஏற்பதில்லை. 

ஜப்பான் மஹாயானத்தை பின்பற்றும் நாடு, இலங்கை ஹீனயானத்தை பின்பற்றும் நாடு.

----------------------------------------------------------------


கடவுளை, நீ இருப்பது உண்மையென்றால்....


பெரிய மலைச்சிகரத்தின் மீது ஏறிக் கொண்டிருந்த ஒருவன் விழுந்து விட்டான். அப்படி விழும்போது பாறை இடுக்கில் வளர்ந்திருந்த ஒரு மரக்கிளையைப் பிடித்து கொண்டான்.

கடுமையான குளிக்காற்று வீசியது. நள்ளிரவு, எதுவும் கண்களுக்கு தெரியவில்லை.

பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த கையின் பிடி நழுவிக் கொண்டிருந் தது. மனதில் நினைத்தான். இனி என்னைக் காப்பாற்ற கடவுளால் மட்டு மே முடியும். இதுவரை நான் கடவுளை நம்பியதில்லை, சரி இப்போது வேறு வழியே இல்லை. கடவுளை நம்பி, வேண்டிப் பார்க்கலாம்.

இப்படி நினைத்து கடவுளை அழைத்தான். 'கடவுளை, நீ இருப்பது உண்மையென்றால், என்னைக் காப்பாற்று. நான் உன்னை நம்புகிறேன். இது சத்தியம்!!'

திரும்பத் திரும்ப அழைத்தான். 'கடவுளே என்னை இந்த ஒருமுறை காப் பாற்றினால், நான் உன்னை எப்போதும் நம்புவேன்.'

திடீரென ஒரு குரல் அவன் காதில் ஒலித்து, 'நான் உனக்கு நல்ல வழியைச் சொன்னாலும் நீ நம்ப மாட்டாயே' என்றது.

'நான் இனி நம்புவேன். என்னை நம்புங்கள்.' என மீண்டும் கெஞ்சினான், கதறினான்.

இறுதியாக அக்குரல் கூறியது, 'சரி நான் உன்னைக் காப்பாற்றுகிறேன், மரக்கிளையை விட்டுவிடு'

'மரக்கிளையை விடுவதா? என்னை முட்டாள் என்றா நினைக்கிறாய்! அதையும் விட்டுவிட்டால் என் உயிர் என்னாவது?' எனக் கேட்டான்.

அவனுடைய சத்தியம், நம்பிக்கை எல்லாமே அவ்வளவு தான்.

ஒரு உண்மை, அவனுடைய கால் பாதங்கள் தொங்கிக் கொண்டிருந்த உயரத்தின் ஒரு அடிக்கு கீழே சமமான தரைப் பரப்பு இருந்தது.

சரி விஷயத்திற்கு வருவோம்.

நம்முடைய வாய்ப்புகள் நாம் எதிர்பார்த்த உருவங்களில் வருவதில்லை. ஏனென்றால், நம் மனதில் தோன்றிய அளவிற்கே நடக்குமென நாம் எதிர்பார்க்கிறோம்.

ஆனால், இயற்கையின் செயல்பாடுகளில் பெரும்பாலுமே நமக்கு சாதமான அம்சங்களே உள்ளன. அதற்கான விளக்கங்களை அவை நமக் குச் சொல்லிவிட்டு நடப்பதில்லை. நம்முடைய பயமும் அவநம்பிக் கையும் அதை உணர முடியாமல் செய்து விடுகின்றன.

ஒரு சிக்கல் அல்லது பிரச்சனைகளைத் தொடர்ந்து அடுத்தபடியாக முன்னேற்றம் உருவாகிறது (மாணவனுக்கு தேர்வினைப் போல).

தேர்வு என்பது சிக்கலா? வாய்ப்பா? அதை வெற்றி கொள்ள முடியுமா? முடியாதா?

இது முற்றிலும் அவரவர் நம்பிக்கையைப் பொருத்தது.

நம்பிக்கையுடன் செயல்பட்டால், புதிய சக்திகள் வெளிப்படும். புதிய வாய்ப்புகள் தெரிய வரும்.

நாம் பிறரிடம் பேசும்போது சில புத்தகங்களைப் படிக்கும்போது – நமது சிந்தனைகளின் போது எதேச்சையாக பல வழிகள் நமக்குத் தெரிய வரும்.

அதற்கு திறந்த மனநிலை இருந்தால் போதும். அதன் முதல் அம்சம், அதிகாலை எழுந்தவுடன் நாம் கொண்டுள்ள மனநிலையும், இரவு படுக்கப்போகும்போது உள்ள மனநிலையும், முக்கியமாகும்.

படுக்கையிருந்து எழும்போதே நம்பிக்கையுள்ள மனநிலையில் உற்சா கத்துடன் எழுந்து. நல்ல புத்தகங்களை, நல்ல சொற்பொழிவுகளை, நல்ல பாடல்களை சில நிமிடங்கள் படித்தல், கேட்டல் அல்லது உடற்பயிற்சி, யோகா போன்றவைகளை சில நிமிடங்கள் செய்தல் போன்ற பழக்கங்களால் மனதை உற்சாகமாக்கலாம்.

காலை எழுந்தவுடன் நடக்கின்ற முதல் ஒரு மணி நேரமே அன்றைய தினத்தை நிர்வகிக்கின்றது. முதல் ஒரு மணி நேரத்தின் செயல்பாடுகள் நான்றாக அமைந்தால் மீதமுள்ள 23 மணிநேரமும் சிறப்பாக அமையும் எனும் நம்பிக்கையை நாம் கொள்ளவேண்டும்..

இரவு படுக்கும்போது எல்லா ஏமாற்றங்களையும் எல்லா பிரச்சனை களையும் ஒதுக்கி விட்டு, அமைதியாகத் தூங்கினால் அடுத்த நாள் எழும்போது அவைகள் தீர்ந்துவிடும். அல்லது நல்ல வழிமுறைகள் தெரியவரும். புத்துணர்வும் கிடைக்கும்.

படுக்கைக்கு போகும்போது வெற்றியாளராகச் செல்லுவோம். விழிக்கும்போதும் வெற்றியாளராக விழிப்போம்.
நன்றி முகநூலில் உதயக்குமார்

********************************************************************

கழுதையிடம் கற்றுக்கொள்ளவேண்டும்..


ஞானி ஒருவரிடம் அவரது சீடன், “குருவே, நீங்கள்
இன்பத்தில் மகிழ்ச்சியோ, துன்பத்தில்
சோர்வோ அடைவதில்லை. ஆனால், இரண்டையும் தாங்கள்
சமமாக எடுத்துக் கொள்கிறீர்களே...? இந்தப்
பண்பு உங்களிடம் எப்படி வந்தது?” என்று கேட்டான்.

அவர் உடனே, “கழுதையிடமிருந்துதான்...” என்றார்.

“என்னது கழுதையிடமிருந்தா...?” என்று அங்கிருந்த
சீடர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கேட்டனர்.

“ஆமாம், நான் கழுதையிடமிருந்துதான் அதைக் கற்றுக்
கொண்டேன்.
காலையிலும், மாலையிலும் தெருவில்
செல்லும் கழுதையை நீங்கள் பார்த்ததில்லையா?

காலையில் அது அழுக்கு உடைகளைச் சுமந்து செல்லும்.

மாலை வேளையில் அது சுத்தமான உடைகளைச்
சுமந்து வரும்...

காலையில் அழுக்கு உடைகளைச்
சுமந்து செல்கிறோமே என்று அது வருத்தமடைவதுமில்லை.

மாலையில் சுத்தமான உடைகளைச்
சுமந்து வருகிறோமே என்று மகிழ்ச்சி அடைவதுமில்லை...

கழுதையிடமிருந்துதான் அந்த நல்ல பண்பைக் கற்றுக்
கொண்டேன்” என்றார் அந்த ஞானி..


நன்றி- தமிழ் வளர்ப்போம், முகநூல்

••••••••••••••••••••••••••

வாழ்க்கைக்கான கல்வி

கேள்வி – ஞானிகள் எல்லாம் மீண்டும் பிறவாத நிலையை தேர்ந்தெடுத்து விட்டால் இந்த  எப்படி உலகம் சொர்க்கமாகும்?

ஞானம் பெற்றவர் பற்றிய மிகமுக்கியமான அடிப்படை விஷயங்களில் ஒன்று அவர் தனது அனைத்து தேர்வுகளையும் கைவிடுவதன் மூலமாகவே ஞானத்தை அடைகிறார். அவர் ஒரு தேர்வு இல்லாத விழிப்புணர்வை அடைகிறார். ஞானமடைதலுக்குப் பின் அவர் தேர்வு செய்து செல்லவேண்டிய பாதை எதுவும் இல்லை.

அவர் மீண்டும் பிறக்கக் கூடாது என்பதை தேர்வு செய்யவில்லை. இது எளிய உயிர்வாழும் விதியே. நீங்கள் ஞானமடைந்ததும் உங்களுக்கு உடலும் மனமும் தேவையில்லை.  வாழ்க்கை என்று நாம் அழைப்பதே முழு சிறைக்கூடமாகும். ஞானம் பெற்றவர் இல்லாமைக்குள் போகிறார் என்பதில்லை. அவர் இருக்கும் பொருட்களுக்குள் ஒன்றாகி விடுகிறார்.

-      ஓஷோ


*********************


முகமதுவை அவமதிக்கலாமா?

தன்னை உலகின் நாயகனாக கருதும் அமெரிக்கா மற்றவர்களின் உணர்வை சிறிதும் மதிப்பதில்லை. கருத்துச் சுதந்திரம் என்று பேசும் அமெரிக்கர் அதன் விளைவுகள் பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை. உலக அறிவு, மத அறிவு விஷயத்தில் அமெரிக்கா இன்னமும் சிறுபிள்ளையாகவே இருந்து வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு வெளியான “இஸ்லாமியரின் அறியாமை“ என்ற திரைப்படத்தின் விளம்பர காட்சிகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த திரைப்படத்தை அறிவுள்ள எந்த ஒரு இயக்குனரும் தயாரிப்பாளரும் எடுத்திருக்க முடியாது. (இதை இயக்கிய ஆசாமி சிறையிலிருந்த மத வெறியன் என்று கூறப்படுகிறது.) முகமதுவை இதைவிட கேவலமாக சித்தரிக்க முடியாது என்ற வகையில் சித்தரித்துள்ளனர். அதனால்தான் இஸ்லாமிய உலகம் பற்றி எரிகிறது. அதையே சென்னையிலும் பார்க்கிறோம்.

அமெரிக்கா, இஸ்லாமியருக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர் இடையே காணப்படும் பிரிவினையை பயன்படுத்தும் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இஸ்லாமிய நாடுகளை எடுப்பார் கைப்பிள்ளையாக கையாண்டு அங்குள்ள எண்ணெய் வளத்தை சுரண்டி வருகின்றன. இந்த நிலையில் அந்த படத்திற்கு அமெரிக்கா தடைவிதிக்காததும், யூ டியூப் கேட்டுக்கொண்ட நாடுகளில் மட்டும் தடைவிதிப்பதும் அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.

உலகில் தற்போதுள்ள பெரிய மதங்கள் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டவை. அப்போது உலகில் ஒருபகுதி மற்ற பகுதியுடன் தொடர்பில்லாமல் இருந்தது. மக்கள் தங்கள் சுற்றுச் சூழல், நில வளத்திற்கு ஏற்ப தங்களது பழக்க வழக்கங்களைக் கொண்டு வாழ்ந்து வந்தனர். அப்போது தோன்றிய ஞானிகள் அந்த மக்களுக்கு ஏற்ற நல்ல கருத்துக்களை கூறி கடவுளை அடையும் அவசியத்தை வலியுறுத்தினர்.

விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் உலகம் உள்ளங்கைக்குள் வந்துவிட்டது. உலகின் ஒருபுறம் நடைபெறும் நிகழ்வு அடுத்த சில வினாடிகளில் உலகம் முழுவதும் பரவிவிடுகிறது. உலகின் ஒருபுறம் உள்ள பழக்க வழக்கங்கள் மறுபுறம் வேடிக்கையாவும், ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் உள்ளன. அதற்காக ஒவ்வொரு மதத் தலைவர்களையும் கிண்டல் செய்ய, அவமதிக்க ஆரம்பித்தால் உலகம் தாங்குமா?

கிறிஸ்தவ மதத்தை ஏற்படுத்திய ஏசு கிறிஸ்துவை அவமதிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இவர் தண்ணீரில் நடந்தது மட்டுமல்லாமல் தண்ணீரையே மதுவாக மாற்றியவர். இந்துமத கடவுளான கிருஷ்ணரை இன்னவிதம் என்றில்லாமல் அவமதிக்கலாம். அடுத்தவர் மனைவி என்று கூட பார்க்காமல் 1600 கோபியரை தன் வசப்படுத்தியவர்.

இதனால்தான் சமண மதத்தினர் அவரை நரகத்தில் தள்ளிவிட்டு விட்டனர். அதேபோல சமண மதத்தை உருவாக்கிய மகாவீரர் நிர்வாணமாகவே வாழ்ந்தவர். அவரை அவமதிக்கவும் ஏராளமான காரணங்கள் கிடைக்கலாம். அடிக்காத கூத்தையெல்லாம் அடித்துவிட்டு ஞானம் பெற்றதாக புத்தரையும் அவமதிக்கலாம்.

அப்போது வாழ்ந்த ஞானிகள் தங்களின் அனுபவங்களின் அடிப்படையில்தான் மதக் கருத்துக்களை கூறினர். அவர்களது வாழ்க்கை எல்லாரும் ஏற்றுக்கொள்ளும்படி இருக்காது. அதற்காக இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

கற்றறிந்த மத அறிஞர்கள் மாற்று மதங்களைப் பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதையே தங்கள் மதத்தினருக்கு சொல்ல வேண்டும். ஒவ்வொரு மதத்திலும், ஒவ்வொரு கருத்தும் எந்த நோக்கில் சொல்லப்பட்டுள்ளன. அதனை மாற்று மதத்தவர் எவ்வாறு புரிந்துகொள்வது என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். மதங்களால் எவ்வாறு மனிதம் மேம்படும் என்பதையே சிந்திக்க வேண்டும்.

என் மதம்தான் உயர்ந்தது, என் மதம்தான் சிறந்தது என்று கூறி மதப் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களால் இதுபோன்ற அவமதிப்புக்களைச் செய்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த முடியுமே தவிர, அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.

                                             •••••••••••••••••••••••••••••

    

2 comments:

Chandramohan59 said...

Its a great collection. True wisdom dont distinguish the different religions but sees their harmony
Thanks Mr Perumal Devan.

Dr.R.Chandramohan

சிவாஜி said...

நன்றிகள். :)

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...